சோளப்பொரி நல்லதுதான் ஆனால் “பாப்கார்ன்” ……..
சிறுவர் முதல் பெரியவர்வரை அனைவராலும் விரும்பிச் சாப்பிடப்படும் நொறுக்குத் தீனிகளுள் பாப்கார்னும் ஒன்றாகும். திரையரங்குகள், வணிக வளாகக் கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் இயந்திரங்களில் பொரித்து விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர வீட்டிலேயே நாம் பொரித்துச் சாப்பிடும் வகையில் இன்ஸ்டண்ட் பாக்கெட்டுகள், மைக்ரோ வேவ் பாப்கார்ன் பாக்கெட்டுகளும் கிடைக்கின்றன.
இத்தகு சிறப்பு வாய்ந்த பாப்கார்ன் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மெக்சிகோ மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவிலிருந்து சீனா, சுமத்ரா, இந்தியா என உலகம் முழுவதும் சென்று அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பப்படும் நொறுக்குத் தீனியாக இன்று உள்ளது.
நார்ச்சத்து, குறைவான கலோரி, வைட்டமின் பி1, பி5, சி, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சோளத்தை இயற்கையான முறையில் பொரித்துச் சாப்பிடும்போது மட்டுமே மேலே உள்ள சத்துகள் நமக்குக் கிடைக்கின்றன.
செயற்கை முறையில் பொரிக்கப்படும்போது இந்தச் சத்துகளின் அளவில் வியத்தகு அளவில் மாற்றம் ஏற்படுகிறது. 100 கிராம் இன்ஸ்டன்ட் சோளத்தைப் பொரிக்கும்போது 510 கலோரிகள், 55 கிராம் கார்போஹைட்ரேட், 58 கிராம் கொழுப்பு அமிலங்கள், 10 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் புரதச்சத்து ஆகியன நமக்குக் கிடைக்கின்றன.
சோளத்தை அப்படியே வறுக்கும்போது மணமும் சுவையும் இருப்பதில்லை. எண்ணெய், மசாலா சேர்த்து இயந்திரங்களில் பொரிப்பதால் கிடைக்கும் வாசனையும் சுவையும் சத்துகளின் அளவை வேறுபடச் செய்துவிடுகின்றன.
இன்ஸ்டன்ட் பாக்கெட்டுகளைவிட மைக்ரோவேவ் பாப்கார்ன் பாக்கெட்டுகள் அதிகத் தீங்கு விளைவிப்பன என அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. தட்டையாக இருக்கும் பாக்கெட்டுகளை அப்படியே ஓவனில் வைத்ததும் சில நொடிகளில் சோளம் பொரிந்து பாக்கெட் பெரிதாகும்.
சோளம் பொரியும்போது வெளிவரும் வெண்ணெய் வாசனைக்கு டை அசிட்டைல் எனற ரசாயனமே காரணமாகும். இந்த ரசாயனம் உணவுக்குச் செயற்கையான வெண்ணெய் மணத்தையும் சுவையையும் கொண்டு வருவதற்காகப் பயன்படுத்தப்படுவது ஆகும்.
மஞ்சள் நிறப் பவுடராகவோ, திரவ வடிவத்திலோ இருக்கும் டை அசிட்டைல் ரசாயனம் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பலருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. டை அசிட்டைல் ரசாயன வாசனையைத் தொடர்ந்து சுவாசிக்கும் தொழிலாளர்களுக்கே இந்த நிலை என்றால் சாப்பிடும் நமக்கு?