ஆண்டுக்கு ஒரு முறை இது பழகு முகாமல்ல; அறிவு முகாம்
நமது எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் உண்மைகளை உணர்ந்துகொள்ளத் தடைகளாக இருந்துவிடுகின்றன. வளர்ந்து வாலிபமாகிவிட்ட இருபாலரையும் பார்த்து, இரண்டு கழுதை வயசாச்சு இவர்களுக்குத் தெரியாதா என்ன? நாம் சொல்லணுமான்னு எதிர்பார்த்துத் தவறு செய்கிறோம்.
சிறார்களை _ சின்னச்சின்னக் குழந்தைகளைப் பார்த்து, அவர்களுக்கு என்ன தெரியும்?ன்னு நாமே முடிவு செய்து கொள்கிறோம்.
இதில் முன்னதாகச் சொல்லப்பட்டவர்கள், உள்ளுக்குள் ஆமா, எங்களைக் கிணத்துத் தவளையா வச்சிருந்தா, என்னத்தத் தெரிஞ்சுக்கிறது என்று எண்ணக்கூடும்.
சிறார்களைப் பொறுத்தவரை, போரடிக்கறீங்க என்று சொல்லும் போதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்ததையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று பொருள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், தம்மின் தம்மக்கள் அறிவுடையார் என்று நமது பூட்டன் திருவள்ளுவர் சொன்னதையே இன்னமும் நம்மால் பின்பற்ற முடியவில்லையே?
திருவள்ளுவர் மட்டுமா அப்படிச் சொல்லியிருக்கிறார்? நம் அனுபவங்களும் அதைத்தான் சொல்கின்றன. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிடும் சிறுவர்களுக்கான பெரியார் பிஞ்சு மாத இதழும், தஞ்சை வல்லத்திலுள்ள மக்கள் பல்கலைக்கழகமான பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய கோடை முகாமான பழகு முகாமும் வள்ளுவர் சொன்னதைத்தான் மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுபடுத்துகின்றது.
நாம் ஏதோ அரிய தகவல்களை அவர்களுக்கு நகைச்சுவையோடு கலந்து ரசிக்கும்படி சொல்ல வேண்டும் என்று பெரிதாக மெனக்கெட்டு முயன்றால், பளிச்சென்று நம்மையே அசத்துகின்ற மாதிரி அவர்களிடமிருந்து பதில் வருகிறது. நமக்குள் ஒரு அவசர அட! _ நிகழ்ந்து விடுகிறது. இது பழகுமுகாம் தொடங்கியதிலிருந்தே பல அவசர அட! _ நிகழ்வது வாடிக்கைதான்.
அப்படித்தான் 05.05.2015 அன்று காலை, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன் அரங்கத்தில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வை Child Line 1098 அமைப்பின் சார்பில் பு.சுப்புரத்தின பாரதி நடத்திக் கொண்டிருந்தபோது, தோல்வி கண்டால் துவண்டு போய்விடுவதா? என்று பெரியார் பிஞ்சுகளைப் பார்த்து (8 வயது முதல் 13 வயதுள்ள சிறார்கள்) கேள்வி கேட்டபோது,
ஒரு சிறுவன் சட்டென்று எழுந்திருந்து, வெற்றி என்பது பெற்றுக்கொள்வதற்கு, தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு _ என்று பளிச் சென்று பதில் சொன்னான். அவன் சாதாரணமாகத்தான் இருந்தான். மற்றவர்கள்தான் ஓரிரு நொடிகள் உறைந்துபோய், அதிலிருந்து மீண்டு, கைதட்டி மகிழ்ந்து, மகிழ்வித்தனர்.
பின்னர், பதில் சொன்ன சிறுவனை அழைத்து அவரைப்பற்றிக் கேட்டபோது, பெயர் பெரியார் மணி என்று கூறியதும், வகுப்பு நடத்திய சுப்புரத்தின பாரதி, பெரியார் மணியல்லவா அப்படித்தான் இருக்கும் என்று ஒரு போடு போட்டதும் வேறு செய்தி.
பழகு முகாம் என்பதே ஜாதி, மதம், இனம், மொழி கடந்து பழகவும், தெரிந்தோ, தெரியாமலோ வளர்த்துவிடப்பட்டிருக்கின்ற மனத் தடைகளைத் தகர்க்கவும்தான். தன்னால் முடியும் என்கின்ற மனவளத்தைத் தூண்டத்தான் இந்தப் பழகு முகாம். இதை அறிவு முகாம் என்றும்கூடக் கூறலாம். இதுதான் இந்த முகாமின் மய்ய நோக்கம்.
இந்த முகாமில் இதுபோன்ற மனத் தடைகளைத் தகர்க்க நாம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறோம். அவ்வளவே. இந்த முகாம் முடிவதற்குள் ஏறக்குறைய எல்லோருமே தங்கள் தங்கள் மனத் தடைகளைத் தகர்த்தும், தாண்டியும், தளர்த்தியும், தளர்த்தப் பரிசீலனை செய்வதுமாக மாறிவிடுகின்றனர், விழுக்காட்டின் அளவில்தான் மாறுபடுகின்றனர்.
இது வழமையாக நாம் கண்டு வருவது. இந்த முறை கடலூரைச் சேர்ந்த குட்டிப்பெண் ராம் கவி, நமக்கு ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தார். எப்படி கதைக்குள் கதை சொல்வோமோ அதுபோல, மனத்தடைகளைத் தகர்க்க ஒரு மாபெரும் ஏற்பாடு. அதை இயக்குகின்ற மாபெரும் நிர்வாகம், பிஞ்சுகளுக்கு உணவளிக்க, இரவு உடனிருக்க ஏராளமான மனிதத் திறன்கள்.
ஒட்டுமொத்தமாக இந்த அமைப்பை இயக்குகின்ற பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், அவரையும் இயக்குகின்ற தமிழர் தலைவர் கி.வீரமணி இந்தப் பின்னணியில் அவர்களது மனத் தடைகளை அகற்றுகின்ற பேராசிரியர்கள், கலைஞர்கள், விளையாட்டு, உடற்பயிற்சி ஆசிரியர்கள்… இதுதான் முதன்மைக் கதை என்றால் இந்தக் கதைக்குள் கதையாக கடலூர் ராம் கவியின் கதை.
ஏறக்குறைய எல்லா மேடைகளிலுமே துருதுருவென்று ஓடிச்சென்று தனது கருத்துகளைப் பளிச் பளிச்சென்று தெரிவித்து அனைவரையும் கவர்ந்து கொண்டிருந்தார் ராம்கவி. நாம் அவரைப் பாராட்டும்வண்ணம் அருகழைத்து நமது பாராட்டைத் தெரிவித்தோம். அதை அவர் ஏற்று நன்றி சொல்லி அதை முடிக்காமல், நம்மிடம் ஒரு கேள்வி கேட்டுத் தொடர்ந்தார்.
அந்தக் கேள்வி, நான் ஏன் இப்படி அடிக்கடி மேடையேறுகிறேன் தெரியுமா? என்பதுதான். நமக்குள் ஒரு பரபரப்பு! ஓ! இதற்கும் காரணம் இருக்கிறதா? இயல்பானதில்லையா இது என்று ஒரு திகைப்பு! வேறு வழியின்றி, நீங்களே சொல்லுங்கள் என்றோம். அதற்கு அவர், சின்னப் பொண்ணு நானே தயக்கம் இல்லாம இப்படி அடிக்கடி மேடையேறிப் பேசினா, மேடையேறிப் பேசுறதுக்குத் தயங்குறவங்க, இந்தச் சின்னப் பெண்ணே பேசுதே.
நாம பேசறதுக்கு என்னன்னு நினைப்பாங்க இல்லையா? என்று சொன்னதும் நமது புத்தியில் புத்தொளி வந்தது போலவே இருந்தது. அந்தக் குட்டிப் பெண்ணை வாழ்த்துவதா, இப்படியெல்லாம் இந்தக் குட்டிப்பெண் சிந்தித்திருக்கக் கூடும் என்று நினைக்காமல் இருந்து, இப்பொழுது புத்தறிவு பெற்று நாம் நம்மை இனிமேல் திருத்திக் கொள்வதா? என்று தடுமாற்றத்துடன் ராம்கவியைப் பாராட்டி அனுப்ப வேண்டியதாயிற்று.
இப்படி ஒருவரல்ல இருவரல்ல வேலூர் ஓவியா, காஞ்சிபுரம் அபிநயா, மணிமொழி, சாம்பவி, பகுத்தறிவு, பூபேஸ், கவிபாரதி, தனுஷ், பிரதீப், நிசாந்தன், நந்தகுமார், சத்யசீலன், சாமிநாதன், சென்னை வைஷ்ணவி, திருச்சி கியூபா இன்னும்… இன்னும் ஏராளம்.
இது மட்டுமல்ல, குறைந்த நேரத்தில் கற்றுக்கொண்டு, கலைகளில் மிளிர்வது, நாடகம் நடிப்பது, பட்டிமன்றத்தில் பேசுவது, பழகுமுகாம் பற்றி, பெரியார் திரைப்படம் பற்றிக் கருத்துச் சொல்வது என்று பெரியவர்கள் போலவே வாழ்ந்துகாட்டி, அவ்வப்போது குழந்தைகளாக விளையாடி.
நீச்சல் குளத்தில் குதித்துக் கும்மாளமிட்டு, நாங்கள் அறிவாளிகள்தான், ஆனால் நீங்கள் எங்களைக் குழந்தைகள் வடிவத்தில்தான் அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வதாகப் பட்டது. நாமும்தான் அவர்களோடு இருக்கும்போது குழந்தைகளாவே மாறிவிடுகிறோம். நம்மையும் யாராவது குழந்தை என்று சொல்லக்கூடாதா? என்றும் ஏங்குகின்றோம்.
குழந்தையாக மாறுவது நடக்காது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளோடு இருப்பது முடியும்; அதற்கு அடுத்த பழகுமுகாம் வரவேண்டுமே!
ஆமாம்! அடுத்த பழகு முகாம் எப்போது வரும்?
1. வைஷ்ணவி – சென்னை
இந்தப் பழகுமுகாமில் எப்படி அம்மா அப்பா இல்லாம நண்பர்களோடு இருப்பது என்பதைக் கற்றுக் கொண்டேன். சிலீவீறீபீ லிவீஸீமீ பற்றிக் கற்றுக்-கொண்டேன். நீச்சல் குளத்திற்குச் சென்றேன். இன்னும் நிறைய விசயம் கத்துக்க வேண்டும். இந்தப் பழகு முகாம் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.
2. ஹரிணி – திருவாரூர்
எங்க தாத்தா மூலமா இங்க வந்தேன். எங்க தாத்தா, திருவாரூரில் திராவிடர் கழகத்தில் மண்டலச் செயலாளராக இருக்கிறார். பழகு முகாமில் ஜாலியா இருந்தது. வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள முடிந்தது. நம்ம அப்பா அம்மாவைவிட்டுத் தனியா இருப்பதற்குக் கற்றுக்கொள்ள முடிந்தது.
பாதுகாப்புப்பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. எல்லாரையும் விட்டுப் பிரிந்து போவது ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாரும் இதுல கலந்துக்கிட்டுப் பயன்பெற வேண்டும்.
3. ராம்கவி – கடலூர்
பெரியார் பிஞ்சு பழகுமுகாம் பற்றி இங்க வந்திருக்கிற எல்லாரும் தெரிஞ்சுக்கிட்டிருப்பீங்க என்று தொடங்கிய ராம்கவி, பழகு-முகாமின் ஒருங்கிணைப்-பாளர்களில் ஒருவரான உடுமலை வடிவேலை அழைத்து அவரிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார். அவரும் ராம்கவி கேட்ட கேள்விகள் மற்றும் அவர்கள் தங்கியிருந்த சொர்ணா_ரங்கநாதன் விடுதி பற்றிய வரலாறு ஆகியவற்றைச் சொன்னார். (ராம்கவியைப் பேட்டி எடுக்கப் போய், அவர் நம்மைப் பேட்டி எடுத்து முடித்தார்.)
4. எம்.யாழினி – திருச்சி
பழகுமுகாம் சூப்பரா இருக்கு. எங்க வீட்ல எனக்குப் போரடித்தது. போரடிக்குதுனு சொன்னேன். எங்கப்பாதான் என்னை இங்க அனுப்பி வச்சாங்க. இங்க எல்லாமே புடிச்சிருந்தது. எல்லாமே கத்துக்கிட்டேன்.
5. விமல் – நாகப்பட்டினம்
பழகு முகாம் ரொம்ப நல்லா இருந்துச்சு. சிலம்பம், யோகா, கராத்தே கத்துக்கிட்டேன். காலையில எழுந்திருச்சி ஜாகிங் போகச் சொல்றாங்க.
6. தனுஷ் – சென்னை
பழகுமுகாம் ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. இவ்வளவு நல்லா இருக்கும்னு எனக்குத் தெரியாம போச்சு. நீச்சல், கராத்தே, யோகா கத்துக்கிட்டேன். உணவு சூப்பரா இருந்துச்சு. சரியான நேரத்தில குடுத்திட்டாங்க. நண்பர்களோடு பயங்கரமா என்ஜாய் பண்ணினோம். பொம்மலாட்டம், விண்மீன்களைப் பார்த்தது ரொம்ப நல்லா இருந்துச்சு. வகுப்புகளும் நன்றாக இருந்துச்சு.
7. தினேஷ் – சென்னை
இங்க நிறையப் பறவைகள் இருந்தன. ரொம்ப.. நல்லா இருந்தது. நீச்சல் கத்துக்கப் போனோம். பொம்மலாட்டம் காட்டினாங்க. ரொம்ப நல்லா இருந்துச்சு.