பாட்டில் வீடு
கடந்த மாதங்களில் அடித்த கோடை வெய்யிலுக்கு பாட்டில் பாட்டிலாய் தண்ணீரும், குளிர்பானமும் வாங்கிக் குடித்திருப்போம். குடித்த பாட்டில்களில் சிலவற்றை மீண்டும் கொஞ்ச நாள் பயன்படுத்தியிருப்போம். பலவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது, எனவே தூக்கி எறிந்திருப்போம். நாம் மட்டுமல்ல… நம் ஊரில் பலரும் இப்படி காலி பிளாஸ்டிக் பாட்டில்களை தூக்கி எறிகிறார்கள்.
குப்பையில் சேருகிறது. கால்வாயில் சேருகிறது. சாக்கடையில் சேருகிறது. இப்படி சேர்ந்து சேர்ந்து மலை போல் குவிந்து நம் ஊரில் எளிதில் அழிக்க முடியாத, எரித்தாலும் மாசை உருவாக்கும் குப்பையாக மாறி விடுகிறது. நமக்கே இப்படியென்றால், அதிகம் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தும் நாட்டில் நிலைமை எப்படியிருக்கும்?
இந்த கழிவுகளை என்ன செய்வது என்ற யோசனையில் உதித்தது தான் நாம் படத்தில் காணும் வீடுகள். காலி பாட்டில்களில் மண் நிரப்பி, அடுக்கி, சாந்து பூசினால் சுவர் தயார். சுற்றிலும் கட்டினால் வீடு தயார். குப்பைகளைப் பயன்படுத்தி, குறைந்த செலவில் வீடு கட்டிக் கொள்ளலாம். 2001-இல் ஹோண்டுராஸ் தீவில் தொடங்கிய இந்த முயற்சி ஆப்பிரிக்க நாடுகள், சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவி,
இப்போது இந்தியாவிலும் செய்யப்படுகிறது. ஒருபுறம், குப்பைகளைப் பயன்படுத்தி வீடுகட்டுகிறோம் என்று பெருமை கொண்டாலும், இன்னொருபுறம் இவை பாதுகாப்பானவையா, உடலுக்கு கேடு விளைவிப்பவையா, அதுவும் இந்தியா போன்ற வெப்ப நாட்டில் என்ன விளைவுகளைத் தரும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏன்னா, இப்படி குப்பைகளை வைத்தே வாழுங்கள் என்று குப்பைகளை உருவாக்கும் பெரும் நாடுகள், ஏழை நாடுகளை வலியுறுத்துகின்றன.
அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இல்லாத எந்த ஒன்றையும், அந்த நாடுகள் பரிந்துரைத்தால், அது நம்ம மாதிரி நாடுகளுக்கு பரிந்துரைச்சா அதை பல மடங்கு கவனமா பார்க்கணும்ங்கிறது வரலாறு நமக்குக் கற்றுத் தர்ற பாடம். குப்பைகளைப் பயன்படுத்த வரும் இந்த யோசனையையெல்லாம் குப்பைகளை, அதுவும் மக்காத குப்பைகளை, கேடு பயக்கும் குப்பைகளை உருவாக்காமல் இருப்பதில் நாம் செலுத்தணும்.
குறிப்பா, தண்ணீருக்காக பாட்டில் பாட்டிலாக வாங்கிக் குடிக்காமல், அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கணும். தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிக்கும் கொடுமை ஒழியணும். தண்ணீரைக் கூட மக்களுக்குத் தரலைன்னா அது என்ன அரசுன்னு நமக்குத் தோணனும். சுத்தமான குடிநீர் நமக்குக் கிடைக்கிறதுக்கு நாமளும் ஊரை, சூழலை தூய்மையா வச்சுக்கணும். மரம் வளர்க்கணும். நல்ல குடிநீருக்காகப் போராடணும்.
இல்லைன்னா இப்படி சம்பாதிக்கிற காசையெல்லாம் குடிநீரைக் காசு கொடுத்து வாங்க செலவு பண்ணிட்டு, அந்த பாட்டில்ல வீடு கட்டி குடியேறுற நிலைமை தான் வரும். அதனால இந்த பாட்டில் வீடு பெருமையல்ல… எச்சரிக்கை!
– பிஞ்சண்ணா