உலகின் பெரிய கப்பல்
உலகின் பெரிய கப்பல்
மழை பெய்து முடித்து தெருக்களில் தண்ணீர் ஓடும்போது காகிதத்தில் கப்பல் செய்து தண்ணீரில்விட்டு விளையாடி இருப்பீர்கள். அப்போது முதலில் யார் கப்பல் செல்கிறது என்பதில் மகிழ்ச்சி ஏற்படுவதோடு, யார் செய்த கப்பல் பெரியது என்ற எண்ணம் உருவாகியும் பேசி மகிழ்ந்திருப்பீர்கள் அல்லவா?
அதேபோல கடலில் செல்லும் கப்பல்களை வடிவமைத்து உருவாக்கும் நிறுவனங்களுக்-கிடையே தோன்றிய எண்ணத்தில் உருவானது-தான் ப்ரீலூட் கப்பல். கடலில் உள்ள எண்ணெய் கிணறுகளி-லிருந்து இயற்கை எரிவாயுவை எடுத்து அதனைச் சேமிக்கும் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ப்ரீலூட் கப்பலே உலகின் மிகப் பெரிய கப்பல் என்ற பெருமையினைப் பெற்றுள்ளது.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஷெல் ஆயில் நிறுவனத்துக்காக தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் ஹெவி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கட்டமைத்துக் கொடுக்க உள்ளது.
1601 அடி நீளமும் 243 அடி அகலமும் 360 அடி உயரமும் கொண்ட ப்ரீலூட் கப்பல், பாரம் ஏற்றப்பட்ட பின் 6 லட்சம் டன் எடை இருக்கும். ஆண்டுக்கு 3.6 டன் இயற்கை எரிவாயுவினை உற்பத்தி செய்யும். கடலில் இருக்கும் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுத்து அதனை _3260 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் சேமிக்கும் கட்டமைப்பு வசதிகள் கப்பலினுள் உள்ளன.
175 நீச்சல் குளங்களுக்கு நிகரான அளவு இயற்கை எரிவாயு சேமிப்புத் தொட்டிகளைத் தன்னுள் கொண்டுள்ள இதில், சூறாவளி மற்றும் மோசமான வானிலைகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்புப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பார்ஜர் எனப்படும் இழுவைக் கப்பல்கள் மூலமாகவே இதனை இழுத்துச் செல்ல முடியும். 2017ஆம் ஆண்டு முதல் இந்தக் கப்பலில் எரிவாயு உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.