சிறார் தொழிலால் சிதையும் வாழ்வு!
பிள்ளை பெறுதல் என்பது கட்டாயம் அல்ல. பெற்றால் அதை முறையாக வளர்க்க முடியும் என்றால் மட்டுமே பெற வேண்டும். பொறுப்பாக வளர்த்தல் என்பது அதற்கு உரிய உணவு, உடை, கல்வி, இருப்பிடம் இவற்றைச் சரியாகத் தரவேண்டும்.
பெற்றுப்போட்டோம் அதுவாக வளரும் என்ற எண்ணம் குடும்பத்திற்கும் கேடு, சமுதாயத்திற்கும் கேடு. காலிகளாகவும், சமூகக்கேடர்களாகவும் பலர் உருவாகக் காரணம் பெற்றோரின் பொறுப்பற்ற செயல்பாடுகளே!
ஒரு பிள்ளை தானே உழைத்துத் தன்னைக் காத்துக்கொள்ளும் தகுதி 23 வயதுக்கு மேல்தான் வரும். அதுவரை அதற்கு மேற்கண்ட தேவைகளை நிறைவு செய்ய வேண்டியது பெற்றவர் கடமை.
இந்தக் கடமையில் தவறினால் பிள்ளையின் நலம் கெடும். நலம் என்பதில் உடல்நலம், உள்ள நலம் இரண்டும் அடங்கும்.
குறிப்பாக பிள்ளைகளை 5 வயதுவரை பாதுகாத்து வளர்த்து, பின் கல்வி கொடுக்க வேண்டும். கல்வி கொடுக்க பல பெற்றோர் தவறுவதே சிறார் தொழிலாளர் உருவாகக் காரணமாகிறது.
குறைந்த கூலிக்கு வேலை செய்யும் பெற்றோர், அளவிற்கு அதிகமாய் குழந்தை பெறுவதால், வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படும். இதை ஈடுகட்ட சிறு பிள்ளைகளைக் குறைந்த கூலிக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், ஆடு மாடு மேய்த்தல், வீடு, கார் கழுவுதல், சித்தாள் என்று அனுப்பும்போது அவர்கள் கல்வி அறிவு அற்றவர்களாகின்றனர்.
அவர்கள் கல்விக்கூடங்களுக்குச் செல்லாமல், கண்டகண்ட இடங்களில் பழகும்போது, தீங்கான கெட்ட பழக்கங்கள் பற்றுகின்றன. பெற்றோர் வருவாய் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி எண்ணத் தவறுகின்றனர்.
உணவு விடுதி, கட்டட வேலை, வீட்டுவேலை, சுண்டல் விற்றல் போன்றவை சிறார் தொழிலை வளர்க்க உதவுகின்றன. சுத்தம் செய்வதும், கூவி விற்பதும் தெரிந்தால் சிறார் தொழிலாளர் வேலை சாத்தியமாகி விடுவதால் பிள்ளைகளும் எளிதில் ஈடுபடுகின்றனர்.
எனவே அரசு, பெற்றோர், தொண்டு அமைப்புகள் இதுபோன்ற இடங்களை ஆய்வுசெய்து, கற்க வேண்டிய வயதில் இப்படிப்பட்டவர்களைப் பணிக்கு அமர்த்துகின்றவர்களையும், பணிக்கு அனுப்புகின்றவர்களையும் தண்டிக்க வேண்டும்.
பிள்ளைகளை மீட்டு, அரசு தன் பொறுப்பில் எடுத்து கல்வி அளிக்க வேண்டும். சமூகத் தொண்டு அமைப்புகள் இதற்கு உதவ வேண்டும்.
சிறார் தொழிலில் ஈர்க்கப்பட சில காரணங்கள் உள்ளன:_
1. கட்டுப்பாடின்மை: கல்விக்கூடங்களுக்குச் சென்றால் பல கட்டுப்பாடு, படிப்பு, வீட்டுப்பாடம் என்று பல. இதுவே, துடைக்கவும் பெருக்கவும் சென்றால், விருப்பம் போல திரியலாம், சுற்றிவரலாம். பிஞ்சு உள்ளம் உல்லாசத்தை நாடுவதால் சிறார் தொழிலால் எளிதில் கவரப்படுகிறார்கள்.
2. வருவாய்: சிறு வயதிலே கைக்குப் பணம் வரும் வாய்ப்புக் கிடைப்பதால், அது அவர்களைப் பெரிதும் இத்தொழிலில் ஈர்க்கிறது. அப்போது கிடைக்கும் குறைந்த வருவாய் மகிழ்ச்சியில் எதிர்காலம் அழிவதை எண்ண மறுக்கின்றனர்.
3. தீய வழக்கங்கள்: கட்டுப்பாடற்ற வாழ்வு கிடைப்பதால், தீமை தரும் உல்லாசப் பழக்கங்கள் அவர்களை எளிதில் பற்றும். அவை அவர்களை ஈர்க்கவும் செய்யும். படிப்பதைவிட இது அவர்களுக்கு விருப்பமாக அமைகிறது.
தீர்வுகள்: 1. பெற்றோர் அளவோடு பெற வேண்டும்.
2. பெற்ற பிள்ளைகளைப் பொறுப்போடு வளர்த்து, படிக்கச் செய்ய வேண்டும்.
3. அரசு தரும் உதவிகளை முழுமையாய் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு அளிக்கும் உணவு, உடை, விடுதி இவற்றில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
4. சிறார் தொழிலில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய வேண்டும். மீட்டுக் கொண்டுவந்து கல்விக்கூடங்களில் சேர்க்க வேண்டும்.
5. பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த வேண்டும்.
6. கல்லூரி மாணவர்கள் சிறார் தொழிலாளர்களை மீட்பதைத் தொண்டாகச் செய்ய வேண்டும். அவ்வாறு மீட்கும் மாணவர்களை அரசும், கல்லூரியும் பாராட்ட வேண்டும்.
கல்வி என்பது மனித உரிமை. அது பறிக்கப்பட்டு சிறார் தொழிலில் ஈடுபடுவது சமூகக் குற்றம் என்பதால் சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினரும் இதில் கவனம் செலுத்தி தீர்வு காணவேண்டும்.
சிறார் தொழில் தனிநபர் பாதிப்பு மட்டும் அல்ல; அது சமூகக் கேடு, அவலம், அழிவு!