காக்கா முட்டை எழுப்பும் கேள்விகள்
குழந்தைகள் திரைப்படம்
காக்கா முட்டை படம் பார்த்துவிட்டீர்களா? என்று நான் கேட்பதற்கு முன்பு என்னை நிறைய பேர் கேட்டுவிட்டரகள். அப்படி என்ன சொல்கிறது படம்? இரண்டு சிறுவர்கள்…ஒரு அம்மா.. ஒரு பாட்டி. பெரும்பாலும் நமக்குத் தெரியாத குடிசைப்பகுதி மக்களின் வாழ்க்கை. கோழி முட்டை சாப்பிட வசதியில்லாமல், காக்கா முட்டையை உடைத்துச் சாப்பிடும் சகோதர்கள் அவர்கள்.
அப்போதும் தங்களுக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு, குஞ்சு பொரிப்பதற்கென்று காக்காவுக்கு மிச்ச முட்டையை விட்டுவிட்டு வரும் இயல்பு அவர்களுக்கு.அதனாலேயே சின்ன காக்கா முட்டை என்றும், பெரிய காக்கா முட்டை என்றும் அழைக்கப்-படுபவர்கள். அப்படி தங்களை அழைத்துக் கொள்வதில் பெருமையும் கொண்டவர்கள்
குடும்பத்தின் வறுமை காரணமாக, ரயில்வே தண்டவாளங்களில் சிந்தும் நிலக்கரியைப் பொறுக்கி எடைக்குப் போட்டு நாளொன்றுக்கு 10 ரூபாய் சம்பாதிக்கும் சிறுவர்களுக்கு, பீட்சா சாப்பிட ஆசை வருகிறது. அந்த ஆசை அவர்களை என்ன பாடு படுத்துகிறது என்பது தான் கதை. படத்தைப் பார்த்தவர்கள் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சென்னையில் இருக்கும் ஏழை மக்களின் எண்ணற்ற குடியிருப்புகளுக்குள் நாம் போயிருக்க மாட்டோம். ஆனால், அதை நம் கண் முன் நிறுத்துகிறது இந்தப் படம். இன்னும் இந்த நாட்டில் வறுமையில் தவிப்போரின் வாழ்க்கையையும், படிக்க முடியாமல் சாலைகளில் திரியும் குழந்தைகள் பற்றியும் நாம் யோசித்திருக்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பினால், இந்தப் படத்தின் பலன் நமக்குக் கிடைத்துவிட்டது என்று பொருள்.
நமக்குத் தேவையானதற்காக உழைக்கிறோமா? ஆடம்பரமான ஒன்றுக்காக உழைக்கிறோமா? ஆசை என்பதற்காக அவசியமில்லாத ஒன்றை அடைய நாம் என்னென்ன தவறான சிந்தனைகளுக்கு ஆட்படுகிறோம்? அதனால் எத்தனை தொல்லைகளை அனுபவிக்கிறோம்? நாட்டில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள் எத்தனை கொடுமையானவை? நல்ல உடை உடுத்தினாலும், நலிவுற்றோரை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது? அதை மாற்றுவதற்கான சிந்தனையை நாம் பெற வேண்டாமா? இந்த கேள்விகளையெல்லாம் எழுப்பினால் காக்கா முட்டை படம் வெற்றிப் படமே!
உங்களுக்கு இந்தப் படம் எழுப்பும் கேள்விகள் என்ன என்பதை எங்களுக்கு எழுதி அனுப்புங்களேன்!