மணிக்கு 603 கி.மீ
மெட்ரோ ரயில், மோனோ ரயில், புல்லட் ரயில் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் நாட்டில் மணிக்கு சுமார் 200 கி.மீட்டர் வேகம் வரை செல்லக்கூடியன விரைவு ரயில்கள் என்று தெரிந்திருப்பீர்கள்.
ஜப்பான் நாட்டின் ஹோண்சூ மண்டலத்தின் சுபு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாக்லேவ் ரயில் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 603 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. முதல் சோதனை ஓட்டத்தின்போது 590 கிலோ மீட்டர் வேகத்திலும், இரண்டாவது சோதனை ஓட்டத்தின்போது 603 கிலோ மீட்டர் வேகத்திலும் சென்று மாக்லேவ் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
யமனாஷி பகுதியில் உனோஹாரா மற்றும் ஃபியூபியூகி இடையில் 42.8 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த இருப்புப் பாதை அமைக்கப்-பட்டுள்ளது. சோதனை ஓட்ட வழித்தடத்தில் உள்ள சுரங்கப்பாதையில் மணிக்கு 603 கிலோமீட்டர் வேகத்தில் 42.8 கிலோமீட்டர் தொலைவை மாக்லேவ் கடந்துள்ளது.
இந்த ரயிலில் சக்கரங்கள் கிடையாது. காந்த விசை மூலமாக தண்டவாளத்தின் மேலே மிதந்துசெல்லும் தொழில்நுட்பத்தைக் கொண்டது. ஜப்பானில் தற்போது செல்லும் புல்லட் ரயில்கள் மணிக்கு 320கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியன.
1000 பேர்வரை பயணம் செய்யக்கூடிய மாக்லேவ் ரயில் 2027ஆம் ஆண்டு மக்களுக்குச் சேவை செய்ய வருகிறது.