பிரபஞ்ச ரகசியம் 22
பிரபஞ்ச ரகசியத் தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு புதிய தகவல்களை நாம் தொடர்ந்து படித்து வருகிறோம். விண்மீன்களில் இருந்து நமக்குக் கிடைக்கும் பல்வேறு தனிமங்கள் பற்றிப் படித்து இருக்கிறோம்.
இவற்றில் பல நாம் அறிந்த வாயுக்களான ஆக்ஸிஜன், கார்பன், ஹைட்ரஜன் அலோகங்களான பாஸ்பரஸ், சோடியம், போன்றவற்றுடன் உலோகங்களான இரும்பு, தங்கம் உருவாவது குறித்து அறிந்திருந்தோம்.
ஆனால் இவை மட்டுமே விண்மீன்களில் இருந்து உருவாவதில்லை, கண்களுக்குப் புலனாகாத பொருள்கள் பல வெளியாகின்றன. அவற்றைக் கதிர்கள் என்று அழைக்கிறோம்.
எடுத்துக்காட்டாக பகல் நேரத்தில் வெட்டவெளியில் சூரிய வெளிச்சத்தில் நின்றால் நமது உடல் வெப்பதை உணர்கிறதல்லவா? இந்த வெப்பம் எங்கிருந்து வருகிறது? அதே நேரத்தில் பவுர்ணமி அன்று பகல்வெளிச்சம் போல் காணப்படும் நிலவில் இருந்து நாம் ஏன் அந்த வெப்பத்தை உணருவதில்லை.
காரணம், சூரியனில் இருந்து நேரடியாக ஒளி நம்மீது படுவதால் நாம் வெப்பத்தை உணருகிறோம். அதே நேரத்தில் அந்த ஒளியை நிலவு வாங்கி நமக்கு அனுப்புவதால் நாம் அந்த வெப்பத்தை உணருவதில்லை. சூரியனில் இருந்து வெப்பக்கதிர்கள் நமக்குக் கிடைக்கின்றன.
சூரியனில் இருந்து நாம் உணரும் வெப்பம் மட்டுமல்ல, நாம் உணராத பல்வேறு கதிர்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நமது சூரியன் சிறிய அளவிலான விண்மீன் ஆகும். நமது சூரியனைவிட பெரிய விண்மீன்கள் உள்ளதை நாம் படித்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக கனீஸ் மேஜர்.
இந்த விண்மீன்களில் இருந்து வெளிவரும் நமது கண்ணிற்குத் தெரியாத கதிர்களை பெருவெளிக்கதிர்கள் என்று கூறுவோம். ஆங்கிலத்தில் காஸ்மிக் ரேய்ஸ் என அழைப்பார்கள். இந்த பெருவெளிக் கதிர்களில் பல்வேறு வகைகள் உண்டு. நாம் உணரும் வெப்பக் கதிர்கூட பெருவெளிக் கதிர்களில் ஒன்றுதான்.
அதே நேரத்தில் நாம் உணரும் வெப்பதைப் போன்று அனைத்துக் கதிர்களும் நமக்கு நன்மையளிப்பதில்லை. மிகவும் ஆபத்தான கதிர்களும் பெருவெளி முழுவதும் பாய்ந்து கொண்டே இருக்கின்றன. நமது விண்வெளி வீரர்களின் ஆடைகள் இந்தக் கதிர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்படுகிறது.
இந்தக் கதிர்களினால் அவர்கள் பாதிக்கப்பட்டால் சில வினாடிகளில் உயிரிழக்க நேரிடும். அப்படி என்றால் நமது பூமியும் இந்தக் கதிர்களால் பாதிக்கப்படுகிறதா என்றால், ஆம், ஆனால் இந்தப் பூமியானது அந்தக் கதிர்கள் புவியின் தரையை அடையாதவாறு பல்வேறு பாதுகாப்பு மண்டலங்களை இயற்கையிலேயே உருவாக்கியுள்ளது.
மின்காந்தக் கதிர்கள்
சூரியனில் இருந்து வெப்பத்திற்கு அடுத்து நாம் உணரும் மற்றொரு கதிர் மின்காந்தக் கதிர்கள். முந்தைய தொடர்களில் சூரியனில் இருந்து உமிழும் மின்காந்த அலைகள் பற்றிப் படித்தோம். இந்த அலைகள் அனைத்துக் கோள்களையும் கதிர்களாக அவ்வப்போது தாக்கிக்கொண்டே உள்ளன, இந்தக் கதிர்கள் புதன் மற்றும் வெள்ளிக்கோள்களை மிகவும் அதிகமாகப் பாதிக்கின்றன.
இங்கு வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் நமது பூமியின் வளிமண்டலத்தில் இந்த மின்காந்தக் கதிர்களைத் தடுக்கும் அயனிகள் உள்ளன. முக்கியமாக இவை நமது வட மற்றும் தென் துருவத்தில் அதிகமாக உள்ளன. அவ்வப்போது மிகவும் ஆக்ரோஷமாக சூரியனில் இருந்து வெளிப்படும் மின்காந்தக் கதிர்கள் சில நிமிடங்களில் நமது பூமியை அடைந்துவிடும்.
இந்த மின்காந்தக் கதிர்கள் நமது பூமியின் வளிமண்டலத்தில் உள்ள அயனிகளுடன் மோதும்போது நேர் எதிர் மின் அயனிகளாக மீண்டும் அந்த மின்காந்தக் கதிர்களை புவிக்கு வெளியே அனுப்பிவிடும். வட தென் துருவங்களில் இந்த அறிவியல் அற்புதத்தைக் காணலாம்.
வட, தென் துருவங்களில் மின்காந்தக் கற்றைகள் அதிக அளவில் இறுக்கமாகக் காணப்படுவதால் சூரியனில் இருந்துவந்த மின்காந்தக் கதிர்களில் நேர், எதிர் அயனிகள் இந்த மின்காந்த அயனிகளுடன் மோதி மீண்டும் விண்வெளிக்கு விரட்டப்படும். அப்போது பல்வேறு வண்ணங்களில் வானில் விந்தையாகக் காட்சியளிக்கும் அதனை நாம் ஒரானோ போரியாலிஸ் துருவங்கள் கொண்டாடும் திருவிழா என்று அழைக்கிறோம்.
காரணம், நாம் விழாக் காலங்களில் பட்டாசுகள் வெடித்து பல்வேறு வண்ணங்களில் சிதறுவதைக் கண்டிருக்கிறோம். அதேபோல்தான் துருவங்களின் வானவெளியில் பல்வேறு வண்ணங்களில் இந்த ஒரானோ போரியாலிஸ் தெரிகிறது.
இந்த அயனிச் சிதைவினால் நமக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. முக்கியமாக இந்த அயனிச் சிதைவின் மூலம் சில தனிமங்களில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு அவை மழைபொழியும் போது நமது பூமியின் தரைத் தளத்தை வந்தடைகிறது. அப்படி வந்தடையும் போது தாவரங்கள் அவற்றை எடுத்துக்கொண்டு நமக்குத் தேவையான உணவுப் பொருளாக மாற்றித் தருகின்றன.
எடுத்துக்காட்டாக தாவரங்களில் உள்ள சில ஊட்டச்சத்துகளை பல்வேறு தாவரங்கள் நேரடியாக நமக்குத் தேவையான உணவாக மாற்றித் தருவதில்லை. ஆனால் ஒரு சில தாவரங்கள் இந்த ஊட்டச்சத்துகளை நமது உடலுக்குத் தேவையான சத்தாக மாற்றித் தருகின்றன.
எடுத்துக்காட்டாக, நாம் உணவிற்குப் பயன்படுத்தும் கீரைகள் இந்த அயனி மாற்றத்தால் நமக்குப் பலன் தருகின்றன. அதே நேரத்தில் நாம் அனைத்துத் தாவரங்களின் இலைகளையும் பயன்படுத்த முடியாதல்லவா? அதே நேரத்தில் இலைகளைத் தவிர பழங்களாகவும், விதைகளாகவும் ஊட்டச்சத்துகளை மாற்றி நமக்குத் தருகின்றன.
கதிர்கள் விண்மீன்களில் இருந்து உருவாகின்றன. விண்மீன்களில் இருந்து வெளிவந்த அனைத்துப் பொருள்களிலும் இந்தக் கதிர்வீச்சுகள் உள்ளன. எடுத்துக்-காட்டாக, நாம் பயன்படுத்தும் அனைத்து உலோகங்களில் இருந்தும் கதிர்வீச்சு வெளிவந்துகொண்டே இருக்கும்.
உலோகங்கள் அலோகங்கள் மற்றும் இதரப் பொருள்கள் அனைத்திலும் கதிர்வீச்சு வெளிவந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இவை மிகவும் குறைந்த அளவு கதிர்வீச்சைக் கொண்டுள்ளதால் பூமிக்கோ, பூமியில் வாழும் நமக்கோ பாதிப்பு ஏற்படுவதில்லை. ஒரு பொருளில் இருந்து கதிர்வீச்சு முற்றிலும் மறைய கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
நமது உடலில் இருந்து வெளிவரும் வெப்பம்கூட ஒரு கதிர்வீச்சுத்தான். நமது உடலில் இருந்து மின்காந்த அலைகள் வெளியாகின்றன. நவீன உளவுக் கருவிகளின் மூலமாக குற்றவாளிகள் பயன்படுத்திய பொருள்களை வைத்து, அதில் வெளியாகும் கதிர்களைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து விடலாம்.
நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் விண்கற்கள் அனைத்திலும் கதிர்வீச்சுகள் உண்டு. குறிப்பிட்ட விண்வெளியில் இருந்து பூமியில் விழும் எரிகற்களிலும் தனிப்பட்ட குணநலன்கள் உண்டு. இந்தக் குணநலன்கள் அனைத்தையும் அக்கற்களில் இருந்து வெளிப்படும் கதிர்களைக் கொண்டு எளிதில் கண்டறிந்துவிடலாம்.