புளூட்டோ புது ஃபோட்டோ
புளுட்டோவை நெருங்கிய நியூ ஹோரைசான் விண்கலம் அறிவியலின் நவீனத்துவம். கடவுள் படைப்பு என்ற கோட்பாட்டை சுக்குநூறாக்கிவருகிறது. 1600-களில் துவங்கிய தொலைநோக்கிகளின் அறிவியல் பயணம் இதுவரை வெறும் கண்களால் பார்த்துக்கொண்டு இருந்த வானத்தை பகுதிப் பகுதியாக பிரித்து மிகவும் நெருக்கமாகப் பார்க்க உதவியது.
இதனடிப்படையில் நமது சூரியன் அதனைச் சுற்றியுள்ள கோள்கள் அனைத்தும் நமது கண்களுக்கு விருந்தானது. ஜோதிடர்களின் ஏமாற்றுத்தனத்திற்கு வேட்டுவைத்தது.
உலகப்போர் முடிந்த உடனே அழிவுக்கான தொழில்நுட்பமான ஏவுகணைகள் ஆக்கத்திற்காக பயன்பட ஆரம்பித்தது. பொதுவாக ராக்கெட்டுகள் கிறிஸ்துபிறப்பிற்கு முன்பே சீனர்களால் கண்டறியப்பட்டாலும் அது சில மீட்டர் தூரம் வரைதான் பயணித்தது.
அந்த சில கிலோமீட்டர் தூரம் பயணித்த ராக்கெட்டுகள் நமது ஈர்ப்புவிசையை கிழித்துக்கொண்டு விண்வெளியைச் சென்றடைய 3000 ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஆம் 1957-ஆம் ஆண்டு ஸ்புட்னிக் என்ற செயற்கைகோள் தான் முதல்முதலாக விண்வெளியில் நிலைநாட்டப்பட்டது. சோவியத் யூனியனின் இந்த ஒரு துவக்கம் விண்வெளி அறிவியலின் நவீனப் பாதையை துவக்கிவிட்டது. அதன் பிறகு விண்வெளி மனித இனத்திற்கு அடிமையாகிவிட்டது என்றே கூறவேண்டும்.
கடந்த 40 ஆண்டுகளில் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களிலும் அறிவியலாளர்களால் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் ஊடுருவி உளவுபார்த்து வந்துவிட்டன. மேலும் கதிரியக்கத் தொலை-நோக்கிகள், அகச்சிவப்பு தொலைநோக்கிகள் மற்றும் அதிநவீன தொலைநோக்கிகள் போன்றவை நமது பால்வெளிமண்டலத்தையும் கடந்து அதற்கு வெளியேயும் உள்ள உலகை நமக்கு காண்பித்தன.
இதுவரை அய்சக்நியூட்டன், அய்ன்ஸ்டைன், கார்ல் சகன், ஸ்டீபன் ஹவுகின்ஸ் போன்ற விண்ணியல் மேதைகள் கணக்கீட்டு முறையில் நமக்கு காண்பித்த வேறு உலகத்தின் உண்மைகளை இந்த தொலைநோக்கிகள் நமது கண்களுக்குப் படமாக எடுத்து விருந்தளித்துள்ளன.
வொயேஜர் 1 (voyager 1) என்ற ஆய்வு விண்கலம் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்கலமாகும். சுமார் 40 ஆண்டுகாலப் பயணத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது, இது நமது சூரியக்குடும்பத்தை விட்டு வெளியேறி கைபர்பெல்ட் பகுதியைக் கடந்துகொண்டு இருக்கிறது.
மனித இனத்தின் இந்தச் சாதனையில் ஒன்று புளூட்டோவை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட நியூ ஹரைசன்ஸ் (New Horizons) தானியங்கி விண்கலமாகும். இதுவே புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்ட முதலாவது விண்கலமாகும். இது புளூட்டோவையும் அதன் நிலாக்களான சாரன், நிக்ஸ் மற்றும் ஹைட்ரா ஆகியவற்றை ஆராயும்.
நியூ ஹரைசன்ஸ் விண்கலம் ஜனவரி 19, 2006 இல் புளோரிடாவில் உள்ள கேப் கனவேரல் வான்படைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இது பிப்ரவரி 28, 2007 இல் வியாழனை 5:43:40 UTC நேரத்தில் அண்மித்தது. புளூட்டோ கோளை கடந்த சில வாரமாக பல்வேறு கோணத்தில் படமெடுத்து அனுப்பியது.
ஜூலை இரண்டாம் வாரம் வெற்றிகரமாக வட்டப்பாதையை அடைந்து அதன் புளூட்டோவின் மேற்பரப்பு மற்றும் அதன் நிலவுகளை ஆய்வுசெய்யும். இந்த விண்கலம் வினாடிக்கு 16.21 கிமீ/செ (36,260 மைல்/மணி) பறந்துசென்றது. இதுவே இதுவரை விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலங்களில் அதிகூடிய வேகத்தைக் கொண்டதாகும்.
செவ்வாய், மற்றும் சிறுகோள்களை தாண்டல்
ஏப்ரல் 7, 2006, 10:00 UTC நேரத்திற்கு, இவ்விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்டத்தை 21 கிமீ/செக் வேகத்தில் கடந்தது. அப்போது அது 243 மில்லியன் கிலோ மீட்டர் சூரிய தூரத்தில் இருந்தது.
நியூ ஹரைசன்ஸ் தனது வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை ஜூன் 13, 2006 இல் சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது. இச்சிறுகோளின் விட்டம் கிட்டத்தட்ட 2.3 கிலோமீட்டர்கள் ஆகும். இதிலிருந்து மிக வேகமாய்ச் செல்லும் பொருட்களை இனங்காணும் வலிமையை இவ்விண்கலம் பெற்றுள்ளது என நிரூபிக்கப்-பட்டது. ரால்ஃப் தொலைக்காட்டி மூலம் இதன் படங்கள் பிடிக்கப்பட்டன.
பயணத் திட்டக் காலம்
ஜனவரி 19, 2006 விண்ணுக்கு ஏவப்பட்டது. ஏப்ரல் 7, 2006 செவ்வாய்க் கோளைத் தாண்டியது. ஜூன் 13, 2006 132524 என்ற சிறுகோளை அண்மித்தது. நவம்பர் 28, 2006 புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது. ஜனவரி 8, 2007 வியாழனை சந்திக்க ஆரம்பித்தது.
பிப்ரவரி 28, 2007 வியாழனை வினாடிக்கு 22 கிலோமீட்டர் தூரத்தில் பயணித்து வியாழனின் மேற்புறத்தைப் படமெடுத்து அனுப்பியது. (2.305 மில்லியன் கிமீ தூரத்தில், 21.219 கிமீ/நொடி வேகத்தில்). மார்ச் 5, 2007 வியாழனை விட்டு விலகியது.
ஜூன் 9, 2008 சனி கோளைக் கடந்தது. மார்ச் 5, 2011 யுரேனஸ் கோளின் சுற்றுப் பாதையைக் கடக்கும். ஆகஸ்ட் 1, 2014 நெப்டியூன் கோளின் சுற்றுப்பாதையைக் கடந்தது. ஜூலை 14, 2015 புளூட்டோவை 11-ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஆய்வுசெய்தது அப்போது இதன் வேகம் வினாடிக்கு 13 கிலோமீட்டராக இருந்தது.