தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டு சடுகு(கபாடி)
தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டில் சடுகுடு முதன்மையான ஒன்று. இது பலிஞ்சடுகுடு, கபாடி போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பன்னெடுங்காலமாக தமிழர்களால் விளையாடப்-படும் இவ்விளையாட்டு எப்போது தோன்றியது எனக் கூறமுடியவில்லை. எனினும் மராட்டிய மன்னர் சிவாஜியின் ஆட்சிக் காலத்திலேயே அப்பகுதியில் கபாடி விளையாடப்பட்ட சான்றுகள் பல உள்ளன.
தமிழ்நாட்டில் சடுகுடு என்றும், ஆந்திராவில் பலிச்ச பாலம் எனவும் வடமாநிலத்தில் டூ டூ டூ (Tu-Tu-Tu) என்ற பெயரிலும் விளையாடப்பட்டு வருகிறது.
1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உலக நாடுகள் முன்னிலையில் காட்சி ஆட்டமாக விளையாடியதை பன்னாட்டு மக்கள் ரசித்து மகிழ்ந்துள்ளனர். 1938ஆம் ஆண்டு இந்திய விளையாட்டுக் கழகம் தேசிய விளையாட்டுகளுள் ஒன்றாக கபாடியை அங்கீகரித்தது.
முதல் உலகக் கோப்பை கபாடிப் போட்டி 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. பின்னர், 2007, 2010 மற்றும் 2013ஆம் ஆண்டுகளிலும் நடைபெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற நான்கு உலகக் கோப்பைக் கபாடிப் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான உலகக் கோப்பை கபாடிப் போட்டி 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2012, 2013ஆம் ஆண்டுக்கான போட்டிகளில் இந்தியப் பெண்கள் அணியினரே வெற்றி பெற்றுள்ளனர்.
13 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்ட இடத்தை அமைத்து இரண்டு சம பகுதியாகப் பிரித்து (மிட்லைன்) நடுக்கோடு போட வேண்டும். நடுக்கோட்டிலிருந்து 3.25 மீட்டர் தூரத்தில் கோடு போட வேண்டும். அதுதான் எதிரணியிலிருந்து வருபவர் தொடவேண்டிய கோடு ஆகும். ஒவ்வொரு அணியிலும் 12 பேர் இடம் பெறுவர். எனினும் குறைவாக இருப்பினும் தவறில்லை. ஒவ்வொரு குழுவும் 20 நிமிடங்கள் விளையாடுவர்.
எந்த அணி முதலில் விளையாடுவது என்பதை பூவா தலையா (டாஸ்) போட்டு முடிவெடுப்பர்.
கபடி கபடி என்றோ சடுகுடு சடுகுடு என்றோ பாடிச் சென்று, எதிரணியில் இருப்பவர்களுள் யாரையாவது தொட்டுவிட்டு அவர்களது பிடியினுள் அகப்படாமல், தொடும் எல்லைக் கோட்டைத் தொட்டுவிட்டால் பாடிச் சென்றவர் அணிக்கு ஒரு மதிப்பெண் கொடுக்கப்படும். பாடிச் சென்றவர் எதிரணியில் யாரைத் தொட்டாரோ அவர் வெளியில் சென்றுவிடுவார்.
எதிரணியிலிருந்து கபடி கபடி என்று பாடி வருபவரைப் பிடித்து, தொட வேண்டிய கோட்டினைத் தொடவிடாமல் செய்ய வேண்டும். அவர் தம் பிடிக்க முடியாமல் பாட்டை நிறுத்திவிட்டால் பாடி வந்தவர் அவுட் ஆகிவிடுவார். மீண்டும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
பாடிச் செல்பவர் எதிர்அணியில் உள்ள தொடும் கோட்டை ஒரு தடவையாவது கடந்து ஊடுருவி விட்டுத் திரும்ப வேண்டும். தொடும் கோட்டை அடையும் முன்பே யாரையாவது தொட்டுவிட்டால் உடனே தங்கள் பகுதிக்குத் திரும்பிவிடலாம்.
பாடி வருபவர்களின் கை, கால், இடுப்பினைத் தவிர வேறு எந்தப் பாகத்தையும் பிடிக்கக் கூடாது. மீறிப் பிடித்தால் பிடித்தவர் வெளியேற்றப்படுவார்.(ஃபௌல்)
பாடி வருபவரின் வாயைப் பொத்துதல், காயம் ஏற்படும் வகையில் முரட்டுத்தனமாகப் பிடித்து இழுத்தல், வெளியே பிடித்துத் தள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. எதிர்பாராத வகையில் யாருக்காவது பலத்த காயம் ஏற்பட்டால் அவருக்குப் பதில் வேறு ஒருவரை (Substitute) ஆடச் சொல்லலாம்.
விளையாடும் அரங்கின் இரு முனைகளிலும் உள்ள அடிக்கோட்டிற்கு அடுத்து 2 மீட்டர் தூரத்தில் விளையாடும் வீரர்கள் உட்கார இடம் (Sitting Block) அமைத்துக் கொள்ளலாம். பெண்கள் விளையாடும்போது 11 மீட்டர் நீளம் 8 மீட்டர் அகலத்தில் அரங்கம் அமைக்க வேண்டும்.
பொங்கல் விழாக் காலங்களில் மட்டுமல்லாது விடுமுறைக் காலத்தில் விளையாட ஏற்ற ஒன்று. உடலுறுதியையும் உள்ள உறுதியையும் தரக் கூடியது. பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து போட்டிகள் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
சடுகுடுவில் பாடப்படும் பழம் பாடல்களில் சில….
நாந்தான் வீரன்டா
நல்லமுத்துப் பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.
கீத்து கீத்துடா
கீரைத் தண்டுடா
நட்டு வச்சன்டா
பட்டுப் போச்சுடா
போச்சுடா போச்சுடா…..