கோல் ஊன்றித் தாண்டுதல்(Pole Vault)
பார்வையாளர்களுக்கு மட்டுமன்றி, போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் விளையாட்டே கோல் ஊன்றித் தாண்டும் விளையாட்டாகும். போட்டியாளரின் வேகமும், சுறுசுறுப்பும், வலிமையும், நரம்பு மற்றும் தசைகளின் ஒத்துழைப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. நல்ல உயரத்துடனும் நீண்ட கைகளுடனும் இருப்பவர்களால் மிகவும் சிறப்பான முறையில் கோல் ஊன்றித் தாண்ட முடியும்.
ஊன்றித் தாண்டுவதற்கு எஃகு, அலுமினியம் குச்சிகளும், மூங்கில் குச்சியும் பயன்படுத்தப்படுகிறது. வளைவுத் தன்மையைக் கொண்டிருப்பதால் பெரும்பாலும் மூங்கிலே பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஃபைபர் கிளாஸ் குச்சிகளும் வந்துவிட்டன.
பிடிப்பு, எடுத்துச் செல்லதல், ஓடுதல், ஊன்றுதல், எழும்புதல், இழுப்பது திரும்புவது தள்ளுவது, தடை நீக்குவது, தாண்டுபவர் விழுவது என எட்டு அடிப்படை உத்திகள் பின்பற்றப்படுகின்றன.
சாதனங்கள்
உறுதியான உயரக் கம்பங்கள், மரத்தால், உலோகத்தால் அல்லது அதற்கு இணையான பொருளாலான குறுக்குக் கம்பம், குறுக்குக் கம்பத் தாங்கிகள் தேவை.
கோலூன்றும் பெட்டி
கடினமான, உறுதியானதாக அமைவது போன்ற பொருளால் பெட்டி இருக்க வேண்டும். பெட்டியின் நீளம் 1 மீட்டரும், வாய்ப்புறம் 600 மி.மீ. அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும். கோல் கடைசியாக ஊன்றப்படும் உட்புறப் பெட்டியின் அகலம் 150 மி.மீ. இந்தப் பெட்டியைத் தரையின் மேற்புறத்தில் சம அளவுடன் இருப்பதுபோலப் புதைத்திட வேண்டும்.
பெட்டியின் அமைப்பானது கீழிருந்து மேலே வெளிப்புறமாக விரிந்து வரும் பக்கப் பலகைகளும், இறுதியாக கோலினைத் தடுக்கும் பலகை அமைப்பும் அடித்தளத்திலிருந்து 120 டிகிரி அளவில் அமைக்கப்பட வேண்டும்.
அளவுகள்
தாண்டுபவர் விழும் பரப்பு 5 மீ நீளமும் 5 மீ அகலமும் கொண்டதாக இருக்கும். கம்பங்களுக்கு இடையேயான தூரம் குறைந்தது 3.6 மீ, அதிகபட்சம் 4.32 மீ. குறுக்குக் கம்பின் நீளம் குறைந்தது 3.86 மீ. அதிகபட்சம் 4.52 மீ. குறுக்குக் கம்பின் எடை 2.26 கிலோ வரை இருக்கலாம்.
விதிமுறைகள்
போட்டியாளர் தாண்டும்போது கம்பங்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் அசையலாம். ஆனால் தடுக்கும் பலகையின் (Stop Board) உட்புற விளிம்பிலிருந்து 2 அடிக்கு மேல் நகரக் கூடாது.
போட்டியைத் தொடங்கும்போது குறைந்தபட்ச உயரம் என்ன என்பதைத் தீர்மானித்து போட்டியாளர் தாண்டத் தொடங்கலாம். தான் விரும்பிய உயரத்தில் அல்லது ஏதாவது ஒரு உயரத்தில் மூன்று முறை தொடர்ந்து தாண்ட முடியாது தவறிழைக்கும் போட்டியாளர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்.
ஒவ்வொரு போட்டியாளரும் கோல் ஊன்றித் தாண்டும் அனைத்து வாய்ப்புகளையும் சேர்த்து, அதிக உயரத்திற்குத் தாண்டியவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுவர்.