ரோவனின் கேள்வி
காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் ரோவன் ஹன்சென். 11 வயதாகும் ரோவன் பிரிட்டனில் வசித்து வருகிறார். டி.சி. காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படிக்கும் ரோவனுக்கு திடீரென்று மனதினுள் ஒரு கேள்வி தோன்ற, டி.சி.காமிக்ஸ் பதிப்பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,ஆண் குழந்தைகளைப் போலவே பெண்களாகிய நாங்களும் சூப்பர் ஹீரோ காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படிக்கிறோம். சூப்பர் ஹீரோவாக ஏன் நீங்கள் பெண்களைக் கொண்டு வருவதில்லை? இந்த விஷயம் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படங்களோ, காமிக்ஸ் புத்தகங்களோ ஆண்களையே சூப்பர் ஹீரோவாகக் காட்டுவது கொஞ்சம்கூட நியாயமில்லை. உங்கள் புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. ஆனால், பெண்களையும் ஹீரோக்களாகக் கொண்டு வந்தால் இன்னும் அதிகம் விரும்புவோம் என தனது வருத்தத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ரோவனின் கடிதத்திற்குப் பதிலாக வந்த பதிப்பாளரின் கடிதத்தில் காமிக்ஸ் புத்தகங்களில் பெண்களை ஹீரோவாகக் கொண்டு வருவது கடினமான செயல்தான். எனினும், கண்டிப்பாகக் கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டிருந்ததுடன், ரோவனைப்போல ஒரு பெண் சூப்பர் ஹீரோவும் படமாக வரைந்து அனுப்பப்பட்டிருந்ததாம். அந்தக் கடிதத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ரோவன்.