தடகள விளையாட்டுகள்
குறிப்பிட்ட அளவு உயரங்களில் கிடை நிலையில் வைக்கப்பட்ட கம்பம் (Bar) ஒன்றைத் தாண்டுவதே உயரம் தாண்டுதல் விளையாட்டு ஆகும்.
உயரக் கம்பங்கள்
உறுதியாக நிற்கும் இரு கம்பங்களுக்கு இடையில் வைக்கப்படும் குறுக்குக் கம்பத்தைத் தாங்கும் தாங்கிகள் (Supports) சரியாக அமைக்கப்பட வேண்டும்.
குறுக்குக் கம்பம் (Cross Bar)
மரத்தால் அல்லது உலோகத்தால் அல்லது அவற்றுக்கு இணையான பொருள்களால் அமைந்த குறுக்குக் கம்பம் உருண்டை அல்லது முக்கோண வடிவத்தில் இருக்கலாம். முக்கோண வடிவத்தின் ஓரம் மழுங்கிய சுற்று வடிவுடன் முடிவது நல்லது.
உருண்டை வடிவக் குறுக்குக் கம்பத்தின் கடைசி இருபுறங்களும் உயரக் கம்பங்களில் உள்ள தாங்கிகளில் உட்காருவதுபோல் அமைக்கப்பட வேண்டும். உயரம் தாண்டுபவர் குறுக்குக் கம்பத்தைத் தொட நேரும்போது முன்புறமாகவோ அல்லது பின்புறமாகவோ கீழே கம்பம் எளிதாக விழுந்துவிடுவது போன்ற அமைப்பில் வைக்கப்பட வேண்டும்.
விதிமுறைகள்
குறைந்த அளவு உயரத்தில் வைக்கப்படும் குறுக்குக் கம்பம் சிறிது சிறிதாக உயர்த்தப்படும். எந்த உயரத்தில் தொடங்குவது என்பதைப் போட்டியாளரே முடிவு செய்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தாண்ட ஒவ்வொரு போட்டியாளருக்கும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். குறிப்பிட்டதொரு உயரத்தில் மூன்று வாய்ப்புகளிலும் தோல்வியடையும் போட்டியாளர் போட்டியிலிருந்து விலக்கப்படுவர். அதிக உயரம் தாண்டும் போட்டியாளர் வெற்றி பெற்றவராவார்.
ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர் ஒரே அளவு உயரத்தைத் தாண்டியிருந்தால், குறைந்த அளவு வாய்ப்பினைப் பயன்படுத்தியவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர். எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஒரு காரணம் உண்டு.
மனிதனின் தேவைக்கேற்ற உடல்திறனை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாகவும், போட்டி மனப்பான்மையில் கூடுதல் திறன் பெறலாம் என்பதற்காகவுமே பல விளையாட்டுகள் தோன்றியுள்ளன. அவ்வகையில், உயரம் தாண்டுதல் எதற்காக உருவாக்கப்-பட்டிருக்கும்? ஒரு வரியோ, ஒரு பக்கமோ… அளவு பிரச்சினையில்லை. எளிமையான, சரியான விளக்கம் தரும் பிஞ்சுக்குப் பரிசு உண்டு.
அனுப்ப வேண்டிய முகவரி:
உயரம் தாண்டுதல் போட்டி ஏன்?
பெரியார் பிஞ்சு,
84/1 (50), பெரியார் திடல், வேப்பேரி,
சென்னை – 7