புறப்பட்டான் புதிய சிந்துபாத்
கலை அறப் பேரவை கலைவாணன் பொம்மலாட்டக் குழுவின் 40-ஆம் ஆண்டுவிழாவும், புதிய 5.1 டிடிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சிந்துபாத் பொம்மலாட்ட அரங்கேற்றமும் சென்னையில் 23.11.2014 அன்று நடைபெற்றது.
குழந்தைகள் உரிமைக் காகப் போராடும் சிந்துபாத்தும் அவன் நண்பர்களும் செய்யும் முயற்சிகளும், அவர்களுக்கு ஊக்கம் தரும் உலக நாயகன் தாத்தாவும் என கலகலப்பாகச் செல்லும் பொம்மலாட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
புதிய புதிய உத்திகளைப் புகுத்தி தமிழர்களின் கலையை அழியாமல் காத்துவரும் கலைவாணன் அவர்களை நாமும் ஊக்கப்படுத்த வேண்டும் அல்லவா! பிஞ்சுகளின் கைதட்டல் தானே அவருக்கு பெரும் ஊக்கம்!
திருப்புமுனைப் பரிசு
உலகிலேயே உயர்ந்த பரிசாக இதுவரை நோபல் பரிசு கருதப்பட்டு வந்தது. மிகவும் கவுரவம் வாய்ந்தது மட்டுமல்ல, விலை உயர்ந்த பரிசும்கூட என்பதை சென்ற இதழில் படித்திருப்பீர்கள்.
நோபல் பரிசைவிட விலை உயர்ந்த பரிசு ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. திருப்புமுனைப் பரிசு என்று பெயரிடப்-பட்டுள்ளது. இந்தத் திருப்புமுனைப் பரிசினை ரஷ்யாவைச் சேர்ந்த யூரி மில்னர், முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மற்றும் சில தொழில்-துறையைச் சேர்ந்தவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
அறிவியல், கணிதம் உள்ளிட்ட துறைகளில் சாதனை செய்பவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசினை வெல்பருக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படும். (இந்திய ரூபாயில் 18,51,90,000/-) இது நோபல் பரிசைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.