தலைநகரம்… தாஜ்மஹால்… அப்துல் கலாம்… ஆகாய விமானம்!
தலைநகரம்… தாஜ்மஹால்…
அப்துல் கலாம்… ஆகாய விமானம்!
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய 2014 ஆம் ஆண்டுக்கான பெரியார் 1000 போட்டியில் பங்கேற்று 90க்கு 90 அதாவது 100 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து வெற்றிபெறும் மாணவர்களுக்கு இந்தியத் தலைநகராம் டில்லியில் 3 நாட்கள் சுற்றுலா செல்லும் வாய்ப்பும், விமானப் பயணமும் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 9 பேர் அவ்வாறு தேர்வாகியிருந்தனர்.
அவர்களின் பேட்டி மற்றும் விவரங்கள் பெரியார் பிஞ்சு இதழில் (டிசம்பர் 2014) வெளியாகியிருந்தது. ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்த நிலையில் பரிசு அறிவிக்கப்பட்டபடி, டில்லி பயணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கின. அவர்களில் மூவரால் இந்த பயணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை.
எனினும், மற்ற ஆறு வெற்றியாளர்களும் சென்னை பெரியார் திடலுக்கு வரவழைக்கப்-பட்டனர். இதில் பலர் சென்னைக்கு வருவதே இது தான் முதல் முறை. அடுத்தடுத்த ஆச்சரியங்களுக்கு அவர்கள் தயாராக இருக்கவே, டில்லியை நோக்கிய பயணம் தொடங்கியது. பெற்றோரைவிட்டு முதல் பயணம், தமிழ்நாட்டை விட்டு முதல் பயணம், டில்லிக்கு முதல் பயணம் என ஏராளமான ‘முதல்’ – பிஞ்சுகளுக்கு! மே 24 அன்று டில்லியில் சென்று இறங்கியதும் டில்லி பெரியார் மய்யத்தின் சார்பில் பூங்கொத்து தந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது தொடங்கியது தான் பயணம். இடைவிடாமல், டெல்லியில் அறிவுத்தளங்கள் பலவற்றையும் பார்க்கும் அரிய வாய்ப்பு கிட்டியது பிஞ்சுகளுக்கு. முதலில் நாம் செல்வது டில்லியில் வழக்கமான இடங்களுக்குத் தான் என்று அவர்கள் கருதியிருந்தார்கள். ஆனால், சென்றதெல்லாம் யாரும் அவ்வளவு எளிதில் போய்வந்துவிட முடியாத இடங்கள்.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களுள் முக்கியமான ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், டில்லி அய்.அய்.டி, பெரியாரியலைப் பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும் டில்லி பெரியார் மய்யம், இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் பெருமைக்குரிய பங்களிப்பான பிரமோஸ் ஏவுகணைக் கூடம், இவை தவிர, உலக அதியங்களுள் ஒன்றான ஆக்ராவின் தாஜ்மஹால், அதனுடன் ஆக்ரா செங்கோட்டை, இந்தியா கேட், குதுப்மினார், ஜந்தர் மந்தர், சரோஜினி அங்காடி, மெட்ரோ ரயில் போன்ற புதுடில்லியின் அடையாளமான இடங்கள் என நான்கு நாட்களும் இடைவிடாத பயணம்.
இவற்றுக்கிடையில் இந்தியாவின் முதன்மை அறியலாளர்களுள் ஒருவரான முனைவர் ஏ.சிவதாணுப்பிள்ளை, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் நல்.இராமச்சந்திரன் ஆகியோருடன் சந்திப்பு, அய்.அய்.டி. துணைப் பேராசிரியர் பிரேமச்சந்திரன், பிரமோஸ் ஹரிஹரன் ஆகியோரின் வழிகாட்டுதல்களைப் பெற வாய்ப்பு,
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுடனான உரையாடல் என டில்லிப் பயணம் அறிவுப் பயணமாக அமைந்தது. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் அமைந்தது மற்றொரு சந்திப்பு. இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவரும், எப்போதும் மாணவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டவரும், அறிவியல் அறிஞருமான மாண்பமை முனைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களை அவரது இல்லத்திலேயே சந்தித்து உரையாடும் அரிய வாய்ப்பு பெரியார் 1000 வெற்றியாளர்களுக்குக் கிடைத்தது.
இரவு 10 மணிக்கு மேல், அவரது இல்லத்தில், அவருடன் உரையாடவும், கேள்விகள் கேட்கவும், அருகருகே அமர்ந்து அவரது அறிவுரையைக் கேட்கவுமான இந்த வாய்ப்பில் உண்மையில் அந்தப் பிஞ்சுகள் உருகித் தான் போனார்கள். நிறைவாக, 28-ஆம் தேதி காலை டில்லி பெரியார் மய்யத்திலிருந்து கிளம்பி புதுதில்லி விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள்.
அதுவரை ஆகாயவிமானத்தை அன்னாந்து மட்டுமே பார்த்துப் பழகியிருந்த பிஞ்சுகள், இன்னும் சற்று நேரத்தில் விமானத்தில் பறக்கவிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி; ஆர்வம்; எப்படியிருக்கும் என்ற உரையாடல்கள். ஏர் இந்தியாவின் விமானத்தில் ஏறி மூன்றரை மணி நேரப்பயணத்தில் இந்தியாவின் நீளத்தை வான்வழியே அளந்தபடி சென்னைக்கு வந்தது விமானம். அய்ந்து நாட்களுக்கும் மேலான அளப்பரிய சுற்றுலா வாய்ப்பில், அளவிடமுடியாத ஆச்சரியங்களும், அனுபவங்களும் அவர்களின் மூளையில்!
சென்னைக்கு வந்திறங்கியோரை விமான நிலையத்தில் வரவேற்கக் காத்திருந்தனர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தினரும், குழந்தைகளின் பெற்றோரும். விமான நிலைய வாயிலில் நின்றபடி ஊடகங்களுக்குப் பேட்டி, சால்வை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வரவேற்பு, பெரியார் திடலுக்குத் திரும்பியதும் பெரியார் பிஞ்சு ஆசிரியரும்,
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தருமான நம் ஆசிரியர் தாத்தாவின் அன்பு வாழ்த்துகள் என ஆயுளுக்கும் மறக்கமுடியாத நினைவுகள் அவர்களின் சிந்தனையில்! பெரியார் 1000 வினாவிடைப் போட்டியில் பங்கேற்று தாங்கள் பெற்ற அரிய வாய்ப்பை அந்த ஆறு பேரும் இன்னும் கதைகதையாய்ச் சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள் தங்கள் நண்பர்களிடம்! இதோ, இந்த ஆண்டுக்கான பெரியார் 1000 போட்டி அறிவிப்பு வந்துவிட்டது.
இப்போதும் அதே அறிவிப்பு. தமிழக அளவில் முதலிடம் பிடிக்கும் வெற்றியாளருக்கு டில்லி பயணம், விமானப் பயணம்! கார்த்திகா, குமரேசன், சங்கீதா, ராஜலெட்சுமி, மகாலட்சுமி, விக்னேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கும் கிடைத்த வாய்ப்பு இந்த ஆண்டு யாருக்கு? காத்திருக்கிறது பெரியார் பிஞ்சு! நீங்கள் தயாரா?
அந்த பிஞ்சுகள் என்ன நினைக்கிறார்கள்…
எம்.குமரேசன், அரசு மேல்நிலைப்பள்ளி
அய்யம்பாளையம், பத்தாம் வகுப்பு
முன்னாள் குடியரசுத்-தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமுடன் பேசியதை இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை. அந்த காலத்தில் சூரியனைப் பயன்படுத்தி காலத்தை எப்டி கணக்கிட்டார்கள் என்பதைப் பார்த்தேன். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது.
நான் அய்யம்பாளையம் கிராமத்திலிருந்து டில்லிக்குப் போனது எனக்கே அதிசயமாக இருக்கிறது. விமானத்தை எங்கிருந்தோ அன்னாந்து பார்ப்போம். ஆனா, நான் அந்த விமானத்தில, அதுவும் வெற்றிக்கான பரிசாக ஏறி வந்திருக்கேன். இதுக்கெல்லாம் காரணம் பெரியார் 1000 வினாவிடைதான்.
கார்த்திகா, பாரிவள்ளல் மேல்நிலைப்பள்ளி, அறங்கோட்டை, அரியலூர் மாவட்டம்
யாருக்குமே தெரியாத கிராமத்திலிருந்து டில்லிக்கு போயிட்டு வந்திருக்கேன்னா, இந்த வாய்ப்பைத் தந்தது பெரியார் 1000 தான். இதனால எங்க ஊரு ஓரளவுக்கு வெளியில தெரியுது. பெரியாரைப்பற்றி பாடப்புத்தகத்தில கொஞ்சம் படிச்சிருக்கேன். பெரியார் 1000 தேர்வுக்குப்பிறகு, நிறைய தெரிஞ்சுகிட்டேன். மனுசன் அவனுடைய உழைப்பாலதான் முன்னேற முடியும்.
மகாலட்சுமி, நவபாரத் மெட்ரிக் பள்ளி
பைங்காநாடு-, மன்னார்குடி
பெரியார் 1000 தேர்வு எழுதறதுக்கு முன்னாடி என் வகுப்புல மட்டும்தான் நான் நல்லா படிப்பேன்னு தெரியும். இப்ப இந்த பள்ளி முழுவதும் நான் நல்லா படிப்பேன்னு எல்லாருக்கும் நம்பிக்கை வந்திருக்கு. நான் சுற்றுலா போய் வந்த பிறகு என்னை பள்ளி பிரேயர்ல பேசச் சொன்னாங்க. நானும் பேசினேன். அதைக்கேட்டு மற்ற மாணவர்களும் பெரியார் 1000 தேர்வு எழுதனும்னு ஆசைப்பட்டாங்க. இதேபோல பத்தாம் வகுப்புலேயும் முதல்மதிப்பெண் எடுக்கணும்னு எல்லாரும் ஆசைப்படறாங்க. நான் கண்டிப்பா எடுப்பேன்.
ராஜலட்சுமி, கோவிலூர், ஒரத்தநாடு
பெரியார் 1000 தேர்வு எழுதி வெற்றி பெற்று டில்லி சென்று முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களைச் சந்தித்தேன். அவரிடம், சார் உங்களைப்போல அறிவியல் அறிஞர் ஆக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர், விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும் என்று சொன்னார். பெரியாரைப்பற்றி இன்னமும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
செய்தித்தாளில் எனது படத்தைப்பார்த்து, எனது வீட்டுக்கே வந்து பாராட்டினாங்க. நான் யார் என்று இப்ப எல்லாருக்கும் தெரியும். எனது ஆசிரியர், தலைமையாசிரியர், வீட்டில் எல்லாருமே சந்தோசப்பட்டாங்க. நான் அறிவியல் அறிஞர் ஆகவேண்டும் என்று ஆசை. டில்லி அய்.அய்.டி போயிருந்தேன். அங்கிருந்த அறிவியலறிஞர் சிவதாணுப்பிள்ளை அவர்கள் நானும் சாதாரண கிராமத்திலிருந்துதான் வந்தேன் என்று சொன்னதும் என்னாலும் முடியும் என்று தோன்றியது.
விக்னேஷ்வரன், அரக்கோணம்
பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
டில்லி சென்று தாஜ்மகால், குதுப்மினார், செங்கோட்டை, டில்லி பெரியார் மய்யம், அய்.அய்.டி, ஜே.என்.யூ, இந்தியா கேட் ஆகியவற்றைப் பார்த்தோம். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களைப்பார்த்தோம். விடாமுயற்சி தேவை என்றார். பெரியார் 1000 தேர்வில் பத்து பத்து கேள்விகளாக படித்து எங்கம்மாவிடம் சொல்லிக்காட்டினேன். வெற்றி பெற்றேன். இதற்கு முன்னால் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாது என்றிருந்தேன். ஆனால் இப்பொழுது எவ்வளவு மதிப்பெண் வேண்டுமானாலும் எடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வந்திருக்கிறது.
சங்கீதா, அரசு மேல்நிலைப்பள்ளி
டோராபெள்ளி, தர்மபுரி
பெரியார் 1000 தேர்வு எழுதிய பிறகு, பெண்களுக்கு சொத்துரிமைக்கும், பெண்கொடுமை தீர்வதற்கும் முதல் அடித்தளம் இட்டவர் பெரியாருன்னு தெரிஞ்சுகிட்டேன். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வச்ச தேர்வு மூலமாகத்தான் நான் இவ்வளவு தெரிஞ்சுகிட்டேன். இதன் காரணமாக டில்லி சென்று பல இடங்களை பார்த்தேன். அய்யா ஏ.பி.ஜே.அப்துல்கலாமுடன் பேசினோம். படம் எடுத்துக்கொண்டேன்.
இங்கு வந்த பிறகு பலரும் என்னை அப்துல்கலாமுடன் போட்டோ எடுத்துகிட்டீங்களான்னு கேட்கறாங்க. முதல் முறை விமானத்தில் வந்தோம். எனக்கே ஆச்சரியமாகவும், மிகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.