மின் சிக்கனம்: வரைந்த தூரிகை
மத்திய மின்சார அமைச்சகமும் மத்திய நீர்வள ஆதார அமைச்சகமும் இணைந்து மின்சார சேமிப்பு மற்றும் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தைப் பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படச் செய்யும்வகையில் அகில இந்திய அளவில் ஆண்டுதோறும் ஓவியப் போட்டியினை நடத்தி வருகின்றன.
மின்சார சேமிப்பு மற்றும் தூய்மையான பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து புதுமையான ஓவியத்தை வரைய வேண்டும். இதன்மூலம் பல விவரங்களை மாணவர்கள் கற்றுக் கொள்வதுடன் நாட்டு நலனுக்காக புதிய செய்திகளை அரசுக்கு மாணவர்கள் கொடுக்க வேண்டும் என்பதே இந்த ஓவியப் போட்டியின் நோக்கமாகும்.
பி பிரிவில் மாநில அளவில் சென்னை அண்ணா நகர் சின்மயா வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஏ.யோகரன் வரைந்த ஓவியம் முதல் பரிசினைப் பெற்றுள்ளது.
மின்சாரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் எதிர்கால இந்தியா எந்த அளவுக்குப் பசுமையாகவும் தூய்மையாகவும் இருக்கும் என்பதைத் தன் ஓவியத்தின் மூலம் காட்டியிருப்பதாக யோகரன் கூறியுள்ளார்.
மேலும், தற்போது கிடைத்துள்ள பரிசினால் தான் மிகவும் உற்சாகத்துடன் இருப்பதாகவும், பன்னாட்டு அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதுதான் தனது அடுத்த இலக்கு என்றும் கூறியுள்ளார்.