உழைக்கும் ரோபோக்களே ஒன்று சேருங்கள்
சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்ற எறும்பினை மாதிரியாகக் கொண்ட ரோபோ ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்-பட்டுள்ளது. ஒரு மனிதனின் உள்ளங்கை அளவில் இருக்கும் இந்த ரோபோக்கள் தொழிற்சாலைகளின் நாளைய தொழிலாளர்கள் எனலாம்.
எறும்பைப் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த ரோபோக்களின் கால்கள் மிகவும் நுட்பமாகவும் நேர்த்தியாகவும் வேலைகளைச் செய்து முடிக்கும். ஆறு தனித்தனிப் பகுதிகளாக கால்கள் இணைக்கப்பட்டுள்ளதால் வேலையின் தேவைக்கு ஏற்ப ரோபோவால் தன்னை மாற்றிக்கொள்ள முடியும்.
குழுவாக ஒரு வேலையைச் செய்யும்போது தங்களுக்குள் ஒருங்கிணைப்புடனும் ஒத்துழைப்புடனும் நடந்துகொள்ளும் சிறப்புத் திறன் உடையன. இதன் தலைப்பகுதி பொருள்களைப் பற்றிப் பிடிக்கவும் பிற ரோபோக்களுடன் இணைந்து செயல்படவும் துணைபுரிகிறது.
எடுத்துக்காட்டாக, சரக்குகளை இடமாற்றம் செய்ய வேண்டுமெனில் ரோபோக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து தேவையான எண்ணிக்கையில் கூடி அந்தச் செயலைச் செய்து முடிக்கின்றன. ரேடியோ அலைகள் மூலமாக வயர் இல்லாமலே ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு செயல்-படுகின்றன.
எறும்புகள் உணவு சேகரிக்கும்போது எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகின்றனவோ அதுபோல ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளும் இயல்புடையன.
பல தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள எறும்பு ரோபோக்கள் குறைந்த மின்சக்தியில் இயங்கக்கூடியன.