வேகம் வேகம் போகும் தூரம்…
மிதிவண்டி ஓட்டும்போது ஒரு கையை விட்டு ஓட்டுவது, இரு கைகளையும் விட்டுவிட்டு ஓட்டுவது, முன்சக்கரத்தை உயர்த்திச் செல்வது என்ற சாகசங்களைச் செய்திருப்பீர்கள்.
E T படத்தில் வருவதுபோல உங்கள் மிதிவண்டி பறந்து சென்றால் எப்படி இருக்கும்?
இந்தக் கற்பனையினை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உண்மையாக்கியுள்ளனர். உலகின் முதல் பறக்கும் மிதிவண்டியினை வடிவமைத்து எக்ஸ்ப்ளோரர் பாரவெலோ என்று பெயரிட்டுள்ளனர்.
கிளைடர் விமானம் போலவும், சாதாரண மிதிவண்டி போலவும் பயன்படுத்தும் வசதி கொண்ட பறக்கும் மிதிவண்டியில் இரு பிரிவுகள் உள்ளன. சாதாரண மிதிவண்டியின் பின்புறம் உயிரி எரிபொருளில் இயங்கும் பெரிய விசிறி பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பாராசூட் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.
மிதிவண்டியானது மேலே எழும்பிப் பறக்க, கால்பந்து விளையாட்டு மைதான அளவிற்கு காலி இடம் இருந்தால் போதும், உயிரி எரிபொருளில் பொருத்தப்பட்டுள்ள பெரிய விசிறியின் மூலம் மூன்று மணி நேரம் வரை பறக்கலாம். வானில் 25 கி.மீ. முதல் 40 கி.மீ வேகம்வரை செல்லும் இந்த மிதிவண்டியில் 4,000 அடி உயரம்வரை பறக்கலாம்.
சாகசங்கள் செய்ய விரும்புவோர் பாராசூட்டைக் கூடாரமாகப் பயன்படுத்தவும் மிதிவண்டியில் ஒரு ரவுண்டு செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பறக்கும் மிதிவண்டியில் செல்வதற்கு உரிமம் (லைசென்ஸ்) தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. மடக்கும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லலாம். இரண்டு ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய பறக்கும் சைக்கிள் ரூபாய் 48,02,589.70 (50,000 பவுண்ட்) செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.