ஆறைவிட அய்ந்து பெரியது
குளிர்ச்சியை அள்ளி வீசும் பசுமையான உயர்ந்த மலை. உள்ளத்துள் ஊடுருவி இன்பத்தை ஊட்டும் ஊட்டிமலை. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி.
அங்கே வருவோரை தன் வெள்ளைக் குதிரையில் அமரவைத்து அழகு மலர்த் தோட்டத்தைச் சுற்றிக் காட்டுவது சலீமின் தொழில். அன்றைய தினம், வழக்கம் போல் தன் குதிரையைக் கூட்டிக்கொண்டு மலர்த் தோட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார் சலீம்.
குளிர் அதிகமாக இருந்ததால், போகும் வழியில் குதிரைப் பந்தய மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள கடையில் தேநீர் சாப்பிடச் சென்றார்.
குதிரையை மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் கட்டிவிட்டு, தேநீர்க் கடைக்குள் சென்றார் சலீம்.
குதிரை, வேலியின் உட்புறம் நீண்டு வளர்ந்திருந்த பச்சைப் புல்லைக் கண்டதும் தலையை உள்ளே நுழைத்து நாக்கால் புல்லை மடக்கித் தின்ன முயற்சி செய்தது.
அப்போது, அங்கே தன்னைப் போன்ற குதிரை ஒன்று கம்பீரமாக நின்றபடி புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டது.
அடடே! நீ எப்படி இந்த வேலிக்குள்ளே புகுந்து போயிட்டே…? என்று விவரம் புரியாமல் கேட்டது வெள்ளைக் குதிரை.
நான் இந்த மைதானத்திலேயே இருக்கிற குதிரை என்றது மிடுக்காக நின்ற கறுப்புக் குதிரை.
அப்படியா! இந்தப் பெரிய மைதானத்திலே என்ன செய்கிறாய்? என்றது வெள்ளைக் குதிரை.
வெள்ளைக் குதிரையை ஏளனமாய்ப் பார்த்தபடி, நான்தான் ரேஸ் குதிரை, என்னை நம்பி ஊரில் உள்ளவங்க எல்லாம் பணம் கட்டி விளையாடுவாங்க என கம்பீரமாய் பதிலளித்தது கறுப்புக் குதிரை.
ஓகோ… ஊருலெ பல பேரு உழைக்காம அதிர்ஷ்டத்தை நம்பி உன்னை மாதிரி குதிரைங்க மேலே பணத்தைக் கட்டி ஏமாந்து போறாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இன்னைக்குத்தான் நேரிலே பாக்குறேன்! என்றது வெள்ளைக் குதிரை.
சரி… என்னை யார் என்னன்னு கேக்குறியே, நீ யாரு? நீ என்ன செய்யிறே? என்று கேள்வி கேட்டது கறுப்புக் குதிரை.
நானா… பக்கத்திலே இருக்கிற மலர்த் தோட்டத்துக்கு வர்ற சுற்றுலாப் பயணிகளை என் மேலே உட்கார வெச்சு நாலு சுத்து சுத்திக் காட்டுவேன். என்னை வளக்கிறவரு அதுக்கு ஏதாவது கொஞ்சம் காசு வாங்கிக்குவாரு… என பதில் சொன்னது வெள்ளைக் குதிரை.
ஊரைச் சுத்திக் காட்டிட்டு ஏதோ அஞ்சு, பத்து சம்பாதிக்கிற ஆளா நீ?… நான் அப்படியில்லேப்பா… பந்தயத்திலே ஓடுனாப் போதும்… பல ஆயிரம், பல லட்சம்னு, முதலாளிக்கு சம்பாதிச்சுக் கொடுப்பேன். ஓட்டப் பந்தயத்திலே முதல்லே வந்துட்டாப் போதும், பாராட்டு _ பரிசு மழைதான்! என்று பந்தாவாப் பேசியது கறுப்புக் குதிரை.
மத்தவங்க மனசை மகிழ வைக்கிறதுக்காக அவங்களைத் தூக்கிக்கிட்டு சுத்திக் காட்டுறதுலே ஒரு சுகம் இருக்கு… ஆபத்து இல்லை. ஆனா, நீ செய்யிற வேலையிலே… முதல்லெ வந்தா சரி… தொடர்ந்து நாலு தடவை கடைசியா வந்தா உன்னை நம்பி யாரும் பணம் கட்டமாட்டாங்க… அது மட்டுமில்லே… கீழே விழுந்து அடிபட்டாலே உன்னைச் சுட்டுப் போட்டுடுவாங்களாமே! என்ற வெள்ளைக் குதிரையின் கேள்விக்கு ஆமாம் என்பதுபோல் தலையை ஆட்டி ஒப்புக்கொண்டது கறுப்புக் குதிரை.
நீ என்னதான் சம்பாதிச்சுக் கொடுத்தாலும், உன் முதலாளி உனக்காகப் பரிதாபப்படவே மாட்டாரு! அதற்கும் தலையை ஆட்டி ஒப்புக்கொண்டது கறுப்புக் குதிரை.
முதலாளிதான் அப்படி… உன் மாதிரி பந்தயக் குதிரைகளை நம்பி பணம் கட்டி ஏமாந்தவங்க கதை என்ன? பல பேரு பைத்தியமா அலையிறாங்க! சூதாட்டத்துக்குத் துணை போகிற உன்னை மாதிரி வாழுறதைவிட, சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து மன மகிழ்ச்சி ஏற்படுத்துற என் வேலை எவ்வளவோ உசந்தது! என்று பெருமைப்பட்டுக் கொண்டது வெள்ளைக் குதிரை.
என்ன செய்ய… குதிரையாய்ப் பிறந்துட்டா ஓடித்தான ஆகணும். நீ மனிதர்களைத் தூக்கிக்கிட்டு ஓடுறே.. நான் ஓடுனா, மனிதர்கள் பணத்தைத் தூக்கிக்கிட்டு பின்னாடி ஓடி வர்றாங்க! நானா விரும்பி இந்த வேலையெச் செய்யலே, மனிதரை அண்டிப் பிழைக்க வேண்டி இருக்கிறதுனாலே செய்கிறேன்! வருத்தமாய்ச் சொன்னது கறுப்புக் குதிரை.
எல்லாத்தையும் மாத்தத் தெரிந்த மனிதனுக்கு, சூதும் வாதும் செய்யாமெ சுகமா வாழ மனசை மாத்திக்கத் தெரியலயே… ஆறறிவு படைச்சதாலேயே அனைத்தையும் ஆட்டிப் படைக்கிற மனிதன், அய்ந்தறிவு படைச்ச நம்மை அவன் வசதிக்கு ஏத்தபடி மாத்துறான். நாமும் அவனுக்கு ஏத்தபடி மாறி, பலனை எதிர்பார்க்காம உழைச்சு உழைச்சு சாதிக்கிறோம். இதைப் பார்க்கும்போது, ஆறைவிட அஞ்சுதான் பெரிசாத் தெரியுது! என்றது வெள்ளைக் குதிரை.
அதற்குள் தேநீர் அருந்திவிட்டு வந்த சலீம், தன் குதிரையைப் பற்றிச் சென்றார்.
வெள்ளைக் குதிரை போகும் வழியைப் பார்த்தபடி உறுத்தலோடு நின்றது கறுப்புக் குதிரை.