தெரியுமா?
சீன நாட்டின் சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் டெடியன் அருவி (Dedian Falls) ஆசியாவிலேயே மிகப் பெரிய அருவி ஆகும். அருவியின் கீழே உள்ள ஆழமான நீச்சல் குளத்தில் பெரிய பெரிய மீன்கள் உள்ளன. இதிலிருந்து மீன்கள் பிடிக்கப்பட்டு உணவாகச் சமைத்து வழங்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களும் கண்களுக்குக் குளுமை தரும் பச்சைப் பசேல் தாவரங்களும் காணப்படுகின்றன.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள டுகெலா அருவி (Tugela Falls) உலகின் இரண்டாவது உயரமான அருவி ஆகும். வெனிசுலாவின் ஏஞ்சல் அருவியின் பின்புறத்தில் அமைந்துள்ள இந்த அருவியானது மூன்று விதமான நிலைகளில் கீழ்நோக்கிப் பாய்கிறது. நாடால் தேசியப் பூங்காவில் அமைந்துள்ள இந்த அருவியினை உங்களில் பெரும்பாலோர் பார்த்திருப்பீர்கள். ஜுராசிக் பார்க் படத்தின் ஆரம்பக் காட்சியில் வருமே அதுதான் இது.
உலகிலேயே மிகவும் உயரமான (979 மீட்டர்) அருவி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் அருவி (Angel Falls) ஆகும். இது, உலகின் மூன்றாவது பெரிய தேசியப் பூங்காவாகக் கருதப்படும் கானாய்மா பூங்காவால் பாதுகாக்கப்படுகிறது. மழைக் காலங்களில் இரண்டு அருவியாகப் பிரிந்து விழும் இது, கோடைக்காலத்தில் தண்ணீர் கீழே விழுவதற்கு முன்பே ஆவியாகி விடுமாம்.
அருவி என்றதும் நயாகரா அருவிதான் (Niagara Falls) அனைவரின் நினைவிலும் வரும். அமெரிக்கா மற்றும் கனடாவில் அமைந்துள்ளது நயாகரா அருவி. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நயாகரா அருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. நொடிக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 811 லிட்டர் நீர் இந்த அருவியிலிருந்து பாய்ந்து வருகிறதாம். இங்குள்ள ஹைட்ரோ எலக்ட்ரிக் பிரிவின் காட்சி இரவு நேரத்தில் கண்களுக்கு விருந்தளிக்கக் கூடியது. குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்துவிடும் இயல்பினை உடையது.
பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவின் எல்லைகளுக்கு நடுவில் இகுயசு ஆற்றில் இகுயசு அருவி (Iguazu Falls) அமைந் துள்ளது. தனித்தனி உயரம் கொண்ட பல அருவிகளைத் தன்னுள் கொண்டு இந்த இடத்தின் அழகிற்கு மெருகேற்றுகிறது. நொடிக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் பாயும் இந்த அருவியானது 269 அடி உயரத்தை உடையது. பிரேசில் மற்றும் அர்ஜென்டினா எல்லைகளே உலக அளவில் மிகவும் ஈர்க்கக்கூடிய எல்லைகள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படுவது தமிழ்நாட்டில் உள்ள ஒக்கேனக்கல் அருவி (Hogenakkal Falls) ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 750 அடி உயரத்தில் மேலகிரி மலைகளால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள மலைக்காடுகளில் வளர்ந்துள்ள மூலிகைத் தாவரங்கள் வந்து செல்வோரை உற்சாகப்படுத்தக் கூடியன. படகில் அருவிக்கு அருகில் சென்று பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் நயாகரா என விக்டோரியா அருவி அழைக்கப்படுகிறது.