மாற்றம் இல்லை
மாற்றம் இல்லை
கதையும் படமும்
-மு.கலைவாணன்
அந்தக் குளத்திற்குத் திடீர் என நிறையத் தவளைகள் தாவித் தாவி வந்து கொண்டிருந்தன. அங்கே பல நாளாகக் குடியிருந்த ஒரு தவளை, எதிர்பாராமல் இப்படிக் கூட்டமாக வரும் தவளைகளைக் கண்டு வியந்தது.
பக்கத்தில் இருந்த சின்னப் பாறையின் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு, தாவித்தாவி மூச்சிரைக்க வந்த ஒரு தவளையைப் பார்த்து, கொஞ்சம் நில்லு, ஏன் இப்படித் தலைதெறிக்க எல்லோரும் ஓடி வருகிறீர்கள்? உயிரைக் காப்பாதிக்க ஓடிவர்ற அகதிங்க மாதிரி வர்றியே எங்கிருந்து வர்றே? என்று கேட்டது.
சரியாச் சொன்னே! நான் அகதிதான்… தான் வாழுற இடத்திலே வாழமுடியாத அளவுக்கு சிக்கலும் சிரமமும் இருந்தா… மனிதர்கள் புலம்பெயர்ந்து போவாங்க… அதே நிலைமைதான் எனக்கும்!
எனக்குப் புரியலையே!
நாங்கள் பக்கத்திலே உள்ள வயல்வெளியில் நிறைந்திருக்கும் தண்ணீரில் இருந்தவர்கள். பயிரை அழிக்க வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று மனிதனுக்கு உதவி செய்து வாழ்ந்து வந்தோம். ஆனால், அந்த வயலுக்குச் சொந்தக்காரன் ரசாயன உரத்தைப் பயிருக்குப் போட்டான்.
பூச்சி மருந்தையும் தெளிச்சான். அவ்வளவுதான்… அந்த நெடி தாங்க முடியாமல், நம்ம இனத்திலே சில பேரு செத்துப் போயிட்டாங்க! நாங்க கொஞ்சம் பேரு உயிர் பிழைக்க ஓடி வந்தோம் என விவரம் சொன்னது ஓடிவந்த தவளை.
அட அநியாயமே, விவரம் புரியாத விவசாயி ரசாயன உரத்தைப் பயிருக்குப் போட்டு, நிலத்தையும் கெடுத்து அவனுக்கு உதவியா வயல்ல இருந்த உங்களையும் விரட்டிட்டானே! என்று அனுதாபப்பட்டது குளத்தில் இருந்த தவளை.
ஆமா… ரசாயன உரம் போட்டா, மண்ணிலே இருக்கிற நன்மை தரும் நுண்ணுயிர் எல்லாம் செத்துப் போயிடும். உழவனின் நண்பன்னு சொல்ற மண்புழுகூட செத்துப்போயிடும். மண்ணை வளமாக்குகிற நுண்ணுயிர்களை அழிச்சிடறதாலே கொஞ்ச நாளில் மண்ணே மலட்டுத்தன்மை அடைஞ்சிடும்.
அதுமட்டுமா?… பூச்சி மருந்து தெளிக்கிறதாலே அவனுக்கு உதவியா இருந்த எங்களை விரட்டினதோட பல வகையிலும் விவசாயிக்கு உதவிவரும் பட்டாம்பூச்சி, தும்பி போன்ற உயிரினத்தையும் அழிச்சிடுறானே, இந்த மனிதன்! என்று குமுறியது வயல் தவளை.
ரசாயன உரம், பூச்சி மருந்து இதெல்லாம் இல்லாமெ எப்படி ஒரு விவசாயி, விவசாயம் செய்ய முடியும்? புரியாமல் கேட்டது குளத்துத் தவளை.
மனிதர்கள் இயற்கையை மறந்துட்டு செயற்கையைத் தேடி ஓடுறாங்க!…
இயற்கையான உரமும், இயற்கை விவசாயமும் செய்தா நிலம் கெடாது; நீர் மாசுபடாது; வளம் குறையாது.
ரசாயன உரம் ஒரு காலகட்டம் வரை அதிக மகசூல் தரும். பிறகு, பூமியில சத்தே இல்லாதபடி செய்துவிடும்.
அது மட்டுமில்லே. நவீன பூச்சி மருந்து நன்மை செய்யிற பூச்சிகளையும் சேர்த்து அழிச்சுடும்!
இயற்கையை அழிச்சு, செயற்கையை நேசிக்கிற இவங்க மனநிலை எப்பத்தான் மாறுமோ தெரியலே! என்றது வயல் தவளை.
தவளை கத்திப் பொழுது விடியுமா?ன்னு பழமொழி பேசுகிற மனிதர்களுக்கு, நாம பேசுறது கேக்கவா போகுது? சரி… சரி. வாங்க, இந்தக் குளத்திலே இருந்தாலும் நாம ஒற்றுமையா இருப்போம்! என்று தத்துவம் பேசி வரவேற்றபடி நீரில் தாவிக் குதித்து நீந்தியது குளத்துத் தவளை.
வயல் தவளை பின்தொடர்ந்தது.