மிதக்கும் நகரம்
படகு, கட்டுமரம், கப்பல் கடலில் மிதந்து செல்வதைப் பார்த்திருக்கிறோம். இனி, ஒரு நகரமே கப்பலுக்குள் உருவாகி கடலுக்குள் உலா வர உள்ளது. சுமார் ஒரு மைல் நீளமுள்ள பிரீடம் ஷிப் உருவாக உள்ளது. இதில் கப்பலில் மிதந்து கொண்டே உலகைச் சுற்றி வரலாம் 50 ஆயிரம் பேர்வரை. இவ்வளவு பேர் எப்படி.. என்ற கேள்வி எழுகிறதா?
கப்பலில் அமைய உள்ள குடியிருப்புப் பிரிவுகளில் 50 ஆயிரம் பேர் வசிக்க முடியுமாம். இங்கு வசிக்கும் மக்கள் நிரந்தரமாகத் தங்கியபடி உலகை வலம் வரலாம்.
கப்பல் தளத்தின் உச்சியில் சிறிய வகை விமானங்கள் இறங்கி ஏறும் ஓடுபாதைகளும், விமானங்களை நிறுத்துவதற்கான இடங்களும் அமைக்கப்பட உள்ளன. மிகப் பெரிய வணிக வளாகம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் தொலைக்காட்சி, இணைய வசதி போன்ற சிறப்பம்சங்களுடன் பிரீடம் ஷிப் அமைக்கப்பட உள்ளது.
கப்பலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் கடல் பாதிக்கப்படாமல் இருக்க கழிவுகள் மறுசுழற்சி செய்தோ அல்லது எரிக்கப்பட்டோ அழிக்கப்பட உள்ளன.
சாதாரண மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இந்தக் கப்பலைக் கட்டி முடிக்க 62,495 கோடி ரூபாய் (10 பில்லியன் டாலர்) செலவிடப்பட உள்ளதாம்.