சும்மா மொக்க போடாதீங்க!
இந்தப் பேரண்டத்தில் தனிமை என்பது எதுவும் _ யாருக்கும் இல்லை. தனியாக இருக்கிறோமே என்று சிலர் துன்பப்படுவது உண்டு. தனிமையிலே இனிமை காண முடியுமா? என்றெல்லாம் பாட்டு வேறு.
தனிமையிலே இனிமை காண முடியும் என்பது மட்டுமல்ல, தனிமையென்றே எதுவும் கிடையாது. அது எப்படி? இங்கு மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்திலேயே தனிமை என்று ஒன்றில்லை.
பக்கத்து வீட்டில் இருக்கும் சின்னஞ்சிறு குழந்தையைக் கூர்ந்து கவனியுங்கள். தனிமை பொய்யென்று புரியும். ஜன்னலைத் திறந்து பாருங்கள். அடுத்திருக்கும் மரத்தில் இருக்கும் ஒரு குருவி அல்லது அணில் அதுவும் இல்லையென்றால் காலடியில் வரிசையாகக் கடக்கும் எறும்புகள் _ இவற்றைக் கூர்ந்து கவனித்தால் நீங்கள் மட்டும் இந்த பூமியில் இல்லையென்பது புரியும்.
இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல. உயிர்கள் மட்டுமல்ல, காற்றில்கூட அறிவியல் இருக்கிறது. காற்றைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இயக்க ஆற்றலைக் கொடுப்பது. இப்படி எல்லாம் சிந்தித்தால் தனிமை என்று ஒன்றுண்டா? இப்படித்தான் அறிவியல் அறிஞர்கள் சிந்தித்து பலப்பல கண்டுபிடிப்புகளை நமக்குத் தந்தார்கள்.
பகலில் சரி, இரவில்…? அடேயப்பா… இரவில்தான் அதிகம். ஒரே ஒரு மின்மினிப் பூச்சியைப் பார்த்துவிட்டால் உங்களுக்-குள்ளேயே பூ பூத்துவிடும். பிறகு, விண்மீன்கள், நிலவு… இரவில் வாய்ப்பு இருக்கிற இடத்தில் மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், இப்பரந்த பேரண்டத்தின் இயக்கத்தையே கூட உணர முடியும்.
அப்படியா? என்று ஆச்சர்யப்-படுகிறீர்களா?. அடுத்த முறை இரவில் விண்மீன்களைப் பாருங்கள். ஒரு விண்மீன் என்பதில் சராசரியாக 2,70,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ளது. வீட்டில் கொதிக்கிற நீரின் வெப்பம் வெறும் 100 டிகிரி செல்சியஸ்தான். கற்பனை செய்ய முடிகிறதா விண்மீனின் வெப்பத்தை? இது நீலம், வெள்ளை, மஞ்சள், சிவப்பு என்ற நான்கு நிறங்களில் இருக்கும்.
இந்த வண்ணங்களை வைத்து விண்மீன்களின் வயதைத் தெரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு, நீல வண்ணத்தில் உள்ளவை அண்மையில் உருவானவை. வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்கள் முறையே விண்மீன்களின் வயதை படிப்படியான வயதைக் குறிப்பவை. சிவப்பு என்பது விண்மீனின் இறுதிக் காலத்தைக் குறிப்பது.
அந்த வயதை அறிவியலாளர்கள் செம்பூதம் என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடுகிறார்கள். இப்படி எண்ண எண்ண, எண்ணத் தொலையாத சிந்தனைகள், கற்பனைகள். நாம் இந்த பிரபஞ்சத்தின் துளியிலும் சிறுதுளி! அவ்வளவுதான். பிறகு நாம் எப்படி தனிமையில் இருப்பதாக நினைத்துக் கொள்வது?
சரி, இதைப்பற்றி பிறகுகூட சிந்தித்துக் கொள்ளலாம். அதற்கு முன் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். விண்-மீன்களுக்கு மட்டும்தான் வயதைக் கண்டுபிடிக்க முடியுமா? இல்லையில்லை… இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் கண்டுபிடிக்க முடியும்.
கண்டுபிடிக்கணும், கண்டுபிடிக்கணும்னு சொல்றீங்களே? நம்ம வயசுதான் நமக்குத் தெரியுமே? அதை எதுக்கு கண்டுபிடிக்கனும்? ம்…. இது நல்ல கேள்விதான். உயிரோடு இருக்கும்போதுதான் நமக்கு வயசு தெரியும். இறந்த பிறகு, என்னது! இறந்த பிறகா? இறந்தபிறகு எதுக்கு வயசு தெரியனும்? நமக்கு தேவையில்லை. வரலாற்றுக்கு!!!
யப்பா… ரொம்பக் கடிக்கிறீங்க… ஆங்… கடிக்கிறீங்கன்னு சொன்னதுமே ஒன்று நினைவுக்கு வருது. மனுசனோட பல்லை வைச்சு வயசு கண்டுபிடிக்கலாம் தெரியுமா?