பெரியாரைப் பற்றி எனக்கு ஏன் சொல்லவில்லை? அப்பாவிடம் கோபித்துக் கொண்ட அமெரிக்கப் பிஞ்சு
தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் பிரின்ஸ்டன் நகரில் வாழும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மோ. கோவிந்த் – மென்பொருள் பொறியாளர் அவர். அவரின் வாழ்விணையர் டாக்டர் நிரஞ்சனா குழந்தை நல மருத்துவர்.
அவர்கள் இல்லத்திற்கு எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். ஆஷா, சோனியா என்ற இரு மகள்கள் அவர்களுக்கு.
உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் இரண்டாவது மகள் சோனியா இந்தியாவைப் பற்றிய இரு ஆய்வு கட்டுரைகளை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதிகள், பெண் உரிமை ஆகிய தலைப்புகளில் தயாரித்து பள்ளியில் வழங்கி உள்ளார்.
இரு கட்டுரைகளையும் நான் படித்தேன். நிறைய செய்திகள் இருந்த அக்கட்டுரையில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காகவும், பெண்ணடிமை அகற்றி பெண்ணுரிமை பேணப்படுவதற்கும் தந்தை பெரியார் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை.
அந்த மாணவி பெரியாரின் பணி பற்றி முற்றிலும் அறியவில்லை என்பது அப்போது புரிந்தது. இரு பிரச்சினையிலும் அய்யா பெரியார் ஆற்றிய பங்கு பணிகளை நான் எடுத்துரைத்தேன்.
“சென்னையில் உங்கள் வீட்டுக்கு அருகில் சில கி.மீ தூரத்தில்தான் பெரியார்திடல் உள்ளது. சென்னை வரும் போது நீங்கள் பெரியார் பற்றி தெரிந்து கொள்ளலாம். தேவையான புத்தகங்களையும் தருவித்து படிக்கலாம்” என்று கூறினேன்.
தனது தந்தையாரைப் பார்த்து அப்பெண், “சென்னையைச் சேர்ந்த உங்களுக்குப் பெரியாரைப் பற்றியும் அவர் ஆற்றிய தொண்டுகள் பற்றியும் தெரிந்திருக்குமல்லவா? எனக்கு ஏன் விளக்கிச் சொல்லிடவில்லை” என்று சற்று ஆதங்கத்துடனேயே கேட்டது. அவர் ஏதோ பதில் சொல்லி சமாளித்தார். “எதிர்காலத்தில் தமிழகம் செல்ல வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களின் விடுதலைக்காக ஏதாவது செய்ய வேண்டும்” என்பது அம்மாணவியின் எண்ணம். பெரியாரை, பெரியார் கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் ஆசை.
பின்னர், “ஆண் – பெண் சமத்துவத்தைப் பேணவும், சம உரிமையுடன் குடும்பப் பொறுப்புகளை ஏற்று வாழ்ந்திடவும் இப்போது எனக்கு எளிதாக இருப்பதற்கு காரணம், 25 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் கி. வீரமணி அவர்கள் நடத்தி வைத்த ஒரு திருமணத்தில் அவர் பேசும்போது கணவனும் மனைவியும் எப்படி இருக்க வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்-,
ஆண் — பெண் சமத்துவம் பெண்ணுரிமை போன்ற கருத்துகளைக் கேட்டதுதான். பசுமரத்தாணிபோல் என் மனதில் பதிந்தது.
அப்பேச்சின் கருத்துக்கள்தான் தற்போது அமெரிக்காவில் நாங்கள் இருவரும் (வாழ்க்கை இணையர்) சமமாக குடும்ப பொறுப்புகளை பகிர்ந்து செய்வதற்கும் இரு பெண் பிள்ளைகளை மகிழ்வோடு வளர்ப்பதற்கும் அடிப்படை” என்று தன் அனுபவத்தைக் கூறிக் கொண்டிருந்தார் கோவிந்த்.
விருந்தைக்காட்டிலும் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அய்யாவைப் பற்றியும், கழகத்தின் ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு கருத்துக்களை நான் பரிமாறியபோது அந்தப் பிள்ளையின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியும், ஆசிரியர் தாத்தா பேச்சால் தாம் பெற்ற பயனை நினைவுகூர்ந்த நண்பர் கோவிந்தின் நன்றி உணர்ச்சியும்தான்!
04.07.2015 நியூஜெர்சியிலிருந்து துரை. சந்திரசேகரன்…