பிரபஞ்ச ரகசியம் – 19
ஓரியன் விண்மீன் மண்டலம்
– சரவணா இராஜேந்திரன்
உலகில் மனிதன் உருவாக்கிய சில மாபெரும் செயற்கை அதிசயங்களை இந்த ஓரியன் விண்மீன் குழுமத்துடன்தான் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இதற்கு எகிப்தின் பிரமிடுகள், தென் அமெரிக்க மாயா பிரமிடுகள் மற்றும் சீனாவில் உள்ள ஃபர்பிடன் நகரம் (Forbidden City) போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். கிரேக்கர்களும், எகிப்தியர்களும் விண்மீன் மண்டலங்களின் ராஜா என்று ஓரியனை அழைத்தனர்.
முக்கியமாக ஆப்பிரிக்கர்களும் அய்ரோப்பியர்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக ஓரியன் விண்மீன் கூட்டத்தைத் தங்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகக் கருதினர். எகிப்தியர்கள் சூரியனுக்கு அடுத்து ஓரியன் நமக்கு சக்தி தருவதாகக் கருதினர். மேலும் ஓரியன் விண்மீன்களை வைத்து துல்லியமான வரைகணிதம் (ஜாமண்டரி) கண்டறிந்தனர். அந்த வரைகணிதத்தின் வாயிலாக தங்களுடைய கட்டிடக்கலையை உலகமே வியக்கும் அளவிற்கு பூமி உள்ளவரை நிலைத்து நிற்கக்கூடிய ஒன்றாகப் படைத்தனர்.
ஓரியன் விண்மீன் மண்டலம்
மாயர்கள் தங்களின் கற்பனை நகரமான அட்லாண்டீஸ்வாசிகள் எல்லோரும் இந்த ஓரியன் மண்டலத்தில் இருந்து வந்து செல்வதாகக் கூறுகின்றனர். இப்படி உலகையே தன்பால் ஈர்த்த இந்த ஓரியன் விண்மீன் மண்டலம் பண்டைய இந்தியர்களை ஏன் ஈர்க்கவில்லை என்று இன்றுவரை புரியவில்லை.
முக்கியமாக இந்தியர்கள் 12 விண்மீன் மண்டலங்களை மட்டும் அறிந்துள்ளனர். மாதங்கள் 12ஆக கணக்கிட்டதால் பல்வேறு விண்மீன் மண்டலங்களைப் புறக்கணித்து-விட்டனர். அல்லது அவர்களுக்கு 12 விண்மீன் மண்டலங்களுக்கு மேல் அறிந்துகொள்ள ஆர்வம் இல்லை போலும்.
ஓரியன் நவம்பர் 15-ஆம் தேதி கிழக்கில் இருந்து தொடங்கி பிப்ரவரி இறுதியில் தென்மேற்காக நகர்ந்து சென்றுவிடும். பொதுவாக இதைப் பார்க்கும்போது ஒரு மாவீரன் வலதுகையில் கேடயத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இடதுகையில் கத்தியைப் பிடித்துக்கொண்டு நிற்பது போல் தோன்றும்.
சீனர்கள் இதனை அழகிய நடனக்காரப் பெண்ணாகப் பார்த்தனர். ஒரு கையில் யாழை வைத்துக்கொண்டு மறுகையை அபிநயமிட்டு மேல் நோக்கி நீட்டி வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் இது உலகமெங்கும் பிரபலமாகவில்லை. ஓரியன் என்ற போர்வீரன் கற்பனை வடிவம்தான் என்பதே பிரபலமாகிவிட்டது.
ஆல்பா ஓரியனிஸ் என்ற பிட்டல்ஜியஸ், பீட்டா ஓரியனிஸ் என்ற ரைகல், காமா ஓரியனிஸ் என்ற பெல்லாட்ரிகஸ், டெல்டா ஓரியனிஸ் என்ற மிந்தஹா, எப்சிலான் ஓரியனிஸ் என்ற அல்நிலம், சீட்டா ஓரியனிஸ் என்ற அல்னிதக், காப்பா ஓரியனிஸ் என்ற கைஃப் மற்றும் அயோட்டா ஓரியனிஸ் என்ற ஹதஸ்யா என எட்டு விண்மீன்கள் இணைந்து அழகான ஓரியன் விண்மீன் மண்டலமாக நமக்குக் காட்சியளிக்கின்றது.
இதில் ஆல்பா பிட்டல்ஜியஸ் என்ற அதிக வெளிச்சமுள்ள விண்மீனின் பொலிவெண் 0.50. இது இந்திய மரபில் திருவாதிரை விண்மீன் என்றழைக்கப்படுகிறது. இந்த விண்மீன் போர்வீரனின் வலது கை போன்று தோற்றமளிக்கும் இடத்தில் உள்ளது.
இடதுகால் பகுதியில் ரைகல் என்ற விண்மீன் உள்ளது. இது நமது கண்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் தெரிந்தாலும் தொலைநோக்கியில் பார்க்கும் போது பால்வெண்மை கலந்த ஒளிமயமான மனதை மயக்கும் தோற்றத்தில் காணப்படும். ஆம், இது நமது சூரியனைவிட அறுபதாயிரம் முதல் ஒரு லட்சம் மடங்குவரை பெரியதாகும்.
இடுப்புப் பகுதியில் காணப்படும் வரிசையான மூன்று விண்மீன்கள், வலப்புறம் உள்ள சீட்டா ஓரியனிஸ் என்ற அல்னிதக், நடுவில் உள்ள எப்சிலான் ஓரியன் என்ற அல்நிலம் மற்றும் டெல்டா ஓரியன் என்ற மிந்தஹா என இந்த விண்மீன்களின் வரிசையில்தான் எகிப்தில் பிரமிடுகள் உள்ளன.
போர்வீரனின் தலையில் உள்ள லாம்டா ஓரியன் அதீத வெப்பநிலை கொண்ட விண்மீனாகும். நமது சூரியனின் புறவெப்பம் ஒன்பதாயிரம் டிகிரி மட்டுமே.
ஆனால் லாம்டா ஓரியனின் புறவெப்பம் முப்பத்தைந்தாயிரம் டிகிரி ஆகும். நாம் 2014 அக்டோபர் இதழில் பார்த்த ஓரியன் ஒளிர்முகில் இடுப்புப் பகுதியின் சிறிது கீழே உள்ளது. நமது பெருவெளியை அறிவியலாளர்கள் இந்த ஓரியன் விண்மீன் மண்டலத்தைக் கொண்டுதான் பாதியாகப் பிரிக்கின்றனர்.
இந்த ஓரியன் விண்மீன் மண்டலம் பல்வேறு மண்டலங்களுக்குத் திசைகாட்டியாகவும் உள்ளது. ஓரியனின் அரைக்கச்சை விண்மீன் ரிஷபத்தையும் பிரகாச லுப்தகத்தையும் நோக்கி அடையாளம் காட்டும்; போர்வீரன் தோள்கள் கசபெல்லாவைக் காட்டும்; பிரகாச ரைகல் ஆக்கிரசை வழிகாட்டும் என வரிசையாக இதனை ஆங்கிலத்தில் ஒரு பாடலுடன் விளக்குகிறார்கள்.
விண்மீன்களைப் பற்றி எளிதில் புரிந்துகொள்ள இந்த ஓரியன் மிகவும் உதவியாக இருக்கும். காரணம், இதில் உள்ள ஆல்பா. லாம்டா. ஈட்டா, எப்சிலான் ஓரியன் விண்மீன்கள் மிகப்பெரிய செம்பூத விண்மீன் வரிசையில் உள்ளன. விண்மீன் மண்டலத்தில் இத்தனை செம்பூத விண்மீன்கள் காணப்படுவதால் அறிவியலாளர்களுக்கு ஆய்வு செய்ய எளிதாக உள்ளது.
குளிர்கால அழகிய இரவு வானில் ஓரியனைப் போன்று பல்வேறு விண்மீன் மண்டலங்கள் உள்ளன. அதில் முக்கியமான சிலவற்றைக் கண்டு மகிழலாம். இந்தியக் கட்டுக்கதையான ஜோதிடத்தில் கூறப்படும் 12 ராசி அட்டவணையில் வராத ஓரியனைப் போன்று மற்றோர் விண்மீன் மண்டலம், பெருநாய் என்ற கனீஸ் மேஜர் ஆகும்.
அக்னி நட்சத்திரம்
கனிஸ் மேஜர் (Canis Major) ஏறக்குறைய 88 விண்மீன்களடங்கிய விண்மீன் மண்டலம் ஆகும். கி.மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த கிரேக்க வானியல் நிபுணரான தாலமி என்பவர் இந்த விண்மீன் மண்டலத்தை ஆய்வு செய்த முதல் வானியல் அறிஞராவார். இதில் கனீஸ் என்பது துருவப்பகுதியில் உள்ள நாய்களைக் குறிப்பிடும் சொல்லாகும்.
இதை ஓரியனுடன் ஒப்பிடும் போது வேட்டைக்காரனை அவனது வளர்ப்பு நாய் பின்தொடர்வது போல கற்பனைப்படுத்திப் பார்த்துள்ளனர். ஓரியனை அடையாளமிடும் ஆங்கிலக் கவிதையினை நாம் பார்த்தோமானால் லுப்தகம் என்ற ஒன்றைக் காணலாம். இந்த லுப்தகத்தை ஆங்கிலத்தில் ஆல்பா கனீஸ் மேஜர் என்ற சீர்யஸ் என அழைப்பார்கள். நவம்பர் இறுதியில் வானில் தோன்றும் இந்த கனீஸ் மேஜர் கோடைக்காலம் வரை வானில் நிலைத்து நிற்கும்.
இந்த லுப்தகம் விண்மீன் அக்கால எகிப்தியர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாகவும் இருந்து வந்தது. இந்த லுப்தகத்தின் அருகில் சூரியன் உதிக்கும் போது நைல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
நைல் நதி வெள்ளப்பெருக்கு என்பது நமது தாமிரபரணி, காவிரி வெள்ளப்பெருக்கு போன்று அல்ல, அந்த நைல் வெள்ளம் அன்றைய காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை அடித்துச் சென்றுவிடும் மிகவும் கோரமான நதி என்று அக்காலத்தில் பேசப்பட்டு வந்தது.
அதே நேரத்தில் இந்த வெள்ளம் மிகவும் அதிக வளமுள்ள வண்டல் மண்ணைக் கொண்டு வந்து எகிப்திற்குக் கொடையாக வழங்கிவிடும். முதலில் கடுமையான அழிவையும் பிறகு செழிப்பான வண்டலையும் கொண்டுவருவதால் எகிப்தியர்கள் இந்த விண்மீனைச் சூரியனுக்கு இணையாகப் பார்க்கின்றனர்.
எகிப்தியர்கள் சூரியன் மற்றும் லுப்தகம் இவ்விரண்டும் தங்கள் மன்னர்களாகப் பிறந்தனர் என்று நம்பினார்கள். நாம் கத்திரிவெயில் என்று சொல்லுவோமே, இந்த லுப்தகத்தின் அருகில் சூரியன் வரும்போதுதான் கத்திரிவெயில் வந்துவிட்டது என்று கூறுகிறோம். இந்த லுப்தகம்தான் அக்னி நட்சத்திரம் என்று இப்போது புரிகிறதா?. இது ஏன் இவ்வளவு வெளிச்சமாகத் தெரிகிறது என்றால் இந்த விண்மீன் நமக்கு மிகவும் அருகில் உள்ளது.
கனீஸ் மேஜர்
அதாவது 9 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. மேலும் இது மிகப்பெரிய விண்மீன் அல்ல. இவ்விண்மீன் நமக்கு அருகில் உள்ளதால்தான் நவம்பரில் தொடங்கி மே மாதம் வரை வானில் வலம் வருகிறது. இதன் பிற விண்மீன்களான பீட்டா மிர்சாம், டெல்டா வெசியா, எப்சிலான் அதாரா, ஏட்டா அலுத்ரா போன்ற விண்மீன்கள் இணைந்து இதனை நாய்போலக் காட்டுகிறது.
இப்பெருநாய் விண்மீன் மண்டலத்தைப் பொருத்தவரை இதில் உள்ள டெல்டா வெசியா என்ற விண்மீன் நமது பூமியில் இருந்து சுமார் 32 ஆயிரம் ஒளியாண்டு தொலைவில் உள்ளது. மிகவும் அதிக தூரத்தில் இருக்கும் விண்மீன்கள் வரிசையில் இந்த வீண்மீனும் அடங்கியுள்ளது.
பார்த்தீர்களா, கற்பனையில் அருகருகே இருப்பது போன்று தோன்றும் விண்மீன்களில் ஒன்று 9 ஒளியாண்டு தொலைவிலும் மற்றொன்று 32 ஆயிரம் ஒளியாண்டு தொலைவிலும் உள்ளது. ஆகவே நமது ஜோதிடர்கள் கூறும் ராசிகள் அனைத்தும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்காக கற்பனையாகப் படைக்கப்பட்ட ஒன்றே ஆகும். நமது முன்னோர்களும் கல்வியறிவில்லாத காலத்தில் ஜோதிடர்களை நம்பி ஏமாந்து போனார்கள்.