தங்கச்சி… அண்ணாச்சி…
பள்ளிக்கூடம் போய் வருகிற
சின்னத் தங்கச்சி!
படிச்சி நீயும் என்ன செய்வாய்
சொல்லு தங்கச்சி!
ஆசிரியை ஆகிடுவேன்
அன்பு அண்ணாச்சி!
அடிக்காமல் கற்றுத் தருவேன்
அன்பு அண்ணாச்சி!
பள்ளிக்கூடம் போய் வருகிற
குட்டித் தம்பியே!
படிச்சு நீயும் என்ன செய்வாய்
சொல்லு தம்பியே!
மருத்துவராய் ஆகிடுவேன்
அன்பு அண்ணாச்சி!
மக்கள் நலம் காத்திடுவேன்
அன்பு அண்ணாச்சி
பள்ளிக்கூடம் போய்வருகிற
பெரிய தங்கச்சி!
படிச்சு நீயும் என்ன செய்வாய்
சொல்லு தங்கச்சி?
வழக்குரைஞர் ஆகிடுவேன்
அன்பு அண்ணாச்சி!
ஏழைக்காக வாதிடுவேன்
அன்பு அண்ணாச்சி!
பள்ளிக்கூடம் போய்வருகிற
பெரிய தம்பியே!
படிச்சு நீயும் என்ன செய்வாய்
சொல்லு தம்பியே!
விஞ்ஞானியாய் ஆகிடுவேன்
அன்பு அண்ணாச்சி!
விந்தை உலகைப் படைத்திடுவேன்
அன்பு அண்ணாச்சி!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்புப் பிள்ளைகளே!
மறவாதீர் ஒரு செய்தி
மழலைச் செல்வங்களே!
எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்கும்
முயற்சி செய்தாலே!
எந்த நிலைக்கும் உயரலாம்
நம் திறமையினாலே!
படிப்பு மட்டும் படிப்பதாலே
பயனே இல்லை!
பண்பாடு ஒழுக்கம் வேணும்
அதுதான் எல்லை!
மற்றவரையும் உயர்த்த வேண்டும்
உங்கள் கைகளே!
மனிதம் காத்து புனிதர் ஆவீர்
நல்ல பிள்ளைகளே!