விண்ணில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டி
– ஹூவாமை
பள்ளிக்கூடத்தில் கயிறு இழுக்கிற போட்டியைப் பார்த்திருக்கீங்களா? அதான், இந்தப் பக்கம் பத்துப் பேரு; அந்தப் பக்கம் பத்துப் பேரா நின்னுக்கிட்டு இழுப்பாங்களே! ம்.. அதேதான். எந்தப் பக்கம் பலமா இழுக்கறாங்களோ அவங்களுக்குத்தான் வெற்றி.
ஆமா, அதுக்கென்ன இப்பங்கறீங்களா? மத்த விளையாட்டு எப்படியோ என்னமோ தெரியல. இந்தக் கயிறு இழுக்கிற போட்டியை நினைக்கும்போது எனக்கு பூமியும் நிலவும் நினைவுக்கு வருது. உங்களுக்கு? சம்பந்தமே இல்லாம பூமியையும் நிலாவையும் நினைக்கிற ஹுவாமைதான் நினைவுக்கு வர்றீங்கன்னு சொல்றீங்களா?
சரி சரி. நானே சொல்லிடறேன். குட்டி, சுட்டி, கெட்டி, மட்டி, சுனாமி… இருங்க இருங்க அவசரப்பட்டா எப்படி? இதெல்லாம் கடல் அலைகளுக்கு நான் வச்ச பேரு. சுனாமியைத் தவிர மற்றது என்ன? எப்படி? ஏன்?-ன்னு நீங்களே உங்க கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் தட்டி விடுங்க. சொல்ல வந்ததைச் சொல்லிடறேன். இந்த அலைகளையும் தாண்டி பௌர்ணமி அலைகள்_ன்னு ஒன்னு அப்பப்போ நம்ம காதுல விழும். இல்லையா? சரி, அதென்ன பௌர்ணமி அலை?
ம்… இங்கதான் நிலவும் பூமியும் கயிறு இழுக்கிற போட்டியும் வருது. எப்படின்னா? பௌர்ணமி அன்றைக்கு நிலவோட ஈர்ப்பு விசை அதிகரிக்குதாம், இது தரையிலும் இருக்கும். ஆனா, திடப்பகுதியில நம்ம கண்ணுக்கு அவ்வளவு எளிதா புலப்படாது.
ஆனால், திரவப் பகுதியான கடல் நீரை நிலவோட ஈர்ப்பு விசை இழுக்க, நீரும் மேலெழும்புகிறது. ஆனால், நிலவைவிட பூமியோட ஈர்ப்பு விசை அதிகமாச்சே! அதனால, மேலே எழுகிற கடல்நீரை உடனே கீழே இழுத்துவிடுமாம் பூமி. இதனால், பௌர்ணமி அன்றைக்கு, கடல் அலைகள் அதிக உயரத்துக்கு எழும், விழும். இதைத்தான் பௌர்ணமி அலைகள்_ன்னு சொல்றாங்க.
நிலவு ஒரு பக்கம் இழுக்கிறது. பூமியும் ஒரு பக்கம் இழுக்கிறது. இடையில ஈர்ப்பு சக்திதான் கயிறா? அதுசரி, அப்ப இந்தப் போட்டியில வெற்றி யாருக்கு?
இதென்ன விடிய விடிய அரசியல் வரலாறு கேட்டுட்டு, மோடிக்கும் மோசடிக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டுட்டீங்களே? வேற யாருக்கு, பூமிக்குத்தான் வெற்றி!
அடே… யப்பா… எவ்வளவு பெரிய கயிறு இழுக்கிற போட்டி!!