நீல எருது(NILGAI)
நீல எருது மத்திய மற்றும் வட இந்தியா, தெற்கு நேபாளம், கிழக்கு பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் காணப்படும் மான் இனத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். நன்கு வளர்ச்சி அடைந்த ஆண் எருது போன்ற தோற்றத்தினைக் கொண்டிருப்பதால் நீல எருது (blue bull) எனப்படுகிறது. முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் காலத்தில் நீலக் குதிரை (Nilghor) என அழைக்கப்பட்டுள்ளது.
நீல எருது சுமார் 130 முதல் 150 செ.மீ. உயரமும் நீலப் பசு 100 முதல் 130 செ.மீ. உயரமும் இருக்கும். 45-50 செ.மீ. நீளமுடைய வாலும் நீல எருதிற்கு 15 முதல் 24 செ.மீ. நீளம் உடைய கொம்பும் உண்டு. பிறந்து பத்து மாதங்களுக்குப் பின் ஆண் இனத்தின் உடலின் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து நீல நிறத்திற்கும், கால்கள் கருப்பு நிறத்திற்கும் மாறும். இவை பெரும்-பாலும் விளைநிலங்கள் நிறைந்த பகுதிகளிலேயே வாழ்கின்றன. எனினும் மக்களைச் சார்ந்து வாழ்வதில்லை.
இரண்டு முதல் பத்து உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களாக வாழும் இயல்-புடையன. எனினும், நான்கு அல்லது அய்ந்து சேர்ந்த குழுக்களே பெரும்பாலும் காணப்படுகின்றன. எனினும் இடத்திற்கு இடம் எண்ணிக்கை வேறுபடுகிறது.
திறந்தவெளிக் காடுகள் மற்றும் புதர்க்காடுகளில் வசிக்கும் இவை பகல் நேரத்தில் உற்சாகமாக தனக்குத் தேவையான இரையினைத் தேடிக் கொள்கின்றன. இவை எழுப்பும் ஒலி 500 மீட்டர் தூரம்வரை கேட்கும். அபாயத்தை உணர்த்தவும், ஆண் பெண் சண்டையின் போதும் ஒலி எழுப்புவதுடன், சில நேரங்களில் மென்மையான ஒலிப் பரிமாற்றங்களும் நிகழ்த்தக்கூடியன.
இலைகள், மலரின் மொட்டுகள், புல், பழங்களை உணவாக உட்கொள்ளக் கூடியன. 109 முதல் 288 கிலோ எடை வரை இருக்கும். இவற்றின் வாழ்நாள் பன்னிரெண்டிலிருந்து பதினைந்து ஆண்டுகள் ஆகும். எனினும் சில இருபத்தொரு ஆண்டுகள் வரை வாழக்கூடியன.
சிங்கம், புலி, சிறுத்தை, செந்நாய் போன்றவற்றால் ஆபத்தை எதிர்கொள்கின்றன. மேலும், விவசாய நிலங்களுக்கு வருவதால் மனிதரால் விரட்டப்படுதல், வேட்டையாடப்படுதல் மற்றும் விளைநில மின்சார வேலிகளில் சிக்கியும் உயிர் இழக்கின்றன.