பிரபஞ்ச ரகசியம் 21
பிரபஞ்ச ரகசியம் 21
விண்மீன்களுக்கிடையே ஏற்படும் கிரகணம்
சரவணா இராஜேந்திரன்
இரவு நாம் எந்தக் கருவியும் இல்லாமல் நமது கண்களால் பார்க்கும் அழகிய வானத்தில் ஆங்காங்கே வெண்புள்ளி போன்ற விண்மீன்களுடன் அடர்ந்த கருமையான வானம் தெரியும். இதையே சாதாரண இரட்டைக் குழல் தொலைநோக்கி வழியாக நாம் பார்த்தோமென்றால், ஒளிர்விடும் விண்மீன்கள் பல்வேறு வண்ணங்களில் காட்சி தரும்.
அந்த விண்மீன்களின் அருகருகே பல்வேறு சிறிய விண்மீன்கள் தெரியும். இதையே நாம் நடுத்தரத் தொலைநோக்கி வழியாகப் பார்த்தோமென்றால் பல்வேறு வண்ணங்களில் தெரிந்த விண்மீன்கள் பல, ஜோடி ஜோடியாக இருப்பதைக் காணலாம்.
நமது கோள்களான சனி மற்றும் வியாழன் தெளிவாகத் தெரியும், இதுவரை பிரபஞ்ச ரகசியத் தொடரினைத் தொடர்ந்து படித்தவர்கள் உடனடியாக சனியின் வளையங்களைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.
மேலும் வியாழனின் மேற்புறம் பல ஆயிரம் ஆண்டுகளாக வீசிக்கொண்டு இருக்கும் புயலையும் அடையாளம் கண்டுவிடுவார்கள். தற்போது நவீன தொலைநோக்கிகள் வந்துவிட்டன.
அறிவியல் மய்யங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த நவீன தொலைநோக்கிகள் வழியாக நாம் பார்க்கும்போது இதுவரை நாம் படித்த ஒளிர்முகில் கூட்டங்கள், விண்மீன் கொத்துகளில் உள்ள ஆயிரக்கணக்கான விண்மீன்கள், தேனஃப் மற்றும் ஆல்பா ஓரியானிஸ் போன்ற மாபெரும் விண்மீன்களின் முழு உருவங்கள் தெரியும்.
பிப்ரவரி, மார்ச் மாத காலகட்டத்தில் நாம் இந்த நவீன தொலைநோக்கி வழியாகப் பார்க்கும் போது ஒரு விண்மீன் மற்ற விண்மீனைப் போல் அல்லாமல் அவ்வப்போது நன்கு ஒளிர்விட்டு பிறகு மீண்டும் மங்கலாகி பழைய நிலையை அடைவதைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக, நாம் மெழுகுவர்த்தியைப் பற்றவைத்து சிறிது தொலைவில் நின்றுகொண்டு ஏதாவது ஒரு பொருளை மெழுகுவர்த்தி மற்றும் நம் கண்களுக்கு இடையே கொண்டுவந்தால் மெழுகுவர்த்தியின் ஒளி நமது கண்களுக்குத் தெரியாமல் போகும்.
அந்தப் பொருளை எடுத்துவிட்டால் மீண்டும் மெழுகுவர்த்தியின் ஒளி நமது கண்களுக்குத் தெரியும்.
தற்போது உங்கள் நண்பனை அழைத்து மேசையின் மீது எரியும் மெழுகுவர்த்தியைச் சுற்றிவரச் சொல்லுங்கள். இப்போது மெழுகுவர்த்தியின் ஒளிக்கும் நமது கண்களுக்கும் இடையில் நண்பர் வரும் போது ஒளி மறைக்கிறது. அவர் விலகியவுடன் தெரிகிறது. இதே வினைதான் பலகோடி மைல்கள் தூரத்தில் பல்வேறு விண்மீன்களிடையே நடக்கிறது.
நன்கு தெரியும் விண்மீன்கள் ஒளி மங்கி அல்லது முற்றிலும் மறைந்து பிறகு தெரிவதற்குக் காரணம், அந்த விண்மீன்களைச் சுற்றி ஏதோ ஒரு பொருள் சுற்றிவருகிறது. அந்த ஒளியை மறைக்கும் பொருள்கள் நமது வெள்ளி, புதன், புவி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன் யுரேனஸ் போன்ற கோள்களாகக்கூட இருக்கலாம்.
தற்போது நமது விடுதலை நாளிதழில் அடிக்கடி ஓர் அறிவியல் செய்தியைத் தொடர்ந்து படிக்கிறோம். அது நமது சூரியனைப்போல் கோள்கள் அடங்கிய மண்டலங்கள் கண்டுபிடிப்பு என்ற செய்தி மேற்குறிப்பிட்ட விண்மீன் மறைக்கும் பொருள்களைக் கண்டறிந்து அவற்றை நீண்ட நாள்கள் ஆய்வு செய்த பிறகு அறிவியலாளார் கொடுத்த முடிவின்படிதான் வருகிறது.
நமது சூரியனை நிலவு மறைக்கும் போது சூரிய கிரகணம் என்றும் அதே சூரியனின் ஒளியை நிலவிற்குச் செல்லவிடாமல் பூமி மறைக்கும் போது சந்திர கிரகணம் என்று குறிப்பிடுவதை நாம் முந்தைய தொடர்களில் பார்த்திருக்கிறோம். அதே நிலைதான் இந்தப் பெருவெளி முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.
விண்மீன்களை மறைக்கும் விண்மீன்கள்
ஒரு விண்மீனைச் சுற்றிவரும் கோள்கள் மறைப்பை நாம் படித்திருக்கிறோம். ஆனால் ஒரு விண்மீனை வேறு ஒரு விண்மீன் மறைப்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோமா? நாம் முன்பு கூறியது போல் வானில் மின்னிடும் பல்வேறு விண்மீன்களில் இரட்டை (Binary) விண்மீன்களும் உண்டு.
இந்த விண்மீன்கள் எதிர்மின்காந்த விசையால் மிக அருகில் இருந்தும் ஒன்றை ஒன்று ஈர்த்து விடாமல் சுற்றிவருகிறது. இதன் சுழற்சி வேகம் நமது தற்போதைய அறிவியல் அளவுகோலில் அளவிடமுடியாத அளவில் உள்ளதுதான் இதில் குறிப்பிடத்தகுந்த தகவல். பெரிசியஸ் விண்மீன் மண்டலத்தில் அல்கோல் என்னும் விண்மீன் உள்ளது.
இதை பீட்டா பெரிசி என்று வழங்குவார்கள். இந்த விண்மீனை அறிவியலார் கண்சிமிட்டும் பிசாசு என்ற பொருள்படwining demon என்று அழைப்பார்கள். இந்த பீட்டா பெரிசி என்ற அல்கோல் ஒரு பைனரி விண்மீன் ஆகும். நமது சூரியனைப் போன்ற விண்மீன் (அல்கோல் B) ஒன்று பிரமாண்டமான அல்கோல் A என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது,
பொதுவாக நமது பூமி சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. சூரியனை நமது பூமி மணிக்கு 108,000 km/h கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிவருகிறது. இவ்வளவு வேகத்தில் பயணித்தும் 365 நாட்கள் ஆகிறது. ஆனால் அல்கோல் இரட்டை விண்மீன் சாதாரண ஒளிவிடும் பொலிவெண் 2.3-லிருந்து 3.5 வரை ஒளிமங்கும்.
இது வெறும் 4 நிமிடங்களில் நடக்கிறது. அல்கோல் கி என்ற விண்மீன் நமது சூரியனைவிட 20 மடங்கு பெரியது. நீலநிற ஒளியை உமிழும் விண்மீன் ஆகும். அல்கோல் ஙி நமது சூரியனைவிட 3 மடங்கு பெரியது, மஞ்சள் நிற ஒளியை உமிழும் விண்மீன் ஆகும்.
சூரிய சந்திர கிரகணங்களால் ஏற்படும் அறிவியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும் வானியல் அறிவியல் ஆய்வாளர்களுக்கு இந்த விண்மீன் மறைப்பு(கிரகணம்) மிகவும் ஆர்வமூட்டும் ஆய்வுக்குரிய இயற்கை வினையாக உள்ளது. இதை நீங்கள் மார்ச் மாத இறுதிவரை கண்டு ரசிக்கமுடியும்.
பெரிசியாஸ் விண்மீன் மண்டலம்:
கார்த்திகை விண்மீன் குழுவை நீங்கள் கண்டு ரசித்திருப்பீர்கள். கார்த்திகை விண்மீனிற்கு வடக்கு நோக்கிப் பார்வையைச் செலுத்தினால் மெலிதாக பல்வேறு விண்மீன்கள் மின்னுவதைக் காணலாம். அந்த விண்மீன்களை ஒன்றாக இணைத்தால் ஓநாய் தோல் அணிந்த ஆதிகால மனிதனின் உருவத்தை நாம் காணலாம்.
இதில் பொலிவெண் 1.80 கொண்ட ஆல்பா பெரிசி என்ற மீர்பாக் விண்மீன் நமது பூமியில் இருந்து 620 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. பீட்டா பெரிசி என்ற அல்கோல் பூமியிலிருந்து 95 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.
இதுதவிர மற்ற விண்மீன்களான காமா பெரிசி 143 ஒளியாண்டு, சீட்டா பெரிசி 1011 ஒளியாண்டு , எப்சிலான் பெரிசி 678 ஒளியாண்டு , டெல்டா பெரிசி 326 ஒளியாண்டு தூரம் என பல்வேறு விண்மீன்கள் உள்ளன.
முயல் விண்மீன் குழு (லீப்பஸ்)
ஓரியான் விண்மீன் குழுவில் உள்ள பீட்டா ஓரியானிஸ் என்ற ரைகல் விண்மீனை நாம் பார்த்திருப்போம். ரைகலுக்குச் சிறிது கீழே தெற்குத் திசையில் நமது பார்வையைச் செலுத்தினால் குழிமுயல் அமர்ந்திருக்கும் வடிவை ஒத்த விண்மீன் குழுமம் நமது கண்களுக்குத் தெரியும்.
முயல் விண்மீன் மண்டலத்தில் உள்ள விண்மீன்கள் அனைத்தும் பெரிசியஸ் போன்றே ஒளிகுறைந்த விண்மீன்கள் ஆகும். பிரபஞ்ச ரகசியம் தொடரைத் தொடர்ந்து படித்து வானைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள் சட்டென அடையாளம் கண்டுகொள்வார்கள். இது ஆல்பா லிப்பி அர்நப் என்று அழைக்கப்படுகிறது. அர்நப் என்பதற்கு அரபு மொழியில் முயல் என்று பொருள்.
பீட்டா லிப்பி என்ற நிஹால் விண்மீனுடன் ஒளி மங்கிய 7 விண்மீன்கள் இதில் உண்டு. இந்த விண்மீன் மண்டலத்தில் உள்ள ஆர் என்ற விண்மீன் 430 நாள்களுக்கு ஒரு முறை ஒளிமங்கி கூடுகிறது. இந்த விண்மீனை நவீன தொலைநோக்கி கொண்டு பார்க்கும் போது மிகப்பெரிய கருஞ்சிவப்பு வண்ணம் கொண்ட ஒரு கோளமாகத் தெரியும்.
ஆரைகா விண்மீன் மண்டலம்:
பண்டைய இந்திய வானியல் அறிஞர்கள் குழம்பிய விண்மீன் மண்டலங்களில் இதுவும் ஒன்று. இதற்கு முக்கியக் காரணம் காளைவடிவ விண்மீன் மண்டலத்தில் உள்ள பீட்டா டாரி என்ற விண்மீன் இந்த ஆரைகா விண்மீன் மண்டலத்தில் ஓர் அங்கமாக உள்ளது. இந்த பீட்டா டாரி விண்மீனை நன்கு கவனித்தால் இதன் அருகில் மூன்று சிறிய விண்மீன்கள் உள்ளன.
இதை ஆங்கிலத்தில் குட்டி(கிட்ஸ்) என்று அழைப்பார்கள். இந்த விண்மீன்கள் இதுவரை கண்டுபிடித்த விண்மீன்களுள் அதிக அளவு வெப்பத்தை உமிழும் விண்மீன்களாகும். இந்தத் தொடரில் பார்த்த பெரிஸியஸ், ஆரைகா மற்றும் லிப்பஸ் விண்மீன் மண்டலங்கள் முழுவதும் பல்வேறு வண்ணங்களில் மின்னும் விண்மீன்களாகும்.
மற்ற விண்மீன்களை சாதாரண தொலைநோக்கி மூலம் பார்த்தால்தான் அவை வண்ணமயமாகக் காட்சிதரும். ஆனால் குளிர்காலத்தில் இந்த மூன்று விண்மீன் மண்டலங்களில் உள்ள விண்மீன்களை நன்கு கவனித்து வந்தால் அழகிய பல்வேறு வண்ணங்களில் ஒளிர்வதை நாம் கண்டு மகிழலாம்.
அடுத்த பயணத்தில் நியுட்ரினோ துகளை உமிழும் வின்மீண்களையும் வசந்தகால விண்மீன் மண்டலத்தையும், ஆக்ஸிஜன் மட்டுமே உள்ள கோள் பற்றியும் காணலாம்.