சாதனைப் பிஞ்சு
இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் மத்திய விளையாட்டுத் துறை, இளைஞர்நலன் அமைச்சகத்தின் சார்பில் இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமத்தின் 60ஆம் ஆண்டு தேசிய சதுரங்கப் போட்டி சேலம் எஸ்.ஆர்.எம். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சார்பில் 489 பேர் கலந்து கொண்டனர். 17 வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் தமிழ்நாடு சார்பில் குடியாத்தத்தைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு ச.செந்தமிழ் யாழினி கலந்து கொண்டார். 5 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் இறுதிப் போட்டியில் 3க்கு 2.5 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் தமிழக அணி சார்பில் பங்குபெற்ற கே.வைஷாலி (திருச்சி), சி.எம்.என்.சன்யுக்தா (காஞ்சிபுரம்), கே.கிருத்திகா (சென்னை), அய்.ஹரிவர்த்தினி (திருவள்ளூர்) ஆகியோரும் பல்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற தேசியப் போட்டியில் செந்தமிழ் யாழினி வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவர் குடியாத்தம் பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த சி.செந்தமிழ்ச் சரவணன், திராவிடர் கழக மகளிரணியைச் சேர்ந்த சு.சத்தியப் பூங்குழலி ஆகியோரின் இளைய மகள் ஆவார்.
செந்தமிழ் யாழினி, குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். அரசுப் பள்ளி மாணவி ஒருவர் தேசிய சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகு சிறப்புகளைப் பெற்றுள்ள செந்தமிழ் யாழினியைத் தொடர்பு கொண்டோம்.
கேள்வி: சதுரங்கம் விளையாடும் ஆர்வம் எப்படி யார் மூலம் ஏற்பட்டது?
அப்பா சதுரங்கம் விளையாடுவதைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்தது. முதலில் அப்பாவிடம்தான் விளையாடக் கற்றுக் கொண்டேன். மெமரி பவர் கிடைக்கும் என்பதால் சதுரங்க விளையாட்டைத் தேர்வு செய்து அப்பாவும் அம்மாவும் உற்சாகப்-படுத்தினார்கள்.
கேள்வி: எப்போதிலிருந்து விளையாடுகிறீர்கள்.
பெற்ற விருதுகளைப் பற்றிக் கூறுங்கள்? நான்காம் வகுப்பிலிருந்து விளையாடுகிறேன். முதன்முதலில் சென்னை ஸ்டேட் டோன-மென்ட் விளையாடியபோது பெஸ்ட் பெர்பாமர்க்கான விருது கிடைத்தது. ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அப்போதே தங்கம் வெல்ல முயன்றேன்.
சிறிய தவறினால் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். ஜாலியா விளையாடணும், எந்தச் சூழ்நிலையிலும் டென்ஷன் ஆகக்கூடாது, எந்த இடத்தில் லாஸ் பண்ணினோம் என்பதை நினைத்துத் திருத்திக் கொள்ள வேண்டும். எதிரில் விளையாடுபவர் எப்படி நம்மை முந்தினார் என்பதை யோசித்துச் செயல்பட வேண்டும் என்ற அப்பாவின் அறிவுரை என்னை இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்க உதவியுள்ளது.
கேள்வி: தனியார் பள்ளியில் பயின்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணியதுண்டா?
அரசுப் பள்ளியில் படிக்கிறோமே என என்றுமே நினைத்து வருந்தியது கிடையாது. மகிழச்சியாகவே பள்ளி சென்று நல்லா படிக்கிறேன். சரியான பயிற்சியாளர் (கோச்) எங்கள் பள்ளியில் இல்லையே என்பதைத் தவிர வேறு எதற்கும் கவலைப்பட்டது கிடையாது. கபடி, ஷெட்டில் காக் விளையாடுவதுண்டு என்றார் சகஜமாக.
கேள்வி: உங்கள் எதிர்கால இலக்கு என்ன?
இரண்டு ஆண்டுகளுக்குள் கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது எனது லட்சியம். அதன் பின்னர் அய்க்கிய நாடுகள் சபையில் (United Nations Organizations) ஜென்ரல் செக்ரட்டரி ஆகவேண்டும்.
அதற்கேற்ற வகையில் என்னைத் தயார்படுத்திக் கொள்வேன். நிறைய சாதிக்கணும். நான் மட்டுமல்ல… பெரியார் பிஞ்சுகள் எல்லோரும்தான். பெற்றோரும் படிப்பு, படிப்பு என எந்த நேரமும் சொல்லாமல் குழந்தைகளின் திறமையையும் விருப்பத்தையும் தெரிந்துகொண்டு ஊக்கப்படுத்தினால் எல்லோரும் சாதனையாளராகலாம் என்று கூறினார். உண்மைதானே.