கோ-ரைட்டர் ரோபோ
கடந்த இதழில் யார் இவர் என்று கேட்டிருந்தோமே! அவர்தான் இவர்!
பிஞ்சுகளே, உங்கள் கையெழுத்து (Hand Writing) நன்றாக இல்லை என்று எல்லோரிடமும் திட்டு வாங்குகிறீர்களா? அல்லது அதற்கென்று டியுசன் சென்று கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்க. உங்களுக்கு அழகாக எழுதச் சொல்லிக் கொடுக்க மனித உருவத்தில் உள்ள ரோபோ வந்துவிட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஈகோலி பாலிடெக்னிக் பெடரல் டி லாசன்னே என்ற தொழில்நுட்ப மய்யத்தின் ஆராய்ச்சியாளர்களால் மனித உருவ ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ 6 வயது முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளின் எழுதும் திறமையைப் புரிந்துகொண்டு, எழுதும் திறனை மேம்படுத்தும் திறமை படைத்தது.
ரோபோவின் கண்களில் உள்ள கேமரா மற்றும் உணர் கருவிகளின் உதவியுடன் மாணவர்கள் எழுதும்போது ஏற்படும் பிழைகளைக் கண்காணிக்கும். எடுத்துக்காட்டாக ரி என்ற எழுத்தை எங்கிருந்து தொடங்கி எப்படி முடிக்க வேண்டும் என்ற எழுதும் முறை உள்ளதல்லவா, அதுபோல எல்லா எழுத்துகளையும் வார்த்தைகளையும் குழந்தைகள் சரியாக எழுதுகிறார்களா என்று கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
தவறாக எழுதினால், உடனே ரோபோ டேப்லட்டின் திரையில் முறையாக எழுதிக் காட்டிச் சரி செய்யும். வார்த்தைகளின் இடையே ஒரு எழுத்தை வேறு விதங்களில் எப்படி மாற்றி எழுதலாம், அழகான கையெழுத்து அமைய எப்படி எழுத வேண்டும் என்ற நுணுக்கங்களும் ரோபோவால் கற்றுக் கொடுக்கப்படும்.
பள்ளிகளில் வகுப்பு நடைபெறும்போது ஆசிரியருடன் இணைந்து மாணவர்களின் எழுதும் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் கோ_ரைட்டர் ரோபோவினைப் பயன்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.