இதோ இவைகளை எண்ணுங்கள்!
இதோ இவைகளை எண்ணுங்கள்!
-சிகரம்
பிள்ளைகள் வீட்டின் செல்வங்கள்! எனவே வேண்டியவை எல்லாம் விரைவில் கிடைத்துவிடும். பெற்றோர் தங்கள் சிரமங் களைக் கூட பிள்ளைகளுக்குச் சொல்ல மாட்டார்கள். எனவே வாழ்க்கை என்பது அவர்களுக்கு ஆட்டம், பாட்டம், விளையாட்டு, பள்ளி, படிப்பு, வீட்டுப்பாடம். இந்தவட்டத்துக்குள் வாழ்ந்துவிடுகிறார்கள்.
சிலகுழந்தைகள் மேல்நிலைப்படிப்பு முடிக்கின்றவரைகூட இப்படியே வாழ்ந்து விடுகிறார்கள். உலகில் என்ன நடக்கிறது, பல குழந்தைகளுக்குத் தெரியாது. புதிய இடங்களுக்குத்தனியே செல்ல முடியுமா? தெரியாது! அடுத்தவரோடு பழகத்தெரியுமா? தெரியாது!
நமக்கு நாள்தோறும் நல்ல உணவு, உடை, வீடு உள்ளது. எல்லா பிள்ளைகளுக்கும் அவை கிடைக்கிறதா? ஒரு வேளை உணவு கூட கிடைக்காத பிள்ளைகள் உண்டு என்பது எல்லா பிள்ளைகளுக்கும் தெரியுமா?
நம்முடன் படிக்கும் குழந்தை அல்லல்படும் போது நம்மால் முடிந்ததை அப்பிள்ளைக்கு செய்ய வேண்டும் என்ற உணர்வை நம் பிள்ளைகளுக்கு வளர்க்கிறோமா? தன்னிடம் உள்ளதைப் பகிர்ந்து உண்ணும் பழக்கம் பிள்ளைகளிடம் உள்ளதா? சோதித்திருக் கிறோமா?
பள்ளியில் அடைத்து பாடம் சொல்லி வீட்டுப் பாடத்தோடு அனுப்பி வைப்பது மட்டும் கல்வியல்ல. படிப்போடு பலவற்றை கற்பிப்பது மட்டுமே பிள்ளைகளுக்கு ஆளுமை வளர்ச்சியை உண்டாக்கும்; அறிவுக் கூர்மை அளிக்கும், வாழ்க்கைப் பாடத்தை கற்றுத்தந்து வாழத் தகுதியாகவும் ஆக்கும்.
நான் மேல்நிலைப்பள்ளித் தலைமை யாசிரியராய் பணியாற்றிய போது ஒரு ஏழைத்தாய் காலை 9.00 மணிக்கு என்னைச் சந்தித்தார். தன்மகனுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் இன்று தான் கடைசி நாள் என்றார்.
10.30 மணிக்கு அலுவலகத்தில் வந்து என்னைப்பார்க்கச் சொன்னேன். அந்தத்தாய் கலங்கிய கண்ணுடன் சென்றுவிட்டாள். அவரது பையன் எங்கள் பள்ளியில் மேல்நிலை வகுப்பு முடித்தவன்.
9.20 பேரவைக் கூட்டம். என் உள்ளத்தில் ஒரு யோசனைத் தோன்றியது. அதை அப்படியே பேரவைக் கூட்டத்தில் சொன்னேன்.
“மாணவர்களே! உங்களுடன் படித்த ஏழைமாணவன் ஒருவனுக்குக் கல்லூரியில் சேர்வதற்கு ரூ.5000 பணம் தேவைப்படுகிறது. அவனுக்கு உதவினால்தான் அவன் படிக்க முடியும்.
இல்லையென்றால் படிப்பு தடைப் படும். எனவே, நீங்கள் அனைவரும் இன்று உங்களுடைய தின்பண்டச் செலவிற்கு வைத்திருக்கும் காசை உங்கள் வகுப்பாசிரி யர் மூலம் கொடுக்கலாமா?” என்றேன்.
எல்லா மாணவர்களும் கொடுக்கலாம் என்றனர். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், 50 காசு என்று ஒவ்வொரு மாணவனும் தர 10 மணிக்கு ரூ3000 சேர்ந்தது. ஆசிரியர்கள் 1000 ரூபாய், நான் 1000 ரூபாய் 11.00 மணிக்கு ரூ.5000 அத்தாயிடம் அளித்தேன். அம் மாணவனின் படிப்பு தொடர்ந்தது. உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பு அங்கு மலர்ந்தது.
ஆக, தன்னுடைய சிறு பங்களிப்பு மூலம் ஒரு பெரும் உதவியைப் பிறருக்குச் செய்யலாம் என்ற எண்ணத்தைக் குழந்தை களுக்கு உருவாக்க வேண்டும். குழந்தை களும் இப்படியெல்லாம் உதவலாம் என்பதை அறிவதோடு, எப்படியெல்லாம் உதவலாம் என்பதையும் சிந்திக்கவேண்டும்.
தன்னுடன் படிக்கும் மாணவர் உண வின்றி வந்தால் தன் உணவைப்பங்கிட்டுக் கொடுக்கலாம்; தனக்குப் புரிந்ததை புரியாத மாணவனுக்குப் புரியும்படிச் சொல்லுவதும்; தன் நண்பனுக்கு உடல்நிலை சரியில்லாத போது சென்று பார்த்து ஆறுதல் கூறுவதும் என்று பலவற்றை மாணவர்கள் பிள்ளைப் பருவத்திலே பழகிக் கொள்ள வேண்டும்.
அதேபோல், பிறர் பொருளைத் திருடுதல், பொய் பேசுதல், ஒளித்தல், ஏமாற்று தல், பிறரை அடித்தல், தடித்த வார்த்தை களால் திட்டுதல் போன்றவை செய்யக் கூடாது என்பதை பிஞ்சு உள்ளத்திலே ஏற்றிக் கொள்ளுதல் என்று பல நற்குணங் களைப் பழக்கிக் கொள்ள வேண்டும். தப்பு செய்வதை வெறுக்கும் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மற்றவர்களைத் தாழ்வாகப் பார்த்தல், சுயநலத்தோடு செயல்படுதல், கடையில் விற்கும் பாக்கட் உணவுகளை, குளிர்பானங் களைச் சாப்பிடுதல், அதிக நேரம் கணினி, செல்பேசிகளைப் பயன்படுத்துதல் போன்ற வற்றைத் தவிர்க்க பிஞ்சுகள் உறுதிகொள்ள வேண்டும்; பெரியவர்கள் நெறிப்படுத்த வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கல்விதான் மனிதனை உருவாக்குவது; தெளிவாக்குவது; வாழத்தகுதியாக்குவது. எனவே, அதை எல்லா பிள்ளைகளும் உள்ளத்தில் கொள்ள வேண்டும். கல்வி இல்லாமையால் கிட்ட வில்லை என்ற நிலை கொடுமையானது மட்டுமல்ல; அறியாமையினால் விளைவதும் ஆகும். கட்டணம் கட்டிபடித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், இன்றைக்கு மேல் நிலைக்கல்வி, கல்லூரிக் கல்விவரை இலவசம்.
தொழிற் கல்விபயில அரசின் உதவி, வங்கிக் கடன், தொண்டு அமைப்புகள் உதவி என்று ஏராளம் உண்டு எனவே, அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
தென்னரசு என்று ஒரு மாணவன்; ஒரு வேளை உணவு கூட கிடைக்காத குடும்பத் தில் பிறந்து வளர்ந்து படித்தான். தாய் கருவாடு விற்றுக் கிடைக்கும் 20 ரூபாயில் அக்குடும்பம் வாழ்ந்தது.
மேல்நிலைப் பொதுத் தேர்வில் 1108 மதிப்பெண்பெற்றான். ஆனால் பொறியியல் கல்வி படிக்க வசதி யில்லை. அவன் வீட்டில் சித்தாள் வேலைக் குப் போகச்சொன்னார்கள். இந்நிலையில் குமுதம் வார இதழ் தந்த உதவியால் அவன் பொறியியல் படிக்கிறான்.
பிஞ்சுகள் இதை உணரவேண்டும்; உள்ளத்தில் கொள்ள வேண்டும்; பசி யோடும் பட்டினியோடும், மாற்று ஆடை இல்லாமல், படித்து 1108 மதிப்பெண் வாங்கி யுள்ளான் ஒரு மாணவன் என்றால், நமக்கு வீட்டில் எல்லா வசதியும் செய்து கொடுத்து,
பள்ளிக்கு அனுப்பும் போது நாம் எவ்வளவு பொறுப்போடு படித்து, நல்ல ஒழுக்கங்களைப் பின்பற்றி, பல திறமைகளை வளர்த்து, வீட்டுக்கும் நாட்டிற்கும் பயன்பட வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
பெரியவர்களும் நல்ல முன்மாதிரிகளை எடுத்துக்கூறி பிள்ளைகளுக்கு ஊக்கம் தந்து, விழிப்பு தந்து முன்னேற்ற வேண்டும்.
மனிதனின் அடித்தளம் பிள்ளைப்பருவம். அது சரியாக அமைந்தால் வாழ்வு வளம் படும். இதை பிஞ்சுகள் மனதில் கொண்டு, கற்கும் காலத்தில் தீயவை விலக்கி, நல்லவை சேர்த்து, வல்லமையும், பகுத்தறிவும் பெருக்கி, வளமான, நலமான சிறப்பான, பண்பான வாழ்வைப் பெறவேண்டும்!