தூது செல்லும் ‘மின்னணுப் புறா’
இலக்கியங்களில், கதைகளில், திரைப்படங்களில் ஓர் இடத்திலிருந்து செய்திகளை இன்னொரு இடத்திற்கு புறாக்களின் கால்களில் கட்டி அனுப்பியதாக படித்திருப்பீர்கள் _ பார்த்திருப்பீர்கள். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, பயோனிக் பேர்டு என்று அழைக்கப்படும் மின்னணுப் (எலக்ட்ரானிக்) புறாக்கள் தூது அனுப்பப் பயன்படுத்தப்பட உள்ளன.
நமது அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ள செல்பேசி மூலமாக இயங்கக் கூடியது மின்னணுப் புறா. பிரான்ஸ் நாட்டின் இண்டியாகோ நிறுவனத்தால் இந்த மின்னணுப் புறா தயாரிக்கப்பட்டுள்ளது. புளு டூத் மூலம் இதனைத் தொடர்பு கொள்ளவும், ஸ்மார்ட் போன்களின் வழியாக இதனைக் கட்டுப்படுத்தி இயக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
எளிதில் பாதிக்கப்படாத பாலிமர் உறையினால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, வானில் பறக்கும் பறவைகளின் தாக்குதலால் இதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை, பிற பறவைகள் இதனைத் தாக்க வருவதாக உணர்ந்தால் உடனே முழு வேகத்துடன் பறந்து வந்துவிடுமாம். நடக்கும் நிகழ்வுகளை பேக்_அப் வீடியோவாக செல்பேசியில் சேகரிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
கைகளில் எடுத்துச் செல்லும் அளவில் குறைந்த எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பறவை 1.8 கிலோமீட்டர் தூரம் வரை சென்று திரும்பக்கூடியது. பறக்கும்போது வினாடிக்கு 18 முறை சிறகுகளை அடித்துக் கொள்ளும் இந்தப் பறவையானது, தொடர்ந்து 8 நிமிடங்களுக்கு முழு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
சிறப்பு (அப்ளிகேசன்) ஸ்மார்ட்-போன்களில் இணைத்துக் கொண்டால், ஆக்சலோமீட்டர் மற்றும் மேக்னடோமீட்டர் இயக்கத்தின் மூலம் மின்னணுப் பறவையைப் பறக்க வைக்கலாம். 100 அடி தூரத்திற்குள் இருக்கும்போது புளுடூத் வழியாக இதனைத் தொடர்பு கொள்ளலாம். வால் இதன் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் உதவியாக உள்ளது. பறந்து கொண்டிருக்கும் பறவையானது திரும்பி வந்து அமர சிறிய மேடை உள்ளது.
டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் மின்னணுப் பறவையானது விற்பனைக்கு வர உள்ளது. 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பிற நாடுகளிலும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.