ஆங்கிலேயர்கள் வியந்த ஆங்கிலப் புலமை
சட்ட மேதை என அனைவராலும் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் ஆங்கில மொழியில் அதீதப் புலமை பெற்றிருந்தார். கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், உடன் பயின்ற உயர் ஜாதி மாணவர்கள் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட – புறந்தள்ளப்பட்ட அம்பேத்கரின் ஆங்கில அறிவு வளர அவரது தந்தை இராம்சியின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்த இராம்சி அம்பேத்கருக்கும் சொல்லிக் கொடுத்து அறிவை வளர்த்தார். தந்தையிடம் பெற்ற பயிற்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் எழுதுவதிலும், மொழிபெயர்ப்பதிலும் வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். ஆங்கிலத்தில் பேசுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
படிப்பின்மீது மகனுக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்த தந்தை, புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அறிவாற்றலுக்குத் துணை நின்றார். தன் பெண்களிடம் கடன் வாங்கியோ அல்லது அவர்களது நகைகளை அடமானம் வைத்தோ புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். தான் படிப்பதற்குத் தந்தை செய்த தியாகங்களைப் பார்த்த அம்பேத்கர் தந்தையின் நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் நூலறிவினை வளர்த்தார்.
* * *
பின்னாளில் மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியவர்களுள் பரோடா அரசின் மன்னரும் ஒருவர் ஆவார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். எனவே, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர் யாராவது கல்லூரியில் படிக்க முன்வந்தால் பொருளுதவி செய்வதாக கூட்டத்தில் பேசும்போது கூறினார்.
இதனைக் கேட்ட அம்பேத்கரின் நண்பர் கிருட்டினாசி பரோடா மன்னருக்கு அவர் பேசியதை நினைவுப்படுத்தி ஒரு கடிதம் எழுதினார். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த அம்பேத்கர், பரோடா மன்னரின் உதவியைப் பெற முழுவதும் தகுதி வாய்ந்தவர் என்பதையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தைப் படித்த மன்னர் அம்பேத்கருக்கு அழைப்பு விடுத்தார். மன்னர் கேட்ட கேள்விகளுக்குச் சிறந்த முறையில் பதில் அளித்தார் அம்பேத்கர். மாதம் ஒன்றுக்கு இருபத்தைந்து ரூபாய் உதவித்தொகை வழங்கும்படி ஆணையிட்டார். அம்பேத்கர் படித்துத் தேர்ச்சி பெற்றார்.
1930ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பு அம்பேத்கருக்குக் கிடைத்தது. அம்பேத்கரின் ஆங்கிலப் புலமை அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்த பிரிட்டானியப் பேரரசின் தலைமையமைச்சர் இராம்சே மாக்டொனால்டு அம்பேத்கரைப் பாராட்டியுள்ளார். இலண்டன் வட்டமேசை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளிலேயே அம்பேத்கருடைய பேச்சு மிகவும் அருமையானது என்று இண்டியன் டெய்லி மெயில் என்ற நாளிதழ் பாராட்டியுள்ளது.
புரவலர் வியந்த புலமை!
முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுள் அம்பேத்கரின் படிப்புக்கு உதவி செய்த பரோடா மன்னர் சாயாசிராவும் ஒருவர். அம்பேத்கரின் பேச்சைக் கேட்ட மன்னர் மகிழ்ந்தார். தம்முடைய உதவியால் படித்தவர் தலைசிறந்த பேச்சாளராக இருப்பதைக் கண்டு பெருமிதம் அடைந்தார். தகுதி வாய்ந்த ஒருவருக்குத் தாம் உதவி செய்ததை நினைத்துப் பெருமை அடைந்ததுடன், அம்பேத்கருக்கு விருந்து வைத்துப் பாராட்டினார்.