கண்ணா… லட்டு தின்ன ஆசையா?
நொறுக்குத் தீனிக்கு ஆசைப்பட்டு சறுக்கி விழுந்ததைப் போல் ஆகிவிட்டது நம் நிலைமை. வெளியில் கிடைக்கும் பலநாள் அடைத்து வைக்கப்பட்ட தயார் உணவுகள் உடல் நலனுக்குப் பெரிதும் தீங்கு தருபவை என்பதை பலமுறை நாம் பெரியார் பிஞ்சு இதழில் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இப்போது பரவலாக இது குறித்த பார்வை ஓரளவுக்கு வந்திருக்கிறது.
அது ஒரு புறம் இருக்கட்டும். கேடு தந்த உணவு வகைகளை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தால் மட்டும் ஆயிற்றா? அதற்கு மாற்றான எளிய, இனிய, சுவையான, சத்தான உணவு வகைகளை அடையாளம் காட்ட வேண்டாமா? அதிலும், குழந்தைகள் எளிமையாகத் தயாரித்துக் கொள்ளக் கூடிய அளவிலேயே எண்ணற்ற உணவு வகைகள் நம்மிடம் இருக்கின்றன.
அவற்றை நாமே கற்றுக் கொண்டு எளிய சமையல் மூலம் நம் குடும்பத்தவர்களையும், நண்பர்களையும் அசத்துவோமா? அதற்காகவே அதிகம் வேலையில்லாத, எளிமையான தயாரிப்புத் தேவைப்படும் உணவு வகைகளையும், செய்முறைகளையும் அறிமுகப்படுத்துகிறோம். செய்யத் தயாரா?
தேவைப்படும் பொருட்கள்: மாவு: கம்பு மாவு, கேழ்வரகு மாவு, தினை மாவு
இனிப்பு: சீனி அல்லது கரும்பு சர்க்கரை (நாட்டுச் சர்க்கரை)
பருப்பு: வேர்க்கடலை, முந்திரி, பாதாம்
பொடியாக நறுக்கிய அல்லது துருவிய தேங்காய்
தண்ணீர் அல்லது பால்
மேலே கூறியுள்ள மாவு வகைகளை உங்கள் அப்பா அல்லது அம்மாவின் உதவியோடு வெறும் வாணலிச் சட்டியில் போட்டு வறுத்து சிறு சிறு பாத்திரங்களில் அடைத்து வைத்துக் கொள்ளவும். அதே போலவே சொல்லப்பட்டுள்ள கொட்டை வகைகளையும் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து (உடைத்து) வைத்துக் கொள்ளவும். (தூள் செய்துவிடக் கூடாது)
செய்முறை:
ஒரு அகன்ற பாத்திரத்தில் கம்புமாவு அல்லது கேழ்வரகு மாவு அல்லது தினை மாவு ஆகியவற்றில் ஒன்றை எடுத்துக் கொண்டோ அல்லது மூன்றிலும் சிறிது எடுத்துக் கொண்டோ, தேவையான அளவு சீனி அல்லது நாட்டுச் சர்க்கரை வறுத்து உடைத்த வேர்க்கடலை, பாதாம், முந்திரி, நறுக்கிய தேங்காய் ஆகியவற்றில் சிறிதளவு போட்டு சிறிது தண்ணீர் அல்லது காய்ச்சிய பால் விட்டுப் பிசைந்து உருண்டையாக உருட்டினால் சுவையான தானிய லட்டு செய்துவிடுவீர்கள்.
தேங்காய் நறுக்காமல் துருவியதாக இருந்தால் உருண்டையாக உருட்டிய பின் தேங்காய் மேல் உருட்டி எடுத்தால், அழகான சுவையான லட்டு செய்து நீங்களும் சுவைக்கலாம்; குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் தந்து மகிழலாம்.
எளிமையாக நாமே செய்த மாதிரியும் ஆயிற்று! சத்தான உணவாகவும் ஆயிற்று!
– இறைவி