தாவும் மனிதர்கள்
-கதையும் படமும்
மு.கலைவாணன்
வான் மேகங்கள் தொட்டுத் தவழும் பெரிய மலை. மலைமீது அழகிய கோவில். கோவிலுக்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருக்கும்.
மலைப்பகுதி முழுவதும் அடர்ந்த மரங்கள். அம்மரங்களில் நிறையக் குரங்குகள் வாழ்ந்து வந்தன. இறைவனைத் தேடி வரும் பக்தர்களிடம் இரந்து நிற்கப் பழகிப் போயிருந்தன, குரங்குகள்.
பக்தர்களும் குரங்குகளுக்குப் பழம், பொரிகடலை போன்றவற்றை வாங்கிப் போட்டுத் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்துவிட்ட தாய் நினைத்துக் கொள்வார்கள்.
அவர்கள் தருவதைக் குரங்குகள் கையேந்தி வாங்கிக் கொண்டு ஓடி மரங்களில் ஏறி உட்கார்ந்து தின்கிற காட்சியை மக்கள் பார்ப்பது வாடிக்கையான வேடிக்கை.
குரங்குகளுக்கு ராமாயணத்தில் அனுமன், வாலி, சுக்ரீவன் எனப் பல்வேறு பெயர்கள் உண்டு. ஆனால், இந்தக் கோவிலைச் சுற்றித் திரியும் குரங்குகள் அனைத்தையும் மக்கள் ராமா! ராமா! என்றுதான் அழைப்பார்கள்.
ராமா! ராமா! என்று அழைத்தால் போதும், குரங்குகள் மரத்தை விட்டு இறங்கி ஓடி வந்து கையேந்தும், வாழைப்பழச் சீப்பையோ, பொரிகடலைப் பொட்டலத்தையோ ஒரு குரங்கு வாங்கிவிட்டால் _ மற்ற குரங்குகள் அதன் பின்னால் ஓடிப் பரிதாபமாகப் பார்த்தபடி நிற்கும். பலமுள்ள பெரிய குரங்குகள் அவற்றைப் பிடுங்கித் தின்றுவிடும்.
ஒரு சனிக்கிழமை மாலை, பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குரங்குகளுக்கு நல்ல தீனி. குரங்குகள் கூட்டம் கூட்டமாக மக்களை மடக்கித் தங்களுக்கான தீனிகளைப் பிச்சையாகவும், பிடுங்கியும் தின்று கொண்டிருந்தன.
திடீரென ஒரு குரங்கு பெரிய கைப்பை ஒன்றை எடுத்துக்கொண்டு மரத்தை நோக்கி ஓடியது. கைப்பையுடன் ஓடும் குரங்குக்குப் பின்னால், பத்துப் பதினைந்து குரங்குகள் ஓடின.
மரத்துக்கு மரம் கிளைக்குக் கிளை எனத் தாவிச் சென்ற குரங்கினால், அந்தப் பெரிய பையைத் தூக்கிக் கொண்டு வெகுதூரம் ஓட முடியவில்லை. சற்று தூரம் ஓடியதும், பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஒரு பெரிய மரத்தின் உச்சிக் கிளையில் உட்கார்ந்து, எப்போதும் போல் பழம் பொரிகடலைக்கு அலையும் மற்ற குரங்குகள் சுற்றிலும் நின்று அந்தப் பையையே பார்த்துக் கொண்டிருந்தன.
இதுவரை எந்தக் குரங்குக்கும் யாரும் தராத இந்தப் பெரிய பையை இந்தக் குரங்குக்கு யார் தந்திருப்பார்கள்? அதன் உள்ளே என்ன இருக்கும்? ஆவலோடு மற்ற குரங்குகள் எல்லாம் வெறித்தன.
அந்தச் சமயத்தில், திரைப்படத்தில் முரடனிடம் சிக்கிய குழந்தையைக் காப்பாற்றப் பறந்து வரும் கதாநாயகன் போல் எங்கிருந்தோ ஒரு பெரிய குரங்கு, பை வைத்திருந்த குரங்கின் அருகில் தாவிக் குதித்து வந்து அமர்ந்தது. ஏய் குட்டி, எப்படிக் கிடைத்தது இந்தப் பை? என்று அதிகாரமாகக் கேட்டது.
குட்டிக் குரங்கு பையைத் திறந்தபடியே, தூரத்தில் தெரிந்த கார் ஒன்றைக் காட்டி, அதில் இருந்துதான் இதைத் தூக்கி வந்தேன் என்றது. எல்லாக் குரங்குகளும் குட்டிக் குரங்கு காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தன.
அந்த விலை உயர்ந்த காரைக் கண்டதும், பெரிய குரங்கு, அய்யய்யோ! அந்தக் கார் ஆசாமி மிக மோசமானவன். காலையிலே ஒரு கட்சி மாலையிலே ஒரு கட்சி, என்று நம்மைவிட வேகமாகத் தாவி ஆட்டம் போடும் ஆளாச்சே! இன்று, புதுசா சேர்ந்த கட்சித் தலைவரின் பிறந்த நாள். அதனால், பெருமாளுக்கு, சிறப்புப் பூஜை செய்ய வந்திருக்கிறான்…
அந்த ஆள் வண்டியிலே இருந்து இந்தப் பையை எடுத்திருக்கியே, உனக்கு அறிவிருக்கா?… நாம கிளையை விட்டுக் கிளை தாவும்போது, ஒரு கிளையை விட்டுட்டு இன்னொரு கிளையைப் பிடிப்போம். ஆனா, மனிதர்கள் அப்படியில்லை. ஒன்னைப் பிடிச்சுட்டுத்தான், இன்னொன்னை விடுவாங்க. தன்னம்பிக்கை இல்லாதவங்க.
அதுவும், இந்த ஆளு இன்னொன்னுலெ அதிக லாபம்ன்னா எதையும் இழந்து அதைப் பெறத் தயரா இருக்கிறவன். அவன்கிட்டே இருந்து இந்தப் பையைத் தூக்கிக்கிட்டு வந்திருக்கியே! அப்படி இந்தப் பையிலே நமக்குத் தேவையானது என்ன இருக்கும்னு நினைக்கிறே?
அவன் கட்சி தாவுனதுக்காகத் தந்த பணமா இருக்கும்… இல்லே… ஏதாவது செய்து தர்றேன்னு அப்பாவிங்ககிட்ட வாங்குன லஞ்சப் பணமா இருக்கும். அது நம்மை மாதிரிக் குரங்குக்கு எந்த வகையிலேயும் பயன் தராது!
ஒருவேளை அவன் இந்தப் பணத்தை சாமிக்கே லஞ்சம் கொடுக்கக் கொண்டு வந்திருந்தாலும் கொண்டு வந்திருப்பான்!
நமக்கு இரை கிடைச்சாப் போதுங்கிற கவலை, கொள்கையற்ற இந்த மாதிரி சில அரசியல்வாதிகளுக்கு, எது கிடைச்சாலும் போதாதுங்கிற கவலை!
அப்படிப்பட்ட மோசமான ஆளுகிட்டே இருந்து இந்தப் பையை நீ எடுக்கலாமா? சீ.. சீ… நமக்குத் தேவையில்லாத குப்பைக் காகிதம் இது! இதை எதுக்குக் கொண்டு வந்தே? உடனே தூக்கிப்போடு… என்று அதட்டலாகச் சொன்னது பெரிய குரங்கு.
பயந்துபோய், தான் செய்த தவற்றை உணர்ந்த குட்டிக் குரங்கு, கையில் வைத்திருந்த அந்தப் பையை நழுவவிட்டது. உயரமான மரத்தின் மீதிருந்து கீழே விழுவதற்குள் பெரிய கிளைகளில் பட்டு _ பையின் வாய் மேலும் திறந்துகொள்ள அதன் உள்ளே இருந்த ரூபாய் நோட்டுகள் காற்றில் பறக்கத் தொடங்கின.
இந்நிலையில் _ பணப்பை பறிபோனது அறிந்த அரசியல்வாதியும், அவருடன் வந்தவர்களும், பொதுமக்களும் ஓடிவந்தனர்.
அப்போது வீசிய காற்றில், பண நோட்டுகள் எல்லாப் பக்கமும் பறந்தன. உயரே உயரே மிதந்தன. அவை தரையில் விழ வெகு நேரம் ஆனது.
ஆனால், அதற்குள் _ பொதுமக்களும், அரசியல்வாதியும், அவருடைய ஆட்களும் ஒருவர் மீது ஒருவர் முட்டி மோதி விழுந்தடித்துப் பணத்தைப் பொறுக்க ஆரம்பித்தனர்.
இதைப் பார்த்த பெரிய குரங்கு, நாம் வயிற்றுக்காக மட்டும்தான் அலைகிறோம். அதுக்காகத்தான் கிளைக்குக் கிளை, மரத்துக்கு மரம் தாவித் திரிகிறோம்! ஆனால் எதற்கென்றே தெரியாமல் மனிதர்கள் இப்படி அலைகிறார்கள்! என்று பெருமூச்சுவிட்டது. யாரிடமோ கொள்ளை அடிச்ச பணத்தை… ஊருகிட்ட இழந்து நிக்கிறாரு அந்த ஆளு.
கடவுளைத் தரிசிக்க வந்த பக்தர்களோ, காசுக்குப் பின்னாலே ஓடுறாங்க!… ச்சே, ஆசை யாரை விட்டது? மோசமான மனிதர்கள்! என ஞானம் பெற்ற மகானைப் போல் மேலும் பேசியது.
பொரிகடலைக்கு அலையும் குரங்குகளைப் போல் _ பறக்கும் பணத்தைப் பிடிக்க மக்கள் தாவிக் கொண்டு இருந்தார்கள்.