ஆரோக்கிய உணவு – ஆப்பிள் பழம்
ஆப்பிள் குளிர்ப் பிரதேசங்களில் விளையக்கூடிய பழமாகும். மத்திய ஆசியாவில் முதலில் பயிரிடப்பட்டு, பின்னர் உலகின் அனைத்துக் குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆப்பிளின் தமிழ்ப் பெயர் அரத்திப் பழம் என்பதாகும்.
தினம் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியதில்லை (An Apple a day keeps the doctor away) என்பது ஆங்கிலப் பழமொழி. குறைந்த அளவு கலோரியினையுடைய ஆப்பிளில் நீர்ச்சத்து, சர்க்கரைச் சத்து, மாவுச் சத்து, நார்ச் சத்து, புரதம், சுண்ணாம்பு, சோடியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, சி, அர்சோலிக் அமிலம், லைசீன், ஹிஸ்டிடின், சிஸ்டின், டைரோசின், மாலிக் அமிலம், ஆல்புமென் போன்ற அமிலங்கள் உள்ளன.
உடல் நலத்திற்குத் தேவையான வைட்டமின்கள், உடம்பின் செயல்களை ஊக்குவிக்கும் தாதுப் பொருள்கள், உடலின் உள்ளுறுப்புகளும், சுரப்பிகளும் செயல்பட உதவும் நுண்ணூட்ட சத்துகள், ஹார்மோன் மற்றும் பல்வேறு அமிலங்களைச் சரியாகச் சுரக்க வைக்க உதவும் அமிலங்களையும் தன்னகத்தே கொண்ட ஆப்பிள் பழத்தை நன்கு கழுவிவிட்டுத் தோலுடன் சாப்பிட வேண்டும். தோலுக்கு அடியில் உள்ள அர்சோலிக் அமிலம் தசைகளுக்கு உறுதியளிக்கக் கூடியது.
நன்கு மென்று சாப்பிடும்போது வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள நுண்கிருமிகள் அழிகின்றன. அல்செய்மெர்ஸ், பார்கின்சன்ஸ் போன்ற வேதிப் பொருள்கள் மூளையைப் பாதுகாக்கின்றன.
ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட ரத்த அணுக்கள் பெருகி ரத்த சோகை நோய் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்ப் பாதிப்பைத் தடுக்கும் ஆற்றல் ஆப்பிள் பழத்துக்கு இருப்பதாக கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.