சும்மா மொக்க போடாதீங்க!
எதையுமே பெரிசா யோசிச்சுப் பழகலாமே? எப்படி?! இப்போ குடும்பத் தலைவர் யாருன்னு கேட்டா, பெரியார் பிஞ்சுங்க நீங்க. உங்க அப்பா, அம்மா பெயரைச் சொல்லிடுவீங்க. உங்களைப்பத்திக் கேட்டா, குடும்பத் தலைவரும் டக்குன்னு சொல்லிடுவாங்க.
பூமியில இருக்கிற நம்ம குடும்பத்தில இப்படி!
சூரியக் குடும்பத்தில எப்படி?
சூரியக் குடும்பத்திலயா? மேல சொன்னது மாதிரி எப்படிச் சொல்றது? எது முதல்லன்னு கேட்டா சூரியன்னு சொல்லலாம்.
அதாவது சூரியன்தான் குடும்பத் தலைவர்னு வச்சுக்கலாம். மத்தது எல்லாம் உங்கள மாதிரி குழந்தைங்கன்னு (கிரகங்கள்) கற்பனை செஞ்சுக்கலாம். இதுல தலைவர் மூலமா கிரகங்கள் தெரிஞ்சுதா? இல்ல கிரகங்கள் மூலமா தலைவர் -_ சூரியன் தெரிஞ்சுதா? இதான் கேள்வி. இத எப்படி? எப்போ? யார்? கண்டுபிடிச்சிருப்பாங்க.
ஒரு பெ… ரிய ப்ளாஸ் பேக்.
400 ஆண்டுகளுக்கு முன்னால்…
பூமியைத்தான் எல்லா கிரகங்களும் சுற்றி வருவதாக எல்லோரும் நம்பினர். குடும்பத் தலைவரான சூரியன்கூட பூமியைத்தான் சுற்றி வருவதாக நம்பினர். இது தவறு என்று முதலில் சொன்ன வானியல் அறிஞர் கோபர் நிகஸ்தான். ஆனால், அவர் கூற்று ஏற்றுக்கொள்ளப்-படவில்லை.
பிறகு, டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் _ அதாவது 1610ஆம் ஆண்டு கலிலியோ வானத்தில் வியாழன் கிரகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, அதைச் சுற்றிலும் 4 ஒளிப்புள்ளிகள் தெரிந்தன. மறுநாள் பார்த்தபோது அவை இடம் மாறியிருந்தன. மூன்றாம் நாள் பார்த்தபோது அவற்றில் ஒன்றைக் காணவில்லை. தொடர்ந்து ஆய்வு செய்தபோது அவருக்கு ஆச்சரியமான ஓர் உண்மை தெரிய வந்தது.
அந்த உண்மை என்ன?
அவர் பார்த்த 4 ஒளிப்புள்ளிகளும் வியாழனின் 4 நிலாக்கள். அவை வியாழனைச் சுற்றி வருகின்றன. அப்பொழுதுதான் ஒரு மாபெரும் உண்மை புலப்பட்டது. பூமியைச் சுற்றாத பொருள்களும் இருக்கின்றன என்பதுதான் அது. இதையொட்டித்தான் மற்றொரு உண்மையும் உணரப்பட்டது. அதாவது, சூரியன்தான் இந்த ஒட்டுமொத்தக் குடும்பத்தின் (கிரகங்கள்) மய்யப் புள்ளி என்ற வானியல் -அறிஞர் கோபர் நிகசின் கூற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதை கலிலியோதான் உறுதி செய்தார்.
ஓ!… குடும்பத்தின் தலைவரான சூரியனையே, எங்களைப் போல உள்ள கிரகங்களை வச்சுத்தான் கண்டுபிடிச்சாங்களா?
ஆமா, பூமியில இருக்கிற குடும்பமாயிருந்-தாலும், சூரியக் குடும்பமா இருந்தாலும் குழந்தைங்கதான் முக்கியமானவங்களா இருக்காங்க. சரி, சரி அதான் நானே சொல்லிட்டேனே!
எல்லாம் சரி, வியாழனைச் சுற்றி இருக்கிற 4 நிலாக்களை அம்போன்னு விட்டுட்டோமே?
ம்… அதுக்கு நாமென்ன செய்ய முடியும்?
அதுக்கு ஒரு பேராவது வைக்கலாமே?
ஆமா, என்ன பேரு வைக்கலாம்?
கலிலியோ நிலாக்கள்
ஓ! கலிலியோ கண்டுபிடிச்சதனால இந்தப் பேரு வைக்கலாம்னு சொல்றீங்களா?
நான் வச்ச பேரா? அதுங்களுக்கு வச்ச பேரே அதுதான். அட!