7டி படம்
தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக மாமல்லபுரத்தை அறிந்திருப்போம். பல்லவர் காலத்தில் உருவாக் கப்பட்ட வியத்தகு சிற்பங்கள், கடற்கரைக் கோவில், குடைவரைக் கோவில்களுக்குப் புகழ் பெற்றது. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட இந்த கலைக்கூடங்களைக் காண்பதற்காகவே நாள்தோறும் ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் மாமல்லபுரம் வருகின்றனர்.
இதில் அயல்நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். யுனெஸ்கோ அமைப்பால் 30 ஆண்டு களுக்கு முன்பே பண்பாட்டுச் சிறப்புமிக்க பாரம்பரிய இடம் என்று அறிவிக்கப்பட்டது மல்லை.
நாம் சுற்றுலா செல்லக்கூடிய இடங்களைப் பற்றி, முன் கூட்டியே படித்து, அதன் வரலாறு, சிறப்புகள், உண்மைத் தகவல்கள் போன்றவற்றை நாம் அறிந்துகொள்கிறோமா? பல நேரங்களில் ஆங்காங்கு பலர் சொல்லும் அரைகுறைத் தகவல்களைத் தான் தெரிந்துகொண்டிருப்போம்.
அவற்றில் பல பொய்யானவையாக, இட்டுக் கட்டப்பட்டவையாக இருக்கும். ஆனால், இந்நிலையிலிருந்து சற்றே மாறி, மாமல்ல புரத்திற்கு நுழையும்போதே 20 நிமிடங்களில் அதன் சிறப்புகளையும், வரலாற்றையும் அறியும் வாய்ப்பை 7டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கி யிருக்கிறார்கள் கிரானிக்கல்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தினர்.
பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் சிற்பங் களை உருவாக்குவதற்காக இடம் தேடத் தொடங்கியதிலிருந்து, குடைவரைக் கோவில்கள் உருவாக்கியது, பின்பு ஒற்றைக்கல் சிற்பங்களை உருவாக்கியது என்று படிப்படியாக சிற்பக் கலையின் வளர்ச்சியையும், பல்லவ அரசின் வரலாற்றையும் தமிழ், ஆங்கிலத்தில் உருவாக்கி யிருக்கிறார்கள்.
3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாமல்லபுரத்தின் சிற்பங்களைப் பதிவு செய்திருப்பதும், தேவையான இடங்களில் வரலாற்றுச் செய்திகளைச் சொல்ல அனிமேசன் தொழில்நுட்பத்தை அழகுற இணைத்திருப்பதும் படத்தை ரசிக்கத் துணை புரிகின்றன.
அது மட்டுமல்ல… கடற்கரைக் கோவிலில் அலை மோதினால், மழை பெய்தால் படம் பார்க்கும் நம் மீது தண்ணீர் தெளிக்கிறது. இடி இடித்தால், மின்னல் வெட்டினால் அரங்கிலி ருக்கும் நம் இருக்கை ஆட்டம் கொடுக்கிறது. மன்னர் மீது பூக்கள் வீசப்பட்டால், நம்மைச் சுற்றி நறுமணம் வீசுகிறது.
காற்று வீசினால், நம் முகத்தில் காற்றடிக்கிறது. நுகர்வு உணர்வு, தொடு உணர்வு, அதிர்வு உணர்வு மற்றும் எதிரொலி ஆகியவற்றை நாம் உணரச் செய்வதோடு, நகரும் காட்சிகளுக்கேற்ப நாம் அமர்ந்திருக்கும் இருக்கை ஏறி, இறங்கி நம்மை படத்துடன் ஒன்றச் செய்கிறது. நாம் இருந்த இடத்திலிருந்தே பல்லவர்களின் காலத்துக்குள் ஒரு பயணம் செய்துவிட்டு வந்த உணர்வைத் தருகிறது இப்படம்.
பல்லவப் பேரரசு பற்றிய படத்துடன், ஃபியோ என்ற குழந்தைகளுக்காக திகில் படமும் திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் 5டி, 7டி திரையரங்குகள் இருந்தாலும், வரலாற்றைப் பதிவு செய்யும் இந்த 7டி திரையரங்கும், பல்லவப் பேரரசு (Pallava Dynasty) எனப்படும் 7டி படமும் புதுமையானவை. அவசியம் பள்ளிச் சுற்றுலாவாகவோ, குடும்பச் சுற்றுலாவாகவோ மாமல்லபுரம் செல்லும் போது பிஞ்சுகள் ரசிக்கலாம்.
– சமா