ஆரோக்கிய உணவு
மாதுளம் பழம்
இமயமலை மற்றும் எகிப்து இடையேயான பிராந்தியப் பகுதியே மாதுளம் பழத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்தியா, பெர்சியா, மெசபடோமியா, துருக்கி மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் பண்டைக் காலத்திலிருந்து பயிரிடப்பட்டுள்ளது.
பண்டைய பாபிலோனிய நூல்கள் மற்றும் யாத்திராகமப் புத்தகத்தில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கலிபோர்னியாவின் ஸ்பானிஷ் குடியேற்ற மக்களால் 1769ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குறிப்பு காணப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் புனிகா க்ரேனடம் (Punica Granatum) என்பதாகும். Plantae வகையினுள் Lythraceae குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.
மாதுளை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளில் கிடைக்கிறது. இனிப்புச் சுவையினையுடைய மாதுளை இதயத்திற்கும் மூளைக்கும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இருமலைக் குணப்படுத்தும். புளிப்புச் சுவையினையுடையது வயிற்றுக் கடுப்பினை நீக்கும்.
100 கிராம் மாதுளையில், 83 கலோரி ஆற்றலும், 18.7 கிராம் கார்போஹைட்ரேட்டும், 13.67 கிராம் சர்க்கரையும், 4 கிராம் நார்ச்சத்தும், 1.17 கிராம் கொழுப்பும், 1.67 கிராம் புரோட்டினும் உள்ளன. மேலும் வைட்டமின் B1, B2, B3, B5, B6, B9, கொலைன், வைட்டமின் சி, ஈ, கே, கால்சியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றன சிறிதளவும் அடங்கி உள்ளன.
உடலுக்குத் தீமை தரும் வைரஸ் கிருமிகளை அழித்துவிடும் ஆற்றல் மாதுளைக்கு உள்ளது. நோயின் பாதிப்பில் உடல் நலிந்து சோர்வடைந்தவர் தினமும் சாப்பிட வலிமை பெறலாம். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கும் அதிக வலிமை தரவல்லது.
மாதுளம் பழச் சாற்றினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய் கட்டுப்படும், இதய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது என இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆன்டிஆக்சிடன் அதிகம் உள்ளது. இது அடர்த்தி குறைந்த லிப்போப்ரொட்டீன் என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பினை தமனிகளின் சுவர்களில் படிவதைத் தடுக்கிறது.
அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிடு-பவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக் குறைவு என அமெரிக்கப் புற்று நோய் ஆராய்ச்சி சங்கத்தின் கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச் பத்திரிகை தெரிவித்துள்ளது.