பிரபஞ்ச ரகசியம் 24
விண்வெளியில் இருந்து வரும் கதிர்களில் பல உயிரினங்களுக்கு நன்மை தருவதாகவும் உள்ளது.
அகச்சிவப்பு கதிர்கள் (Infrared Rays)
இவை கண்ணுக்குப் புலனாகாத மின்காந்த அலைகள் ஆகும். நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று சூரிய ஒளி, ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழு நிறங்களைக் கொண்டது என்பது. இதில் அலைநீளம் அதிகமான சிவப்புப் பகுதிக்கு அப்பால் கண்ணுக்குப் புலனாகாத சில கதிர்கள் உள்ளன.
1800 இல் வில்லியம் ஹெர்சல் என்ற வானியல் அறிஞர் தான் அகச்சிவப்பு கதிர்களை முதன் முதலில் கண்டறிந்து கூறினார்.
அகச்சிவப்புக் கதிர்கள் இயற்கையில் விண்மீன்களின் ஒளியில் வெளியாகின்றன. செயற்கையில் நெர்ன்ஸ்ட் விளக்கு, குளோபார் விளக்கு, கார்பன் வில் விளக்கு, சூடேற்றப்பட்ட திண்மங்கள் முதலியவை அகச்சிவப்புக் கதிர் வீச்சுகளை வெளியிடும் பொருள்கள் ஆகும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு கிலோ வாட் என்று பரவியிருக்கும் சூரிய ஒளியில் 527 வாட் அகச்சிவப்பு கதிர்களும், 445 வாட் புலப்படும் ஒளியும், 32 வாட் புற ஊதா கதிர்களும் இருக்கும்.
சூரியனில் இருந்து பூமிக்கு வரும் ஆற்றலில் அரை சதவீதத்திற்கு மேல் அகச்சிவப்பு கதிர்களாகவே பூமியை வந்து அடைகின்றன. எனவே பூமியின் தட்பவெட்ப மாறுபாடுகளிலும், பருவ காலங்களின் மாறுபாடுகளிலும் அகச்சிவப்பு கதிர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
அகச்சிவப்புக் கதிர்கள் கண்ணுக்குப் புலனாகாதிருப்பினும், பொருள்களில் சூடேற்றுகின்றன. நெருப்பு போன்ற அதிக வெப்பம் வெளியிடுவனவற்றிலிருந்து அகச்சிவப்புக் கதிர்கள் அதிக அளவில் வெளியாகும். சிறப்பு கருவிகளைக்கொண்டு அகச்சிவப்புக் கதிர்களை கண்டறியலாம். இச்சூடேற்றும் பண்பினை அடிப்படையாகக் கொண்டு வெற்றிடத்தில் செயல்படும் மின்னிரட்டை, போலோமீட்டர் ஆகிய உணர்விகள் மூலம் அகச்சிவப்புக் கதிர்கள் உணரப்படுகின்றன. அகச்சிவப்பு கதிர்களை ஆராய ஒளியியற் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
வெப்பமுள்ள எல்லாப்பொருளிலிருந்தும் அகச்சிவப்புக் கதிர்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறது, நாம் நீண்ட நேரம் அமர்ந்து எழுந்த உடன் அந்த இருக்கை சூடாகிவிடுமல்லவா? அந்தச் சூட்டிற்கு அகச்சிவப்புக் கதிர்கள் தான் காரணமாக இருக்கிறது, அகச்சிவப்புக் கதிர்களைக் காண பிரத்யோகமான கண் கண்ணாடிகள் உள்ளது.
அகச்சிவப்புக் கதிர்கள் வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கப் பயன்படுகின்றன.
வேதிப் பொருள்களை ஆராய்ந்து அவற்றின் மூலக்கூறு அமைப்பைக் கண்டறிய உதவுகின்றன.
மருத்துவத்தில் உடலிலுள்ள கோளாறுகளையும், இரத்தக் குழாய்களை வெப்பத்தினால் விரிவடையச் செய்தல், வலிகள், வீக்கங்களுக்கு சிகிச்சையளித்தல் ஆகியவற்றுக்கும் உதவுகின்றன.
சிலர் தங்கள் உடலில் தசைப் பிடிப்பைக் குணமாக்க அகச்சிவப்பு விளக்கு பயன்படுகிறது சாயத் தொழில்களில் வண்ணங்களை வேகமாக உலரவைக்க உதவுகிறது.
எந்திர உறுப்புகளில் விளையும் குறைபாடுகளை ஆராய உதவுகிறது.
புலனாய்வுத் துறையில் போலிக் கையெழுத்துகளைக் கண்டறிய அகச்சிவப்புக் கதிர்கள் உதவுகின்றன.
அகச்சிவப்புக் கதிர்கள் காற்றினாலோ, மூடுபனியாலோ உட்கவரப்படுவதில்லை. இவை நெடுந்தொலைவு வரை ஊடுருவும் தன்மை வாய்ந்தவை. எனவே, அகச்சிவப்புப் பார்வை/படங்கள், இரவில் பார்ப்பதற்கு இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது.
காட்டுத் தீ போன்ற பெரு விபத்துக்களில் புகை மண்டலத்தினூடே எரியும் இடங்களை அகச்சிவப்பு பைனாகுலர்கள் வழியாக தெளிவாகக் காணலாம்.
பணப்பெட்டகங்கள் உள்ள அறையில் எச்சரிக்கை ஓசை எழுப்பானிலும், தீ எச்சரிக்கை ஓசை எழுப்பானிலும் அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுத்த படுகின்றன.
சென்சார் தொழில் நுட்பத்திலும் அகச்சிவப்பு கதிர்கள் பெரிதும் பயன்படுகின்றன.
மேலும் கோடிக்கணக்கான ஒளியாண்டு தொலைவில் உள்ள விண்மீன்களின் தன்மையை ஆராய இந்த அகச்சிவப்புக் கதிர்கள் பெரிதும் பயன்படுகிறது,
புற ஊதாக் கதிர் (Ultraviolet light)
இதுவும் அகச்சிவப்புக் கதிர்போல் கண்களால் பார்த்து உணர முடியாத கதிராகும். சூரிய ஒளியின் நிறமாலையில் (Spectrum) கண்ணுக்குப் புலப்படுகின்ற சிவப்பு முதல் ஊதா நிறவரிசையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இருப்பதால் இது புற ஊதாக் கதிர் எனப்படுகின்றது.
புற ஊதாக் கதிர்களை மனிதனால் காண முடியாவிட்டாலும் சில பறவைகளாலும் பூச்சிகளாலும் பார்க்க முடியும். அலைநீளம் குறைவாக இருந்தால் அவ்வொளி அலையின் ஆற்றல் கூடுதலாகும்.
புற ஊதாக்கதிர்கள் உயிரினத்திற்கு மிகவும் குறைந்த அளவே பயன்படுகிறது, மனித குலத்திற்கு இந்த கதிர்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையுடையதாகும், இவ்வகைக்கதிர்கள் மனித உடலில் பட்டால் தோல் உடனே வெந்துவிடக் கூடியது. புற்று நோய் உண்டாகும் அபாயமும் உண்டு. விண்வெளியில் இருந்து வரும் இந்தப்புற ஊதாக்கதிர்களை பூமியின் மேல் மண்டலத்திலிருக்கும் ஓசோன் தடுத்து விடுவதாலேயே நாம் பூமியில் உயிருடன் இருக்க முடிகிறது.
கண்டுபிடிக்கப்படும் கதிர்கள்
நமது அறிவியல் அறிவிற்கு எட்டாத கதிர்களும் விண்வெளியில் உண்டு, பொதுவாக அடையாளம் தெரியாத கதிர்களை நாம் அண்டக்கதிர்கள் என்று அழைக்கிறோம். சூரியக்குடும்பத்திற்கு வெளியிலிருந்து வரும் கதிர்களில் அண்டக்கதிர்கள் நமது பூமியை அடையும் போது வலுவிலந்துவிடுவதால் இந்தக்கதிர்களினால் ஏற்படும் தாக்கம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
வளிமண்டலத்தை துளைத்துக்கொண்டு நமது பூமியின் தரைப்பரப்பை அடையும் இக்கதிர்கள் அணுவின் உட்கருவை கடக்கும் போது எலக்ரான்களால் மின்னாற்றல் பெற்று பாசிட்ரான் மொசான் போன்ற துகள்களாக மாறுகிறது. இந்த அடையாளம் தெரியாத கதிர்கள் மற்றும் இது போன்ற பல்வேறு அண்டவெளிக்கதிர்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
செயற்கை கதிர்வீச்சுகள் கண்டுபிடிப்பு
கதிர்கள் குறித்த அறிவியல் 1895-ஆம் ஆண்டு உருவாகியது. டச்சு அறிவியலாளர் வில்லியம் ராஞ்சன் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டறிந்தார். அவரைத் தொடர்ந்து பிரென்சு அறிவியலாளர் கென்றி பெக்குவரல் உலோகங்கள் கதிர்களை உமிழ்வதைக் கண்டார். இதனைத் தொடர்ந்து மேரி, பியுரி கியூரி தம்பதிகள் பல்வேறு ஆய்வுகளைச் செய்து ரேடியம், பொலோனியம் போன்ற தனிமங்கள் தீவிரக்கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என கண்டறிந்தனர்.
இதற்காக 1903-ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசும் வென்றனர். இவர்களைத் தொடந்து கியூரி தம்பதியினரின் புதல்வி அய்ரின் கியூரி செயற்கை கதிர்வீச்சு (Artificial Radio Isotopes) உருவாக்கும் முறையைக் கண்டறிந்தார். அதன் பிறகு விண்வெளியில் இருந்து வரும் பல்வேறு கதிர்களை செயற்கையாக உருவாக்க முடியும் என்ற ஓர் உண்மை உலகிற்கு தெரியவந்தது.
அதன் பிறகு கதிரியக்க அறிவியல் அனைத்து துறையிலும் பயன்பட ஆரம்பித்தது. பிரிட்டிஷ் அறிவியலாளர் ஜேம்ஸ் சாட்விக் 1932-ஆம் ஆண்டு அணுவின் உட்கருவில் இருக்கும் நியூட்ரான்களைக் கண்டுபிடித்து மற்றும் ஒரு புரட்சியை உண்டாக்கினார். இந்த இரண்டு கண்டுபிடிப்புகளின் காரணமாக அய்ரின் கியூரி, ஜேம்ஸ் சாட்விக் ஆகியோருக்கு அவரது நோபல் பரிசு வழங்கப்பட்டது. அடுத்தடுத்த தொடர்களில் இன்னும் அதிக விண்மீன்களைப் பற்றிய அறியாத புதிய தகவல்களுடன் நமது பால்வெளியின் மையத்தை நோக்கிப் பயணிப்போம்.