அலெக்ஸ் நடந்து 50 ஆண்டுகள் ஆச்சு!
விண்ணில் நடந்த முதல் மனிதரான அலெக்ஸி லியோனோவ் (Aleksei Leonov) என்பவர் விண்வெளிக்குச் சென்ற 17வது விண்வெளி வீரர் ஆவார். இவர் ரஷியாவின் விமானப்படையில் பைலட்டாகவும், ஜெனரலாகவும் பணிபுரிந்தவர். இவர் 1934ஆம் ஆண்டு மே 30ஆம் நாள் ரஷியாவில் பிறந்தார்.
விமானப் படையைச் சேர்ந்த 20 பைலட்டுகளை விண்வெளி வீரர்களாக 1960ஆம் ஆண்டில் தேர்தெடுத்தனர். அதில் இவரும் ஒருவர்.
வோஸ்காட் _ 2 என்கிற விண்கலம் மார்ச் 18, 1965 அன்று விண்வெளிக்கு ஏவப்பட்டது. அதில் அலெக்ஸி லியோனோவ் மற்றும் பையயேவ் (Beiyayev) ஆகியோர் பயணம் செய்தனர். பையயேவ் இதன் பைலட்டாக செயல்பட்டார். அலெக்ஸி விண்கலத்தை விட்டு வெளியே வந்தார்.
அவர் மார்ச் 18, 1965ஆம் ஆண்டில் விண்வெளியில் நடந்தார். இது மனித வரலாற்றின் முதல் சாதனையாகும். இது மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.
இவர் விண்வெளியில் 12 நிமிடங்கள் 9 நொடிகள் நடந்தார். இவர் விண்கலத்திலிருந்து 5.35 மீட்டர் நீளம் கொண்ட ஒரு கயிற்றால் (Tether) இணைக்கப்பட்டிருந்தார். இவர் 12 மீட்டர் தூரம் நடந்தார். மேலும் சில உடற்பயிற்சி-களையும் செய்தார். இவர் விண்வெளியில் நடக்க வேண்டும் என்பதற்காக 18 மாதங்கள் தரையில் உள்ள பயிற்சிக்கூடத்தில் எடையற்ற நிலையில் பயிற்சி எடுத்திருந்தார்.
அதனால் இவர் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தார். இது விண்வெளியில் நடந்த நிகழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் முதல் அடியாகும். மனிதன் விண்வெளியின் வெற்றிடத்தில் வேலை செய்ய முடியும் என்பதை இது நிரூபித்தது. இந்த விண்கலம் பூமியை 17 முறை சுற்றியது. வீரர்கள் விண்வெளியில் 26 மணி நேரம் இருந்தனர். பின்னர் பூமி திரும்பினர்.
மனிதன் விண்ணில் நடந்தே 50 ஆண்டுகள் ஆயிற்று! நம் ஊரில் தான் இன்னும் பல இடங்களில் மனிதன் நடக்க ஜாதி தடை சொல்கிறது. நம் தலைமுறையில் தான் அதை உடைக்கவேண்டும்.