பிரபஞ்ச ரகசியம் 23
காமா கதிர்கள் இப்பெருவெளியில் வீசும் கதிர்வீச்சு பற்றி நாம் கடந்த தொடரில் படித்திருந்தோம், அந்தக் கதிர்வீச்சு வரிசையில் காமா கதிர்களும் மிகவும் ஆபத்து நிறைந்த ஒன்றாகும். காமா கதிர்கள் நமது சூரியக் குடும்பத்தின் எல்லையை அடைய நேர்ந்தால் ஒட்டுமொத்த சூரியக் குடும்பமே ஆபத்தில் சிக்கிவிடும்.
விண்மீன் வெடிப்பில் சூப்பர் நோவா, ஹைபர் நோவா என்று பார்த்திருக்கிறோம். ஹைபர் நோவா என்பது மிகப்பெரிய விண்மீன்கள் வெடிக்கும்போது ஏற்படுவது. இது சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுவதுண்டு. நமது சூரியக் குடும்பத்திற்கு அருகில் மிகப் பெரிய விண்மீன்கள் எதுவும் இல்லை.
அதேபோல் நமது பால்வெளி மண்டலத்தில் இன்னும் 6000 கோடி ஆண்டுகள் வரை எந்த ஒரு ஹைபர் நோவா வெடிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று அறிவியலார் கூறுகின்றனர். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த சில ஹைபர் நோவா விண்மீன்களில் இருந்து வெளிப்பட்ட காமா கதிர்கள் மிகவும் வலுவிழந்து பெருவெளி எங்கும் பரவிக் கொண்டு இருக்கிறது.
இத்தகைய காமா கதிர்வீச்சுகள் நமது சூரியக் குடும்பம் மாத்திரமல்ல, வேறு எங்கேனும் உயிரினம் வாழ்ந்தால் அவற்றைச் சிதைக்கும் ஆற்றல் கொண்டவைகளாகும். ஒரு செல் உயிரினங்கள் வேறு கோள்களில் இருந்தால் அந்த செல் உயிரினத்தின் டி.என்.ஏ_வைப் பாதித்து வளர்சிதை மாற்றத்தைக் கொடுக்கும் தன்மை இந்த வலுவற்ற காமா கதிர்களுக்கு உண்டு.
1967-ஆம் ஆண்டு அணுக்கதிர்வீச்சு சோதனையின் போது முதன்முதலாக வலுவிழந்த காமா கதிர்கள் பூமியில் ஏதோ ஒரு காலத்தில் ஊடுருவியது கண்டறியப்-பட்டது. இதுகுறித்துத் தொடர்ந்து நடந்த ஆய்வில் சூரியன் உருவாகும்போது பால்வெளி மண்டலத்திற்கு வெளியில் நீண்ட தொலைவில் வெடித்த ஹைபர் நோவா விண்மீனில் இருந்து வெளிப்பட்ட காமா கதிர்கள் என்று தெரிய வந்தது.
நியூட்ரினோ கதிர்கள்: நியூட்ரினோ என்றால் என்ன? மிகவும் எளிமையாகக் கூறப்போனால் எந்தவித சக்தியும் இல்லாத ஒரு துகள். நியூட்ரினோ இந்தப் பெருவெளி உருவானபோது ஆரம்ப காலத்தில் உருவான கதிர்களில் ஒன்றுதான். நியூட்ரினோவை செயற்கையாகவும் தயாரிக்கலாம். நியூட்ரினோ என்ற பெயர் நியூட்ரல் என்ற பதத்தில் இருந்து வந்தது.
நியூட்ரல் என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும், அதாவது எந்த ஒரு விசையும் இன்றி அமைதியாக இருக்கும் அயனித்துகள்களை நியூட்ரினோ என்று அழைப்பார்கள். நியூட்ரினோக்கள் எவ்வாறு உருவாகின்றன? இரண்டு கற்களை எடுத்துக் கொண்டு அவற்றை உரசினால் தீப்பொறி ஏற்படுவதைப் பார்த்திருக்கிறோம்.
இவை ஒரு வினையின் வெளிப்பாட்டில் தோன்றும் வெப்பக் கதிர்கள். இவை சில வினாடிகள் மாத்திரமே நீடிக்கும். பெருவெளியில் எண்ணி-லடங்கா விண்மீன்கள் முதல் அனைத்துப் பொருட்களிலும் உள்ள பொருட்கள் ஒன்றோடு ஒன்று வினைக்குட்படும்போது ஏற்படும் கதிர்கள் பலவகைப்படும். அவற்றை காஸ்மிக் கதிர்கள் என்று அழைப்போம்.
இந்த காஸ்மிக் கதிர்கள் பல்வேறு வகைப்படும். இதில் மிகவும் ஆபத்தான கதிர்கள் பிளாஸ்மா போன்றவை. இவ்வகைக் கதிர்கள் தான் ஊடுருவும் எந்த ஒரு பொருளையும் சில நானோ வினாடிகளில் சாம்பலாக்கிவிடும் தன்மை உடையவை. ஆனால் பெரும்பாலான பிளாஸ்மா கதிர்கள் உருவான இடத்தில் இருந்து சில ஒளியாண்டுகள் தொலைவுவரை பயணிக்கும் போது அது சக்தியிழந்துவிடுகிறது.
நியூட்ரினோ துகள்களும் ஒருவகை காஸ்மிக் கதிராகும். இவை இப்பெருவெளி தோன்றியபோதே உருவானது. இவற்றிற்கு நிறை, மின்காந்தப் புலம் போன்ற தன்மைகள் இல்லாததால் இவை பயணித்துக் கொண்டே இருக்கின்றன. பெருவெளியை விட்டு அண்டத்தை ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்ட ஏதாவது ஒரு பொருள் இருக்குமானால் அது இந்த நியூட்ரினோவாகத்தான் இருக்கக்-கூடும்.
அதேவேளையில் அண்டத்தில் நியூட்ரினோ துகள்களைத் தடுக்கும் ஏதாவது பொருள் உள்ளதா இல்லையா என்பதை. இதுவரை நாம் அறிந்த அறிவியல் அறிவால் உறுதிப்படுத்த முடியாது. எதிர்வரும் காலங்களில் வளரும் நவீன அறிவியல் அறிவால் அதைக் கண்டறிந்துவிடுவார்கள்.
நியூட்ரினோ பற்றி அய்ன்ஸ்டைன்: அணுக்கருவில் நியூட்ரான், புரோட்டான் போன்றன இருப்பதை நாம் படித்திருக்கிறோம். அணுக்கருவில் உள்ள இந்த நியூட்ரான் மற்றும் புரோட்டான்களின் இடைவெளியில் உள்ள வெற்றுப் பகுதியை ஏதோ ஒருபொருள் ஆக்ரமிக்கும். ஆனால் அந்தப் பொருளை நியூட்ரான்களும் புரோட்டான்களும் பாதிக்காத காரணத்தால் அது அணுக்கருவைக் கடந்து பயணித்துக் கொண்டே இருக்கும் என்பதை அய்ன்ஸ்டைன் சமன்பாட்டின் மூலம் கூறியுள்ளார்.
ஆனால் அந்தப் பொருளைப் பற்றி அவர் தெளிவாகக் கூறவில்லை. அய்ன்ஸ்டைனின் காலத்தில் நியூட்ரினோ பற்றிய ஆய்வை மேற்கொள்ள பலர் தயாராக இல்லை, அல்லது அய்ன்ஸ்டைன் உறுதியாகக் கூறாததால் நியூட்ரினோ ஆய்வில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் அணுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்தபோது 1950 களில் மீண்டும் நியூட்ரினோ குறித்த ஆய்வு சூடுபிடிக்கத் தொடங்கியது. முதன்முதலில் வல்ஃப்கங் பவுலி நியூட்ரினோ குறித்து தெளிவான ஒரு கோட்பாட்டைத் தந்தார்.
அதாவது, நியூட்ரினோ துகள்கள் எந்த ஒரு சக்திக்கும் கட்டுப்படாதவை. இந்தப் பெருவெளி நியூட்ரினோ துகள்களின் கடலில் மிதக்கிறது. நமது பார்வை செல்லும் எல்லா இடத்திலும் கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பாய்ந்து சென்றுகொண்டு இருக்கின்றன. என்று கூறினார். நியூட்ரினோ துகள்கள் மூலம் மனித இனம் எவ்வகையில் நன்மை பெறும் என்பதற்கான ஆய்வு எண்பதுகளில்தான் தொடங்கியது.
உலகில் அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான் மற்றும் அய்ரோப்பிய கூட்டு ஆய்வு நிறுவனம் ஒன்று அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளின் கீழ் நியூட்ரினோ ஆய்வுக் கலங்களை நிறுவியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜெர்மன் நியூட்ரினோ ஆய்வு மய்யங்கள் நியூட்ரினோ கற்றைகளை உருவாக்கும் ஆய்வைச் செய்துகொண்டு இருக்கின்றன.
இந்தக் கற்றைகளை ஆய்விற்கு உட்படுத்தும் வினையைத்தான் தேனியில் உருவாகவிருக்கும் நியூட்ரினோ ஆய்வு மய்யம் செய்யவிருக்கிறது.
நியூட்ரினோவால் விளையும் நன்மை என்ன? தீமை என்ன?
தீமைகளைப் பட்டியலிட்ட பிறகு நாம் நன்மைகளைப் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால்தான் கேள்வி கேட்பவர்களுக்கு எளிதாக இருக்கும். நியூட்ரினோ எந்த ஒரு பொருளையும் ஊடுருவிச் செல்லும் தன்மையுள்ளது. இந்த வினாடியில்கூட கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் நம்மை ஊடுருவிச் சென்றுகொண்டு இருக்கின்றன.
ஆனால் இவை அனைத்தும் வினைக்கு உட்படுத்தப்படாத நியூட்ரினோ. நியூட்ரினோ துகளை நாம் ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தினால் அதனைக் கட்டுப்படுத்துவது எப்படி என்ற வினாவிற்கு இன்றளவும் விடை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். முன்பே கூறியதுபோல் நியூட்ரினோ பற்றிய ஆய்வில் நாம் முதல் நிலையில்தான் இருக்கிறோம்.
நியூட்ரினோ ஆய்வின் மூலம் எவ்வகையான பாதிப்புகள் ஏற்படும், அதனைத் தவிர்க்கும் முறைகள் என்ன? என்ற இந்த இரண்டுக்கும் இன்றுவரை எந்த அறிவியல் ஆய்வாளர்களும் தெளிவான விளக்கத்தைத் தரவில்லை. ஆபத்தை விளைவிக்கும், பயன்தரும் கதிர்கள் குறித்தும் அடுத்த தொடரில் அறியலாம்.