நான்கே மணி நேரத்தில் உலகின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்
ஒலியைவிட அய்ந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய நவீன ரக விமானம் இங்கிலாந்தைச் சேர்ந்த அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மய்யத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
முதல் முயற்சியாக ஆயிரம் டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பத்தை ஒரு நொடியின் நூறில் ஒரு மடங்கு நேரத்தில் 150 டிகிரி வெப்ப நிலையாகக் குளிர்விக்கக்கூடிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒலியைவிட இரண்டரை மடங்கு வேகத்தில் பாயும் ஜெட் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டன.
இதனைவிட இரண்டு மடங்கு வேகத்தில், அதாவது ஒலியைவிட அய்ந்து மடங்கு வேகத்தில் செல்லும் ஜெட் என்ஜின்களைத் தயாரித்த இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காப்புரிமையையும் பெற்றது. ஆனால் விமானங்களைத் தயாரிக்கவில்லை.
இதனையறிந்த அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மய்யம் அந்தத் தொழில்நுட்பத்தினை விலைக்கு வாங்கியது. தனது தீவிர முயற்சியின் காரணமாக பரிசோதனையின் இரண்டாம் கட்ட முயற்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயணிகள் விமானங்களுக்கான சிறிய வகை என்ஜின்களை சுமார் 250 கோடி ரூபாய் செலவில் 3 ஆண்டுகளுக்குள் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த நவீன ரக விமானங்களின் மூலம் உலகின் எந்த மூலைக்கும் நான்கே மணிநேரத்தில் சென்றுவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, தற்போது 17 மணி நேரம் செல்லும் பயணம் 4 மணி நேரமாகிவிடுமாம். நவீன வகை ஸ்ப்ரே தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட உள்ள ஸ்கைலான் விமானங்கள் 10 ஆண்டுகளில் விற்பனைக்கு வர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கைலான் விமானங்களின் மூலம் மிகக் குறைந்த செலவில் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களையும் அனுப்பி வைக்க முடியும் என்று நம்பிக்கையுடன் அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.