புதிய முயற்சி
கடந்த இதழில் நாம் அறிவித்தபடி முதல் கதையை எழுதி அனுப்பியவர்களில் மீனா எழுதிய கதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிவிட்டு வந்த பிங்கியை மரத்தடியில் நின்று எதிர்பார்த்துக் காத்திருந்த பாங்கி கடைசித் தேர்வு நல்லா எழுதினயா? என்றான். நான் நல்லா எழுதியிருக்கேன்.
நீ எப்படி எழுதியிருக்க, சீக்கிரமே எழுதி முடிச்சிட்டியா? என்றாள். ம்… எழுதியிருக்கேன்… இப்பத்தான் வந்தேன் என்றான். ஏய், விடுமுறைக்கு நீ சீனா போறயா அல்லது…. என்று பிங்கி கேட்டுக் கொண்டிருந்தபோதே சீனா போகலப்பா, எப்ப தமிழ்நாட்டுக்கு வந்தோமோ அப்பவே இதுதான் எங்க நாடு, நீங்க எல்லோரும்தான் என் உறவினர் என்றான்.
கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பாங்கி, நம்ம விடுமுறையை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று பேசியபடியே நண்பர்கள் இருவரும் பிற நண்பர்களிடமிருந்து விடைபெற்று பள்ளியைவிட்டு வெளியில் வந்தனர்.
தயாராக நின்றுகொண்டிருந்த ஆட்டோ மாமாவின் ஆட்டோவில் ஏறினர். மாமா ஒரு வழியா இந்த ஆண்டிற்கான தேர்வுகளை முடித்துவிட்டோம். கயல், முகில் இருவரும் இன்னும் வரலையா? என்று வினவினாள் பிங்கி. விடுமுறை முடியும்வரை நண்பர்களை அடிக்கடிப் பார்க்க முடியாதல்லவா? அதான் பேசிக் கொண்டிருப்பார்கள். அவங்க பேசிவிட்டு வரும்வரை நாம விடுமுறையில் என்ன செய்யலாம் என்று யோசிப்போம் என பாங்கி கூறினான்.
மூளைக்கு வேலை கொடுத்த பிங்கி, டேய் அறிவியல் ஆசிரியையிடம் சொல்லாமலே வந்துட்டோம். வா, கயல், முகில் வருவதற்குள் எல்லா ஆசிரியர்களையும் பார்த்துவிட்டு வந்துடுவோம் என்றதும் இருவரும் ஆட்டோவிலிருந்து துள்ளிக் குதித்து ஓடினர்.
வகுப்புத் தோழர்கள் அனைவரும் அறிவியல் ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் தாங்களும் இணைந்து கொண்டனர். விடுமுறையினை எப்படியெல்லாம் பயனுள்ள வகையில் கழித்துவிட்டு அய்ந்தாம் வகுப்பிற்கு வரும்போது மூளையைப் புத்துணர்ச்சியூட்டி வரவேண்டும் என்று கூறியதை அனைவரும் ஏற்றுக்கொண்டு கிளம்பினர்.
பாங்கியும் பிங்கியும் ஆட்டோவிற்கு வந்தபோது கயலும், முகிலும் இவர்களுக்காகக் காத்திருந்தனர். என்ன, அய்ந்தாம் வகுப்பிற்கான பாடங்களை இப்போதே படித்துத் தயாராகச் சொன்னாரா ஆசிரியர் என ஆட்டோ மாமா கேட்டதும், இல்லையில்லை, நல்லா ஜாலியா இருக்கச் சொன்னாங்க என்றாள் பிங்கி. உடனே கயலும் முகிலும் தங்கள் வகுப்பு ஆசிரியையும் அப்படியே சொன்னதாகக் கூறினார்.
அப்ப தினமும் சுற்றுலாதானா, எங்கெல்லாம் போகப் போறீங்க என்றார் ஆட்டோ மாமா. இனிமேல்தான் மாமா திட்டமிடணும் என்றனர். கயலும் முகிலும் தங்கள் சொந்தக் கிராமத்திற்குச் செல்லப் போவதாகக் கூறினர். பிங்கியின் வீடு முதலில் வந்ததும் இறங்கத் தயாரானாள்.
அவள் வரும் நேரத்தையறிந்த பிங்கியின் செல்லத் தம்பியான இங்கி வழிமேல் விழிவைத்துக் காத்திருந்து ஆட்டோவைப் பார்த்ததும் ஓடிவந்து பிங்கியை நெருங்கி தன் அன்பை வெளிப்படுத்தியது. பிங்கியும் இங்கியும் ஆட்டோவிலிருந்த அனைவருக்கும் விடைகொடுத்ததும் ஆட்டோ கிளம்பியது. பாங்கி, நாளைக்கு வீட்டுக்கு வா, நம்ம விடுமுறையைத் திட்டமிடலாம் என்றதும், சரி சரி என கையசைத்தான்.
ஆனால் விடுமுறையில் என்ன செய்யலாம் என அவர்கள் திட்டமிடுவதற்கு முன்பே அவர்களுக்கு அதே ஊரில் நிறைய வேலைகள் காத்திருந்தன. அவர்களுக்கு எந்தவிதமான பணிகள் காத்திருந்தன என்பதை நீங்கள் சிந்தித்துக் கதை ஆக்குங்கள். சிறந்த கதைகளிலிருந்து ஒன்று தேர்வாகி வெளியிடப்படும்.