ஜாதி நாய்
கதையும் படமும்
-மு.கலைவாணன்
அது ஓர் ஆடம்பரமான மாளிகை. வண்ண மயமான சுவர்கள், வகை வகையான அலங்காரங்களுடன் சாளரங்கள், வாயிலில் ஆளுயரத்திற்கு இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்ட கதவு.
அதன் வழியே, தெருவைப் பார்த்தபடி கம்பீரமாக நின்று கொண்டிருந்தது, அந்த மாளிகை நாய். வளர்ந்த கன்றுக் குட்டிபோல், உயரமாக இருந்தது.
அந்த நாயைப் பற்றி, “இது மிக உயர்ந்த வகையாக்கும்!’’ என்று தோட்டக்காரனிடம் பெருமையாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான், பராமரிக்கும் வேலைக்காரன்.
புத்தம் புதிதாய்க் கட்டப்பட்ட அந்த மாளிகைக்கு, அந்த நாய் உட்பட அனைவரும் குடிவந்து சில நாட்களே ஆகியிருந்தன.
அந்தத் தெருவிலேயே நீண்ட காலமாய்ச் சுற்றிக் கொண்டிருக்கும் தெருநாய் ஒன்று, அந்த மாளிகை வாசல் வழியே சென்று கொண்டிருந்தது.
‘வள்… வள்.. வள்…’ எஜமான _ விசுவாசத்துடன், சங்கிலியை அறுத்து விடுவது போல் துள்ளியபடி, தெரு நாயைப் பார்த்துக் குரைக்கத் தொடங்கியது மாளிகை நாய். ‘கதவைத் திற, இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன்!’ என்பது போன்ற பாவனையுடன் கம்பி இடுக்குகளுக்குள் தலையை நுழைத்து மிரட்டியது.
எதிர்பாராத தாக்குதல் என்றாலும், தெரு நாய் அயரவில்லை. நின்று நிதானமாய் மாளிகை நாயைப் பார்த்தது. ஓடாமல் நின்று முறைப்பதைக் காணவும், இன்னும் ஆத்திரம் அடைந்தது மாளிகை நாய். மாளிகை முழுவதும் எதிரொலி கேட்கும் வண்ணம் மேலும் கனமாய்க் குரைத்தது.
“அடச்சீ… எதுக்கு இப்ப ‘வள்… வள்…’ன்னு தேவையில்லாமல் குரைக்கிறே? நானும் உன்னை மாதிரி நாய்தான்; உன் இனம்தான். வீணாய்க் கத்தாதே; வாயை மூடு!’’ என்றது நாட்டு நாய்.
ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிட்டது, மாளிகை நாய். “என்னது, என் இனமா-? யாரைப் பார்த்து என் இனம் என்கிறாய்? நான் உசந்த ஜாதி நாய். வெளிநாட்டிலிருந்து விமானம் ஏறி வந்திருக்கிறேன். எவ்வளவு விலை கொடுத்து முதலாளி என்னை வாங்கி வந்திருக்கிறார் தெரியுமா! யாரைப் பார்த்து என் இனம் என்கிறாய்?’’ மாளிகை நாய் எகிறியது.
“அடடே… எஜமானனுக்கு வாலாட்டி வணக்கம் போட்டு, அவர் போடுற கறிச்சோத்துக்கு விசுவாசமா நீ குலைக்கிறேன்னு நெனச்சேன். ஆனா.. இப்பத்தான் தெரியுது, இந்த மனிதர்களோட சேர்ந்து ஒனக்கும் ஜாதி வெறி முத்திப் போச்சு. தனி மனிதனோட பாதுகாப்புக்காக இருக்கிற நீ, உசந்த ஜாதி! எவன் சோறு போட்டாலும் போடாவிட்டாலும் இந்தத் தெருவுக்கே பாதுகாப்பாய் இருக்கிற நான் தாழ்ந்த ஜாதியா?’’
“நான் உயர்ந்த ஜாதிதான்! என் உயரத்தைப் பார். என் உடலின் மினுமினுப்பைப் பார். என் குரலின் கம்பீரத்தைப் பார்!’’ என அடுக்கு வசனம் பேசத் தொடங்கியது மாளிகை நாய்.
“ஏய்… எனக்கும் உன்னை மாதிரி கறிச்சோறும் பாலும் வேளாவேளைக்குக் கிடைத்தால், நானும் உன்னைவிட வலுவா இருக்க முடியும். உன்னைவிட கம்பீரமாய்க் குரைக்க முடியும்.
ஆனால், உன் முதலாளிக்கு இருக்கும் வெளிநாட்டு மோகத்தால் எங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிட்டது. உள்ளூரில் இருக்கும் எங்களை வளர்த்து வலிமைப்படுத்தி, பயன்படுத்துவதை விட்டுவிட்டு _ வெளிநாட்டிலிருந்து உன்னை இறக்குமதி செய்துவிட்டார். நீயும் எங்கள் மீது அதிகாரம் பண்ணத் தொடங்கிவிட்டாய்!’’ என்றது நாட்டு நாய்.
“என்ன இருந்தாலும், நான் உயர்ந்த ஜாதி நாய் என்பதை ஒப்புக் கொள்கிறாயா, இல்லையா?’’ மிரட்டியது மாளிகை நாய்.
“மனிதர்கள்தான் ஆளுக்கொரு ஜாதி _ ஆளுக்கொரு கட்சி என்று பிரிந்து கிடக்கிறார்கள் என்றால், அவர்கள் வளர்க்கும் நாய்களுக்கு நடுவிலுமா பிரிவினை வேண்டும்? இந்த ஜாதிப் பிரிவினையால், அவர்கள் நன்மை அடைந்ததாய் வரலாறு உண்டா?
நாம கடிச்சா ஏற்படுகிற வெறிக்கு மனிதன் மருந்து கண்டுபிடித்துவிட்டான். ஆனால், அவனே உருவாக்கிய ஜாதிவெறி நோய்க்கு மட்டும் இன்னும் மருந்தே கண்டுபிடிக்கவில்லை. அந்த நோய், நாய்களாகிய நமக்கும் வேண்டுமா என்ன?’’ என்று வருத்தமாகப் பேசியது நாட்டு நாய்.
“பொறாமையில் பேசாதே. இந்த மாதிரி மாளிகைவாசம், கார்ப் பயணம், கறிச்சோறு, கால்நடை மருத்துவம், கடிக்கக் கற்றுத் தரும் பயிற்சியாளர்… இதெல்லாம் உனக்கு உண்டா? நீயும் நானும் எப்படி ஒரு ஜாதியாக முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியது மாளிகை நாய்.
“எல்லாம் இருக்கிறது என்பது சரி… உன் விருப்பப்படி வாழும் சுதந்திரம் உனக்கு இருக்கிறதா? விரும்பும் தோழமை நாய்களுடன் கொஞ்சி விளையாடும் மகிழ்ச்சி இருக்கிறதா? இதையெல்லாம் உன்னிடமிருந்து பறித்துவிட்டு,
அதனால் உனக்கு ஏற்படுகிற ஆத்திரத்தை வைத்துத்தானே வாசலுக்கு வருவோரை பயமுறுத்தப் பழக்கி இருக்கிறார்கள்! சங்கிலியால் கட்டப்பட்டு சுதந்திரத்தை இழந்து நிக்கிற நீ உசந்த ஜாதி, மகிழ்ச்சியாய்ச் சுற்றி வருகிற நான் தாழ்ந்த ஜாதியா? நன்றாக யோசித்துப் பார்?’’ என்றது நாட்டு நாய்.
“என்னை ரொம்பக் குழப்புகிறாயே! இதுவரை என்னைப் பற்றி நான் கொண்டிருந்த கனவுகளையெல்லாம் தகர்க்கிறாயே. முடிவாய் என்னை என்னதான் செய்யச் சொல்கிறாய்? நீ பேசுவதை இன்னும் கொஞ்ச நேரம் கேட்டால் குரைப்பதையே மறந்து விடுவேன் போல் இருக்கிறதே!’’ என்று குழப்பத்தில் பேசியது மாளிகை நாய்.
“அப்படி வா, வழிக்கு. ஜாதிப் பிரிவினை பார்ப்பது நன்றியில்லாத மனிதனோட போகட்டும். நீயும் நாய்; நானும் நாய். நாம் நேயத்துடன் நடந்து கொள்வோம். தின்னும் கறிச் சோற்றுக்கு நன்றியாய், திருடன் வந்தா குரை! இல்லை என்றால், வாயை மூடிக்கொண்டு படுத்திரு.
இன்னொரு முறை உன் இனமாகிய என்னைப் போன்றோரைப் பார்த்துக் குரைக்காதே!’’
மாளிகை நாய் யோசிக்க, நாட்டு நாய் கம்பீர நடையுடன் அங்கிருந்து விரைந்தது.