சரியான பாதை
– மு.கலைவாணன்
அடர்ந்த பெரிய காடு. அக்காட்டில், பல மிருகங்கள் இருந்தன. எனவே, அச்சப்பட்டு யாரும் காட்டுக்குள் செல்வதில்லை.
அதனால் காடு அழியாமல் செழிப்பாக இருந்தது. அதைச் சார்ந்து வளமான ஊர்களும் இருந்தன.
காட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு குடிசை.
அதில் வசித்த மாடசாமியிடம் இரண்டு பன்றிகள் இருந்தன. அவை போடும் குட்டிகளை விற்று, அவன் தன் வாழ்க்கையை நடத்தி வந்தான்.
அவற்றை வளர்ப்பதில், அவன் தனிக்கவனம் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை.
பன்றிகள் ஊரைச் சுற்றித் திரிந்து, மனிதக் கழிவுகளை உண்டு தாமாகவே வளர்ந்துவிடும்.
சரியான பருவம் வந்ததும், குட்டிகளை நல்ல விலைக்கு விற்றுவிடுவது மாடசாமியின் வழக்கம்.
ஒருமுறை தாய்ப்பன்றி வழக்கம்போல் பல குட்டிகளை ஈன்றது. அவை உர்… உர் என்று உறுமியபடி ஊரைச் சுற்றித் திரிந்தன.
குட்டிகளும் கிடுகிடுவென வளர்ந்தன. விற்பனைக்கு ஏற்ற வகையில் இருந்தன. ஆதலால், பன்றிகளை விற்றுவிடத் திட்டமிட்டான் மாடசாமி.
குடிசையின் பின்புறம் படுத்திருந்த ஒரு பன்றிக்குட்டியைப் பிடிக்க, மாடசாமி பதுங்கிப் பதுங்கி மெதுவாகச் சென்றான். அவன் மனைவி மாரியும் அவனுக்கு உதவ வந்தாள்.
என்னதான் ரகசியமாகப் பதுங்கி வந்தாலும் எப்படியோ கவனித்து விட்ட குட்டிப்பன்றி, சட்டென எழுந்து ஓடியது.
விடாமல் விரட்டிக்கொண்டே ஓடினான் மாடசாமி. அவன் மனைவி மாரியும் பின்னாலேயே ஓடிவந்தாள்.
தனக்குத் தெரிந்த நாலு தெருவுக்குள் நுழைந்து ஓடிய பன்றி, ஊரைவிட்டுக் காட்டுக்குள் ஓடத் தொடங்கியது.
பன்றியின் பின்னாலேயே ஓடி ஓடிக் களைத்த மாடசாமி சோர்ந்து போனான். மனைவி மாரியிடம், இரவு எப்படியும் தானே வீட்டுக்கு வரும், அப்பப் பிடிச்சுக்கலாம், வா! என்று சமாதானம் சொன்னான்.
காட்டுக்குள் செல்ல அஞ்சி இருவரும் வீட்டுக்குத் திரும்பினர்.
காட்டுக்குள் ஓடிய குட்டிப் பன்றியோ வழி தெரியாமல் அலைய நேர்ந்தது. எந்தப் பக்கம் பார்த்தாலும் அடர்ந்த பசுமையான செடிகளும், மரங்களும் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன.
அந்த நேரத்தில் உர்… உர்… என உறுமல் ஓசை!
குட்டிப் பன்றி, ஓசை வந்த திசையில் திரும்பிப் பார்த்தது.
ஆகா, என்ன ஆச்சரியம்! தன்னைப் போலவே ஒரு பெரிய பன்றி சற்று தூரத்தில் நிற்பது தெரிந்தது!
உடனே, குட்டிப்பன்றி விறுவிறுவென அதன் அருகில் ஓடியது.
காட்டுப்பன்றி ஊருக்குள்ளிருந்து ஓடி வந்த குட்டிப் பன்றியைப் பார்த்ததுமே, ஏய்! அப்படியே நில்… நீ யார்? எங்கே இருந்து வந்தாய்? என மிரட்டலுடன் கேட்டது.
குட்டிப்பன்றிக்கு ஒன்றும் புரியவில்லை. மாபெரும் வீரனிடம் மாட்டிய கோழை போல் பயந்து நடுங்கியது.
பிறகு, நான் பக்கத்து ஊரிலிருந்து வழி தெரியாமல் வந்துவிட்டேன். உருவத்தில் என்னைப் போலவே இருக்கும் நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும்! என்று கெஞ்சியது.
ஊர்ப் பன்றியா?… சீ… உடனே இந்தக் காட்டை விட்டு ஓடிப் போய்விடு! இல்லை என்றால் உன்னைக் கொன்று விடுவேன், ஓடிப்போ! உறுமியது காட்டுப் பன்றி.
குட்டிப்பன்றி பரிதாபமாய்ப் பார்த்தது.
நான் வழி தெரியாமல் வந்துவிட்டேன். எனக்கு உதவக் கூடாதா?… நீண்ட நேரம் சுற்றியதால் பசிக்கிறது… இங்கே சாப்பிட எதுவுமே இல்லையே!… என்ன செய்ய…? என்று இரக்கம் கனியக் கேட்டது.
குட்டிப் பன்றியை ஏளனமாய்ப் பார்த்தது காட்டுப் பன்றி: அட மடப் பன்றியே! இந்தக் காட்டிலா உண்பதற்கு எதுவுமில்லை என்கிறாய்?
ஆமாம், மரம் செடி கொடி தவிர இங்கே என்ன இருக்கிறது?
மனிதனோடு இணைந்து ஊருக்குள் சென்றதால் உன் நிலையே மாறிவிட்டது. இந்தக் காட்டில் எங்கே தோண்டினாலும் கிழங்குகள் கிடைக்கும்! அதைச் சாப்பிட்டுத்தான் நான் இப்படி வாட்டசாட்டமாக இருக்கிறேன்! நீயோ, மனிதனின் கழிவுகளை மட்டும் சாப்பிட்டுப் பழகியதால் உணவைத் தேடித் தோண்டி உண்ணும் இயல்பைக் கூட இழந்து நிற்கிறாய்!.. உன் நிலையைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன்! கோபப்படுகிறேன்! என முழங்கியது காட்டுப் பன்றி.
நாட்டுப் பன்றிக்குட்டிக்குப் பேச நா எழவில்லை.
எனக்குப் பசிக்கும் போதெல்லாம் நிலத்தைத் தோண்டி கிழங்கை உண்பதால், என் உணவில் எந்தக் கலப்படமும் இல்லை. ஆனால் உனக்குப் பசி வந்தால் மனிதனின் பின்னால் ஓட வேண்டும்… சீ… நினைத்தாலே அருவருப்பாய் இருக்கிறது. அது உனக்குப் பழகிவிட்டது.
காட்டுக்குள் இருக்கும் என் நிலை வேறு… ஊருக்குள் இருக்கும் உன் நிலை வேறு… ஆகையால் எந்த நாளும் நீ என் இனமாக முடியாது. எப்போது நீ உன் நிலையை உணர்ந்து பழக்கத்தை மாற்றிக் கொள்கிறாயோ, அப்போதுதான் உன் இழிநிலை மாறும். அதோ தெரிகிறதே பனைமரம். அந்த வழியாக ஊருக்குள் போகும் பாதை இருக்கிறது… ஓடிப் போய்விடு! என்றது காட்டுப்பன்றி.
என் இழிநிலை புரிகிறது. நான் இங்கேயே இருந்து விடுகிறேன்! பூமியைத் தோண்டி உன்போல் உழைத்து உணவு தேடிக் கொள்கிறேன்! தயவு செய்து என்னை விரட்டிவிடாதே! என்று மன்றாடியது குட்டிப் பன்றி.
காட்டுப் பன்றிக்குக் கொஞ்சம் கனிவு ஏற்பட்டது. என்றாலும், ஆறறிவு படைத்த மனிதனோடு இருக்கும் உன் இனத்துக்கு -_ மரியாதை இழந்து, மானம் இழந்து வாழ்வது வாழ்க்கை இல்லை என்பதை எடுத்துச் சொல்ல நீ ஊருக்குள் போகத்தான் வேண்டும்! என்று கட்டளையிடுவதுபோல் பேசியது.
அதை உணர்ந்த குட்டிப் பன்றி, காட்டுப் பன்றி காட்டிய வழியில் நடந்தது.