பள்ளி மாணவர்களும் பழுதில்லா பாதுகாப்பும்
பள்ளி திறந்ததும் உடனடியாக மாணவர் சேர்க்கை, பாடம் நடத்தத் தொடங்குதல், பெற்றோர் கூட்டம் என்று பல வேலைகளை பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் செய்வர். பெற்றோரும் மாணவர்களின் கட்டணம், உடை, புத்தகம், நோட்டு, சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு என்று கவனம் செலுத்துவர்.
ஆனால், இவை எல்லாவற்றையும் தலையாய கவனம் செலுத்த வேண்டிய ஒன்று உண்டு. அதுதான் மாணவர்களின் பாதுகாப்பு. எல்லாம் இருந்தும் பாதுகாப்பு இல்லையென்றால், மாணவர்களின் உயிருக்கே கேடு. அதன்பின் எல்லாம் இருந்து என்ன பயன்? எனவே, பள்ளி நிர்வாகமும், பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களின் பாதுகாப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
பாதுகாப்பு பல வகையில் கவனித்து செய்யப்பட வேண்டியது ஆகும். மின்சாரம், முட்புதர், பழுதடைந்த கட்டடம், பள்ளம், குழி, இடிபாடுகள், பள்ளி வாகனம், குடிநீர், கழிப்பறை, பழைய மரங்கள், ஒடிந்த கிளைகள், சுற்றுச்சுவர்கள் என்று பலவற்றிலும் பாதுகாப்பு கருதி கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்றவற்றில் காட்டும் அலட்சியம் பெரிய பாதிப்புகளை உருவாக்கி, மாணவர்களின் உயிருக்கே கேடு உருவாக்கும்.
மின்சாரம்: சில பள்ளி வளாகத்தில் மின் கம்பங்களுக்கு இடையே உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும். அப்படியிருப்பின் உடனடியாக துறை அலுவலர்களுக்குத் தெரிவித்து அதை வேறு வழியாகக் கொண்டு செல்லச் செய்ய வேண்டும். இதை பள்ளி நிர்வாகமும், கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து உயர்அழுத்த மின்கம்பி பள்ளி வளாகத்திற்குள் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
கட்டடங்களில் செல்லும் மின் ஒயர்கள் மாணவர்கள் தொடாத உயரத்தில் இருக்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் எங்கும் மின் கசிவு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். எங்கும் மின் ஒயர்கள் தொங்க-வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மின்சாதனப் பொருட்கள் உடைந்து, சேதமுற்றிருந்தால் அதை உடனே மாற்றி புதிய பொருளைப் பொருத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக மின்சார தாக்குதலுக்கு எந்தவொரு மாணவனும் ஆளாகாத நிலையை உறுதிசெய்ய வேண்டும்.
பழைய கட்டடங்கள்: பழைய கட்டடங்கள், சுவர்கள் இருப்பின் அவற்றை உடனே இடித்துத் தள்ளிவிட வேண்டும். இல்லையெனில் மாணவர்களின் மீது விழுந்து அதிக எண்ணிக்கையில் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உருவாகும்.
முட்புதர்கள் இடிபாடுகள்: இவற்றுள் பாம்பு, பூச்சிகள் ஒளிந்திருந்து மாணவர்களைக் கடிக்க வாய்ப்புண்டு. எனவே பள்ளி வளாகத்திலோ அருகிலோ முட்புதர்கள், பழைய இடிபாட்டுக் குவியல்கள் இல்லாமல் அப்புறப்படுத்த வேண்டும்.
பள்ளம் குழிகள்: பள்ளி வளாகம் மேடுபள்ளமில்லா சமதரையாக, நீர்தேங்காத வகையில் இருக்க வேண்டும். பெரிய பள்ளம் குழிகளில் மழைக்காலங்களில் நீர் தேங்கும். இதில் மாணவர்கள் தவறி வீழ்ந்து மூழ்கி உயிரிழக்க நேரிடும். எனவே, அப்படிப்பட்ட குழிகள் இருப்பின் உடனடியாக மண் நிரப்பி விடவேண்டும்.
பள்ளி வாகனங்கள்: 100 விழுக்காடு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். நம் நாட்டு வாகனச் சோதனை அலுவலகங்களில் நடக்கும் ஊழல் உலகு அறிந்தது. எனவே, அவர்கள் கொடுக்கும் சான்று மட்டும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாது. எனவே, பள்ளி வாகனங்களின் நிலையை அரசின் சிறப்பு ஆய்வுக்குழு சோதிக்க வேண்டும். தவறாக சான்றளித்த அலுவலர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்.
வாகனங்களின் ஓட்டுநர்கள் கண்டபடி பணியமர்த்தப்படுகின்றனர். எனவே, இதை அரசு கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். வாகனங்களின் கதவு, தாழ்ப்பாள், அவசர வழி, பிரேக், ஒலிப்பான், வாகனத்தில் ஏற்றப்படும் மாணவர்களின் எண்ணிக்கை போன்றவை சரியாக உள்ளதா என்பதை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வாகனம் செல்லும் பாதை, வாகன வேகம் இவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
கழிவறை: நோய்த் தொற்றாத வகையிலும், வழுக்கி விழாத பாதுகாப்புடனும் கழிவறை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பிள்ளையை வளர்த்து உருவாக்க பெற்றோர் என்ன பாடுபடுகிறார்கள் என்பதையும், ஒரு மாணவரின் உயிர் ஈடுசெய்ய முடியாதது என்பதை உணர்ந்து பாதுகாப்புப் பணிகளை தொடர்புடையவர்கள் மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய பிள்ளை அப்பள்ளியில் படித்தால் என்ன அக்கறையும், கவனமும் எடுத்துக்கொள்வார்களோ அதைச் செய்ய வேண்டும்.
இதர பாதுகாப்புகள்: உயரத்தில் உள்ள கைப்பிடி சுவர்களில் கல், கட்டை போன்றவை இருக்கக் கூடாது. இருந்தால் உடன் அப்புறப்படுத்த வேண்டும். கழிவறை கழிவு நீர்த்தொட்டிகளின்மீது போடப்படும் மூடிகள் மிகவும் வலுவுள்ளதாக இருக்க வேண்டும். அதிக அளவு மாணவர்கள் நின்றாலும் அது உடைந்து குழிக்குள் விழாமல் இருக்க வேண்டும். நாட்பட்ட மூடிகள் இருந்தால் அதை அகற்றி புதிய மூடிகளைப் பொருத்த வேண்டும்.
கழிவுநீர்த் தொட்டியிலிருந்து நச்சு வாயு வெளியேறாத வகையில் பராமரிக்க வேண்டும்.
பள்ளிக் குழந்தைகள் கடத்தப்படாத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்-களையும் தேவையான இடங்களில் பொருத்த-வேண்டும்.
தங்களை நம்பி பிள்ளைகள் ஒப்படைக்கப்-படுகிறார்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன் பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும்.
மாணவர்களும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும், கவனத்துடனும் விதிமுறைகளின் படியும் நடந்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவேண்டும். கேட்டைத் தவிர்க்க வேண்டும்.