ஒரு சூடு
ஒரு சூடு
கதையும் படமும் -மு.கலைவாணன்
வயல்கள் நிறைந்த வயலூர் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது ஒரு பூம்… பூம் மாட்டுக்காரர் கூட்டம்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் உள்ள மலையடிவாரத்தில், புளியமர நிழலில் கூடாரங்கள் உருவாயின.
சோறாக்கிச் சாப்பிட சில பாத்திரங்கள், சின்ன நாதசுரம், உறுமி மேளம், சிறிய துணி மூட்டை, தலையாட்டுவதற்கு ஒரு மாடு _ இவ்வளவுதான் அவர்கள் சொத்து.
பக்கத்துக் கிராமத்திலிருந்து நடந்து வந்த களைப்பில், மாட்டை மரத்தடியில் கட்டிவிட்டுப் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர், பூம் பூம் மாட்டுக்காரர்கள்.
சூரியன் மேற்கில் மறையும் நேரம், வயலில் உழவனோடு சேர்ந்து உழைத்துவிட்டுச் சேறு படிந்த உடம்புடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிவலைக்காளை அந்த வழியே வந்தது.
கொம்புகள் இரண்டும் அலங்கரிக்கப்பட்டு _ குஞ்சம் தொங்க, முதுகில் உள்ள திமிளில் கரடித் தோல் பளபளக்க, உடம்பில் வண்ண வண்ணத் துணிகள் தொங்க, கழுத்திலும், பின்புறத்திலும் மணிகள் ஆட, நெற்றியில் வெங்கடேசப் பெருமாளின் உருவம் பொறித்த துணி தொங்க, அலங்கரிக்கப்பட்ட புது மாப்பிள்ளை போல் மரத்தடியிலிருந்து பூம்பூம் மாட்டைப் பிரமிப்புடன் நோக்கியது, சிவலைக்காளை.
அருகில் சென்று பார்த்து வருவோம் என நெருங்கியது. இது, அருகே வந்ததும், முட்டித் தள்ள முனைந்தது பூம் பூம் மாடு.
ஏய்! நீயும் என்னைப் போல மாடுதானே?… இவ்வளவு அலங்காரமா இருக்கிறாயேன்னு பாக்க வந்தா, முட்ட வர்றியே! என்று ஆற்றாமையுடன் கேட்டது, சிவலைக்காளை.
நான் சாமி மாடு! உடம்பு முழுக்க சேத்தைப் பூசிக்கிட்டு என் பக்கத்திலே வர்றியே…! சீ….சீ., தூரமாப் போ! என்றது பெருமாள் மாடு.
ஓகோ! உடம்புல சேறு ஒட்டியிருக்கிறதாலே எட்டிப் போகச் சொல்றியா? காலையிலே இருந்து பொழுது சாயிற வரை உழவனோடு சேர்ந்து வயலிலே உழைச்சிட்டு வர்ற என் உடம்புல சேறுதான் இருக்கும். சந்தனமா பூசிக்கிட்டு வர முடியும்? உழைக்கிற நான் உனக்குக் கேவலமாத் தெரியறேனா?
என்ன இருந்தாலும் நீ மட்டம், நான் உசத்தி! என உரத்த குரலில் சொன்னது பூம்பூம் மாடு.
ஓகோ… நெத்தியிலே சாமிப் படத்தை மாட்டிக்கிட்டு, ஊரெல்லாம் சுத்திச் சுத்தி தலையாட்டிப் பிச்சையெடுக்கிற நீ சாமிமாடு! உழைக்கிற நான் கேவலம்.. ஊரைச்சுத்திப் பிச்சையெடுக்கிற நீ உசத்தி! உழுபடையா வேலை செய்யிற நான் மட்டமா? என்ன நியாயம் இது?
என் உடம்புலே ஒட்டி இருக்கிற சேறு, உழைக்கும்போது பட்டது. உன் உடம்புலே கட்டி இருக்கிற எல்லாமே, ஊரைச் சுத்தியபோது மத்தவங்க பிச்சையாப் போட்டது.
ஊருக்கெல்லாம் சோறு கொடுக்கிற விவசாயியோடு சேர்ந்து நான் உண்மையா உழைக்கிறேன். முதல் முதல்லே நிலத்திலே ஏரு பூட்டி ஓட்டுறதுலே இருந்து, பயிரை வளர்த்துக் கடைசியா பிணையடிக்கிற வரையிலே கூட இருந்து பாடுபடறேன். அதனாலே அறுப்பறுத்து அடிச்சுக் கீழே விழுந்த நெல்மணிகளைஅவுங்க எடுத்துக்கிட்டு, வைக்கோலை எனக்குத் தருவாங்க.
நெல்லை எடுத்துக் குத்திப் புடைச்சுத் தவிட்டை எனக்குத் தருவாங்க. அரிசி கழுவிய தண்ணியை எனக்குத் தருவாங்க. அரிசி வெந்து சோறானதும் வடிகஞ்சியை எனக்குத் தந்துட்டு, சோத்தை அவுங்க சாப்பிடுவாங்க.
ஆனா, நீ வீடு வீடாய்ப் போய் வாசலிலே நின்னு அம்மா பட்டுப் புடவை கொடுப்பாங்களா? பூம்..பூம்..பூம்.. அய்யா பட்டு வேட்டி கொடுப்பாங்களா? பூம்..பூம்..பூம்.ன்னு உன்னை வச்சிப் பிழைக்கிறவன் அடிக்கிற உறுமிச் சத்தத்துக்கு ஏத்த மாதிரி தலையாட்டி _ அவங்க போடுற பழைய சோத்துக்கும், கிழிஞ்ச துணிக்கும், சில்லரைக் காசுக்கும் ஏங்கணும்.
அதெல்லாம் கிடைச்சாலும் உனக்கென்ன பயன்? உன்னை வெச்சுப் பிழைக்கிறவனுக்குத்தான் லாபம்.
கடினமா உழைக்கிற மனிதரை மாடு மாதிரி, உழைக்கிறான்னு பாராட்டக் கேட்டிருக்கேன். ஆனா நீயோ உழைக்காம அடுத்தவனை ஏமாத்திப் பிழைக்கிற மனிதனைப் போல நடந்துக்கிறதனாலே மனிதன் மாதிரி பிழைக்கிறேன்னு சொல்ற அளவு நடந்துக்கிட்டியே!
அதை நினைச்சாதான் எனக்கு வருத்தமாயிருக்கு! என ஆவேசமாக முழங்கியது சிவலைக்காளை.
ஊருலே, எல்லாரும் என்னைத் தொட்டு வணங்குறாங்க, தெரியுமா? மீண்டும் மிடுக்காகப் பேசியது பெருமாள் மாடு.
அதை ஏளனமாய்ப் பார்த்த சிவலைக்காளை, உன்னை எல்லோரும் தொட்டு வணங்கிறதுனாலேயே நீ பெரிய ஆளுன்னு நினைக்காதே! பதவியிலே இருக்கும்போது காலில் விழுந்து வணங்குறதும், பதவி போனதும் காலில் போட்டு மிதிக்கிறதும் மனிதர்களின் குணம்!
அதே மாதிரி, உன் நெத்தியிலே இருக்கிற சாமிப் படத்தைக் கழட்டிட்டு, உன் அலங்காரத்தைக் கலைச்சுட்டு ஊருக்குள்ளே போயி ஒரு வீட்டு முன்னால நின்னு பாரு.
உன்னை யாரும் தொட்டு வணங்க மாட்டாங்க. துரத்தித்தான் அடிப்பாங்க! உழைப்பால் கிடைக்கிற மதிப்புதான் உண்மையான மதிப்பு. உன் வேடத்தினாலே கிடைக்கிற எதுவுமே உனக்கில்லே. அது நிலைக்கவும் நிலைக்காது, தெரிஞ்சுக்க! என்று கூறியபடி சிவலைக்காளை தன் வழியே சென்றது.
அதன் வார்த்தை ஒவ்வொன்றும், மீண்டும் மீண்டும் பெருமாள் மாட்டின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு…
அப்படியானால், சாமி மாட்டுக்கு?