சும்மா மொக்க போடாதீங்க!
நாம ஏன் பறக்க மாட்டேங்கிறோம்
கொத்தவரங்காய் போல உடம்பு அலேக்னு பழைய சினிமா பாடல் ஒன்னு. அநேகமாக உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். புல் தடுக்கி பயில்வான்னு சொன்னா நிச்சயமா நான் என்ன சொல்ல வர்ரேன்னு ஓரளவு புரிஞ்சிருக்கும். காத்தடிச்சா விழுகிற மாதிரி அவ்வளவு ஒல்லிப்பிச்சான் என்று பொருள். சரி இதை எதுக்கு சொல்ல வந்தேன். ஆங்… காத்து. இல்ல இல்ல காற்று.
இந்த காற்றோட்டம் இருக்கே, அது என்னென்னல்லாம் பண்ணுது தெரியுமா? கேட்கறது ரொம்ப சுலபம் தெரியுமா? சரி சரி, எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன். எடுத்துக்காட்டா இப்ப ஒடிசா கடற்கரையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பருவத்துல கடலில் ஏதாவது ஒரு கட்டையைப் போடறோம்னு வச்சுங்கங்க! அந்தக் கட்டை சில நாட்கள்ல சரியா இலங்கை கடற்கரைக்கு வந்துடுமாம்.
நம்பலையா நீங்க? இப்படித்தான் இலங்கை மன்னன் விஜயன் நாடு கடத்தப்பட்டு, எங்க போறதுன்னு தெரியாம கட்டுமரத்தில ஏறி காற்றின் போக்குல திசை மாறி இலங்கைக்கு வந்தானாம். காற்றுக்கு நல்லது கெட்டது தெரியுமா? இயற்கைக்கு அதெல்லாம் தெரியாதே! அதனால, இந்த வரலாற்று கொடுமை நடந்துடுச்சு. சரி அது இருக்கட்டும், இன்னமும்கூட கட்டுமரங்கள் காற்றோட்டத்தில் போறதுண்டு.
தரையில சரி, தண்ணியிலே எப்படி காற்றோட்டம்? அப்படின்னு கேள்வி கேட்டா அதுக்கும் பதிலிருக்கு. அதாவது தரையில் எப்படி காற்றோட்டமோ, அதேபோல கடலுக்குள்ளே நீரோட்டம்! அதுவும் அப்படித்தான். குறிப்பிட்ட பருவங்களிலே குறிப்பிட்ட திசையிலே கடல் நீரோட்டம் இருக்கும். இது வழக்கமானதுதானாம். கண்டு பிடிச்சு சொன்னது அடியேனல்ல. கடல் ஆய்வாளர்கள், அறிஞர்கள்.
வானத்திலகூட பறவைகள் இப்படிப்பட்ட காற்றோட்டங்களைப் பயன்படுத்தி கண்டம் விட்டு கண்டம் வருவதுண்டு. இன்னொரு அரிய தகவல் சொல்றேன். என்னைப்பொறுத்த வரையில் இது அரிய தகவல்தான். இப்ப இருக்கிற பிஞ்சுகளை நினைச்சா ஆச்சரியமா இருக்கும். இருந்தாலும் சொல்லிடறேன். கடல்லே ஆமை இருப்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும்.
அந்த ஆமை முட்டை போடுவதற்கு கண்டம் விட்டு கண்டம் வருகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இது ஒரு பெரிய விசயமா? டிஸ்கவரி சேனல் பார்க்கிற எல்லாருக்குமே தெரியுமே! என்கிற குரல் கோரசாக கேட்க, சரி கடல் நீரோட்டத்தைப் பயன்படுத்தி ஆமைகள் ஆயிரக்கணக்கில் இன்றும் நமது தமிழ்நாட்டு கடற்கரைக்கு வந்து செல்கின்றன. இதுவும் டிஸ்கவரியில வந்துடுச்சா? ச்சே!
சரி, காற்றோட்டம், நீரோட்டம் இரண்டுமே உங்களுக்கு தெரிஞ்சுபோச்சு. காற்றோடை தெரியுமா? அதுவும் வானத்தில? ஆங்… இது உங்களுக்கு புதுசுங்கிறது உங்க மவுனத்திலேயே தெரியுதே. அதாவது, வானத்தில குறிப்பிட்ட உயரத்தில சில காலகட்டங்கள் அல்லது பருவங்கள் அல்லது சில நேரங்கள் அல்லது இதுல ஏதோ ஒன்னுன்னு வச்சுங்க. அதில் உருவாகிற காற்றோட்டத்தை காற்றோடை அப்பிடின்னே வானவியல் அறிஞர்கள் சொல்றாங்க. இது குறிப்பிட்ட அகலத்திலே இருக்கலாம். அதனாலதான் இதை ஓடைன்னு குறிப்பிடறாங்க.
அதென்ன காற்றோடை? சில சமயம் விமானங்கள் தன் சுயகட்டுப்பாட்டை இழந்தோ அல்லது அதிக உயரத்துக்கோ போயிடும்போது, இந்த காற்றோடைகளில் சிக்குவதற்கு வாய்ப்புகள் இருக்காம். அப்ப என்ன நடக்கும்? எதுவும் நடக்காது. சும்மா பறக்கும். எது விமானமா? அது பறந்துகிட்டுதானே இருக்கு! காற்றோடையில் சிக்குகிற வரையில் பறக்குந்தான். சிக்கிகிட்ட பிறகு? இஞ்சினையே ஆஃப் பண்ணிடலாம்.
காற்றோடையே அதை பறக்க வச்சிடும். அப்பறம் இப்ப தேடிகிட்டு இருக்கிறோமே காணாம போன குட்டி விமானம், இதுக்கு முன்னாடி காணாமப்போச்சே பயணிகளோட மலேசியா விமானம் அதுகளைப்போல தேடிகிட்டே இருக்க வேண்டியதுதான். இதையும் தாண்டித்தான் ராக்கெட் மூலமாக விண்கலங்கள் மேலே செலுத்தப்படுது. அது சரி, காற்றுல ஏதேதோ பறக்குதே! காற்றையே சுவாசிக்கிற நாம ஏன் பறக்க மாட்டேங்கிறோம்? கேட்டீங்களே ஒரு கேள்வி!
நியூட்டனய்யா இதுக்கு நீங்கதான் பதில் சொல்லோனும்!!!